Ads Area

மக்கள் சந்திப்பில் எம்.ஐ.எம். றிஸ்விகான்: பிரதேச சபையின் 16வது கூட்டத் தொடருக்கு முன் மக்களின் தேவைகள் குறித்து கலந்துரையாடல்!

சம்மாந்துறை அன்சார்.


அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரிஷாத் பதியுத்தீன் அவர்களுக்கு சஹ்ரான் யார் என்றே தெரியாது என்றும், சஹ்ரானை அவர் சந்தித்ததோ அல்லது அவருடன் பேசியதோ கிடையாது என்றும், சஹ்ரானுடன் தன்னை தொடர்புபடுத்தி முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் அபாண்டமானவை என்றும் கௌரவ தலைவர் ரிஷாத் பதியுத்தீன் அவர்கள் ஊடக சந்திப்பு ஒன்றில் நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்தியுள்ளார் என  சம்மாந்துறைப் பிரதேச சபையின் வீரமுனை வட்டார உறுப்பினர் எம்.ஐ. எம். றிஸ்விகான் தெரிவித்துள்ளார்.


எதிர்வரும் 2026 ஒக்டோபர் 15ஆம் திகதி நடைபெறவுள்ள சம்மாந்துறைப் பிரதேச சபையின் 16ஆவது சபை அமர்வுக்கு முன்னதாக, தனக்கு வாக்களித்த வட்டார மக்களுடனான விசேட கலந்துரையாடல் ஒன்றை பிரதேச சபை உறுப்பினர் எம்.ஐ. எம். றிஸ்விகான் ஏற்பாடு செய்திருந்தார்.


அவரது இல்லத்தில் 2026 ஒக்டோபர் 6ஆம் திகதி இரவு நடைபெற்ற இக்கலந்துரையாடல் நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், இலங்கையில் வாழும் முஸ்லிம் சமூகத்திற்கு மாத்திரமன்றி, ஏனைய சமூகங்களுக்குமான உரிமைக் குரலாக கௌரவ தலைவர் ரிஷாத் பதியுத்தீன் விளங்கி வருவதாகக் குறிப்பிட்டார்.


அத்துடன், அவரது அரசியல் குரலை நசுக்கும் நோக்கில் சிலர் செயற்பட்டு வருவதாகவும், இவ்விடயத்தில் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் றிஸ்விகான் தெரிவித்தார்.


மேலும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினால் நாடளாவிய ரீதியில் சாதாரண தரப் பரீட்சையில் 9A சித்திகளையும், உயர்தரப் பரீட்சையில் 3A சித்திகளையும் பெற்ற மாணவர்களையும் அவர்களது பெற்றோர்களையும் கௌரவிக்கும் நிகழ்வுகள் அகில இலங்கை மக்கள் காங்ரஸ் கட்சியின் தலைவர் கௌரவ ரிஷாத் பதியுத்தீன் அவர்களால் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.


அதன் தொடர்ச்சியாக, குறித்த கௌரவிப்பு நிகழ்வு இம்மாதம் 18ம் திகதி சம்மாந்துறையிலும் நடைபெறவுள்ளதாகவும், இதில் அனைவரும் கலந்து கொள்ளுமாறும் அவர் அழைப்பு விடுத்தார்.


இந்நிகழ்வில் வீரமுனை வட்டாரத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.












Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe