இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சனத் ஜெயசூரிய, சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை நாட்டைச் சேர்ந்த சிவராச அனோஜுக்காக மனிதாபிமான அடிப்படையில் பொதுமன்னிப்பு வழங்குமாறு சவூதி அரேபிய அரசாங்கத்திற்கு வெளிப்படையாக கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் தனது சமூக வலைதளப் பதிவில் தெரிவித்த முக்கிய விவரங்கள்:
மத, இன வேறுபாடின்றி ஒற்றுமை: இலங்கை மக்கள் மதம் அல்லது இனம் கடந்து இந்த மனிதாபிமான கோரிக்கைக்கு ஆதரவாக ஒன்றுபட்டு நிற்பதாக ஜெயசூரிய குறிப்பிட்டுள்ளார்.
மன்னிக்க வெளிப்படையான வேண்டுகோள்: "இலங்கையர்களாகிய நாம் மதம், இனம் கடந்து ஒன்றிணைந்து நிற்கிறோம். எமது சக குடிமகனான சிவராச அனோஜுக்கு மனிதாபிமான அடிப்படையில் கருணை காட்டி மன்னிப்பு வழங்குமாறு சவூதி அரேபியாவை பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
அதிகாரப்பூர்வ குறிப்பு: தனது பதிவில் சவூதி அரேபிய வெளியுறவு அமைச்சர் இளவரசர் பைசல் பின் பர்ஹான் மற்றும் அந்நாட்டு வெளியுறவு அமைச்சகத்தையும் டேக் (Tag) செய்துள்ளார்.
வழக்கின் பின்னணி:
கல்முனையைச் சேர்ந்த இலங்கை புலம்பெயர் தொழிலாளியான சிவராச அனோஜ், இஸ்லாத்தை அவமதிக்கும் வகையில் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளார்.
இந்தத் தண்டனைக்கு எதிராக சவூதி வழக்கறிஞர்களுடன் இணைந்து இலங்கை சட்டக் குழுவினர் போராடி வருவதுடன், சவூதி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், இலங்கை அரசும் இதற்கான ராஜதந்திர முயற்சிகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.
செய்தி மூலம் - https://www.newswire.lk
தமிழில் - சம்மாந்துறை24

