Ads Area

சம்மாந்துறை நபருக்குச் சொந்தமான எருமை மாடுகளைத் திருடிய இருவருக்கு விளக்கமறியல்.

 பாறுக் ஷிஹான்.


எருமை மாடுகளைத்திருடிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதான இரு சந்தேகநபர்களையும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 19ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.


சம்மாந்துறை பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.என்.நிசாந்த பிரதீப் குமாரவின் ஆலோசனையின் பேரில், பெருங்குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் கே.பி.எல். லக்சான் சமீர தலைமையிலான பொலிஸ் குழுவினரால் கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களும், அவர்களிடமிருந்து மீட்கப்பட்ட எருமை மாடுகள் உள்ளிட்ட சான்றுப்பொருட்களுடன் நேற்று (05) சம்மாந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது, அவர்களை எதிர்வரும் 19ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.


சம்மாந்துறைப்பகுதியில் காணாமற்போனதாக முறைப்பாடு செய்யப்பட்ட 12 எருமை மாடுகளில் 7 மாடுகள் மருதமுனையிலிருந்து மீட்கப்பட்டுள்ளதுடன், இச்சம்பவம் தொடர்பில் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.


சம்மாந்துறையைச்சேர்ந்த நபருக்கு சொந்தமான குறித்த 12 எருமை மாடுகளும் கடந்த செப்டெம்பர் 30ம் திகதி காணாமற்போனதாகச் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.


இம்முறைப்பாட்டின் அடிப்படையில் சம்மாந்துறை பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில், காணாமற்போனதாகத் தெரிவிக்கப்பட்ட எருமை மாடுகள் மருதமுனைப் பகுதியில் இருப்பதாக பொலிஸாருக்கு இரகசியத் தகவல் கிடைத்துள்ளது.


இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், 7 எருமை மாடுகளை மீட்டதுடன், இச்சம்பவத்துடன் தொடர்புடைய மருதமுனையைச்சேர்ந்த 42 வயதுடைய சந்தேக நபரைக்கைது செய்தனர்.


கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணைகளின் அடிப்படையில், இத்திருட்டுச் சம்பவத்திற்கு உடந்தையாக செயற்பட்ட சம்மாந்துறையைச்சேர்ந்த 53 வயதுடைய மற்றுமொரு சந்தேகநபரும் பொலிஸாரால்  கைது செய்யப்பட்டார்.


சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய மாடுகளை மீட்கும் நடவடிக்கைகளுடன், கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களிடமும் சம்மாந்துறைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.


மேலும், கிழக்கு மாகாணத்துக்குப்பொறுப்பான சிரேஷ்ட பிரதிப்பொலிஸ் மாஅதிபர் மகேஷ் சேனரத்னவின் பணிப்புரையின் பேரிலும், அம்பாறை மாவட்ட பிரதிப்பொலிஸ் மாஅதிபர் சுஜித் வேதமுல்லவின் உத்தரவின் பேரிலும் அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராய்ச்சியின் வழிநடத்தலிலும், கல்முனை பிராந்திய உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் இப்னு அசாரின் நெறிப்படுத்தலிலும் பொலிஸ் குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe