Ads Area

சிவராசாவிற்கும் அவருடன் ஒரே அறையிலிருந்த மற்றொரு கைதிக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் கை கலப்பாக மாறியது : நாடாளுமன்றத்தில் அமைச்சர் விஜித ஹேரத் தகவல்.

சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை பிரஜையான அனோஜன் சிவராசாவை மீட்கும் பொருட்டு, இலங்கை அரசாங்கம் தனது சட்ட நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. இது தொடர்பான மேல்முறையீட்டை சவுதியின் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதற்காக, இலங்கையின் சட்டக் குழுவொன்று தற்போது சவுதி அரேபியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.


இது குறித்து அமைச்சர் விஜித ஹேரத் மேலும் தெரிவிக்கையில்:


மேல்முறையீட்டுக்கான காலக்கெடு: இந்த மேல்முறையீட்டை தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் அக்டோபர் 17 ஆகும். சவுதி சட்ட நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றி வரும் இலங்கையின் சட்டக் குழு, விரைவில் இந்த மனுவைத் தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.


ஒருங்கிணைந்த நடவடிக்கைகள்: இலங்கையின் சட்ட வல்லுநர்கள் மற்றும் சவுதி சட்ட ஆலோசகர்கள் இணைந்தே இந்த மனுவை தயார் செய்து வருகின்றனர். அதேநேரம் வெளிவிவகார அமைச்சு, ரியாத்தில் உள்ள இலங்கைத் தூதரகம், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் ஆகியன சிவராசாவிற்குத் தேவையான சட்ட மற்றும் தூதரக உதவிகளை வழங்க ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன.


கருணை மனு மற்றும் தூதரக முயற்சிகள்: நீதிமன்ற வழக்கு நடவடிக்கைகள் முழுமையாக நிறைவடைந்த பின்னரே, தண்டனை குறைப்பு அல்லது கருணை மனு தொடர்பான தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தைகள் தொடங்கும். வழக்கு உயர் நீதிமன்றத்தின் பரிசீலனையில் இருக்கும் வரை தலையீடுகளை ஆதரிக்க முடியாது எனவும், நீதிமன்ற நடவடிக்கைகள் முடிவடைந்த பின்னரே கருணை கோரும் தூதரக முயற்சிகளை மேற்கொள்ள முடியும் எனவும் சவுதி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


சிறையில் தாக்குதல் சம்பவம்: சிவராசா சிறையில் தாக்கப்பட்டதாக வெளியான தகவல்கள் குறித்து அக்டோபர் 6 ஆம் திகதி இலங்கை தூதரக அதிகாரிகள் சிறைச்சாலைக்குச் சென்று விசாரணை நடத்தினர். அங்கிருந்த சிறை அத்தியாட்சகர் மற்றும் மருத்துவரைச் சந்தித்துப் பேசியதில், சிவராசாவிற்கும் அவருடன் ஒரே அறையிலிருந்த மற்றொரு கைதிக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் கை கலப்பாக மாறியது தெரியவந்தது.


காயங்கள் குறித்த தகவல்:  இச்சம்பவத்தில் சிவராசாவின் முகத்தில் கறாண்டிய காயங்களும், நகக் கீறல்களும் மட்டுமே ஏற்பட்டுள்ளதாகவும், கத்தி அல்லது எந்தவொரு கூர்மையான ஆயுதங்களும் பயன்படுத்தப்படவில்லை என்றும் சிறை நிர்வாகமும் மருத்துவரும் தூதரக அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர். இருப்பினும், தூதரக அதிகாரிகள் சிவராசாவை நேரில் சந்திக்க சவுதி அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. சவுதி அதிகாரிகள் வழங்கிய தகவல்களின் அடிப்படையிலேயே இத்தகவல்கள் பெறப்பட்டுள்ளன.


பாதுகாப்பு நடவடிக்கைகள்: சிவராசாவின் உயிருக்கு தற்போதைக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என்றும், அவரது பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அவர் வேறு அறைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் சிறைத்துறை உறுதி அளித்துள்ளது.


சிவராசாவிற்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்து வரும் குற்றச்சாட்டுகள் குறித்துப் பேசிய அமைச்சர், உறுதிப்படுத்தப்படாத தகவல்களைப் பரப்புவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டார். சவுதி அதிகாரப்பூர்வ தகவல்களின் அடிப்படையிலேயே இலங்கை அரசு செயல்பட்டு வருவதாகவும், சவுதி அரேபியாவின் சட்டக் கட்டமைப்பிற்குள் இருந்து சிவராசாவிற்கு நிவாரணம் பெற சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு தொடர்ந்து மேற்கொள்ளும் என்றும் அவர் வலியுறுத்தினார்.


செய்தி மூலம் - https://www.newswire.lk

தமிழில் - சம்மாந்துறை24




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe