Ads Area

கோடை காலத்தில் உங்கள் கார்களை பராமரிக்க பயனுள்ள சில டிப்ஸ்கள்.


தகவலுக்கு நன்றி - சரவணா.

கோடை காலத்தை வெல்வதற்கு நம் உடலையும், மனதையும் குளிர்ச்சியாக வைத்துக் கொள்வதற்கு எந்தளவு அக்கறை எடுத்துக் கொள்கிறோமோ, அதே அளவு அக்கறையை நமது காரின் மீதும் வைக்க வேண்டியது அவசியம். மேலும், கோடை காலத்தில்தான் அதிக வெளியூர் பயணங்கள் மற்றும் சுற்றுலா செல்லும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இந்த நிலையில், கோடை காலத்தில் காரை எவ்வாறெல்லாம் பராமரித்தால் சிறப்பானது என்பதை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.


முதல் வேலை. 


காரின் மதிப்பில் பெரும் பங்கு வகிப்பது பெயிண்ட்டும், அதன் பளபளப்பும்தான். ஆனால், இன்று பலர் காரை சாலையிலேயே நிறுத்தி வைப்பதால், சூரிய ஒளி, தூசி போன்றவற்றால் பெயிண்ட்டின் பளபளப்பு குறையும் என்பதோடு, நாள் ஆக ஆக பெயிண்ட் கொஞ்சம் கொஞ்சமாக அதன் தரத்தை இழந்துவிடும். சிலவேளைகளில் பெயிண்ட் உரிந்துவிடும் அபாயமும் இருக்கிறது. எனவே, தரமான கார் கவரை வாங்கி மூடி வைப்பதுடன், சிரமம் பாராமல் பகலில் நிழலான இடத்தில் நிறுத்தி வைப்பதும் அவசியம்.


இன்டீரியர். 


கார் ஜன்னல்கள் மூடிய நிலையில் வெயிலில் நிறுத்தியிருக்கும்போது உட்புறத்தில் அபரிமிதமான வெப்பம் உண்டாகும். இதனால், டேஷ்போர்டு, இருக்கைகள், கண்ணாடிகளில் பாதிப்பு ஏற்படும். மேலும், காரின் தொழில்நுட்பங்களின் செயல்பாடுகளிலும் மாறுதல்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. இதற்கும் நிழலில் நிறுத்துவதே தீர்வு. இதற்கு சன் ஸ்கீரீன் வாங்கி ஜன்னல் மற்றும் விண்ட் ஸ்கிரீனில் வாங்கி பொருத்துவதும், தெர்மாகூல் அட்டையை உட்புறத்தில் மறைவாக வைப்பதும் பயன்தரும். அத்துடன், நிழலில் நிறுத்துவதற்கும் மறவாதீர்.


ஏர் கன்டிஷன்.(AC)


நாட்டில் வெயில் வறுத்தெடுக்க துவங்கியிருக்கும் நிலையில், ஏசி இல்லாமல் கார் பயணத்தை நினைத்து பார்க்க முடியாது. எனவே, கோடை கால பராமரிப்பில் முக்கியமானது, அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் மையத்தில் கொடுத்து ஏசி.,யை சோதித்துக் கொள்ளவும். அத்துடன், ஏசி.,யை சுத்தம் செய்வதுடன், ஏசி மெஷினில் கேஸ் குறைவாக இருந்தாலும் குளிர்ச்சி இருக்காது. எனவே, உடனடியாக நிரப்பிவிடவும்.


கூலண்ட் அளவு. 


கோடை காலத்தில் வழக்கத்தைவிட எஞ்சின் விரைவாக சூடாகும். மேலும், நீண்ட நேர பயணங்களின்போது அதிகப்படியான சூடு காரணமாக, எஞ்சினில் பழுதும், இதர பிரச்னைகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே, கூலண்ட் சரியான அளவு உள்ளதா என்பதை சோதிப்பதுடன், குறைவாக இருந்தால் டாப் அப் செய்து விடுங்கள். அத்துடன் ரேடியேட்டரை சுத்தம் செய்வதும் அவசியம்.


எஞ்சின் ஓயில் (Oil)


எஞ்சினை பாதுகாப்பதில் முக்கியமானது எஞ்சின் ஆயில். எனவே, காரை சர்வீஸ் விடும்போது, கண்டிப்பாக எஞ்சினை ஆயிலை சோதித்து பார்க்கச் சொல்லுங்கள். ஆயில் அளவுடன் அதன் அடர்த்தியையும் கவனிப்பது அவசியம். வெளியில் ஆயில் மாற்றும்போது, உங்கள் காருக்கு பரிந்துரைக்கப்பட்ட தரமான எஞ்சின் ஆயிலையே பயன்படுத்தவும்.


பேட்டரி. 


பேட்டரியின் மின் முனைகள் சரியாக இருக்கிறதா என்பதை பார்த்துவிடவும். துரு பிடித்திருந்தால், அதனை சுத்தப்படுத்திவிடுவதுடன், ஒயரிங் சரியாக உள்ளதா என்பதையும் செக்கப் செய்யவும். பழைய கார்களில் பேட்டரி சரியில்லையெனில், மாற்றிவிடுங்கள்.


டயர். 


தேய்மானம் கொண்ட டயர்கள் இருந்தால் உடனடியாக மாற்றிவிடுங்கள். ஏனெனில், வெயில் காலத்தில் கார் டயர் அதிகம் சூடாகி, வெடிக்கும் ஆபத்து இருக்கிறது. எனவே, போதுமான ட்ரெட் இல்லாத தோசைக்கல் டயர்களை உடனடியாக மாற்றிவிடவும். அத்துடன் காரின் பேலன்ஸ், மைலேஜ் போன்றவற்றுடன் நம் உயிரை பத்திரப்படுத்துவதிலும் டயரின் பங்கு மிக முக்கியமானது.


விண்ட் ஷீல்டு. 

தொடர்ந்து வெயிலில் நிறுத்தியிருக்கும்போது காரின் விண்ட்ஷீல்டில் கீறல்கள் அல்லது வெடிப்புகள் விழும் வாய்ப்புள்ளது. விண்ட்ஷீல்டு விலை மிக அதிகம் என்பதுடன், ஆர்டர் செய்தால் உடனடியாக கிடைப்பதும் கடினம். எனவே, இதனை தவிர்ப்பதற்கு காரை நிழலான இடத்தில் நிறுத்தி, தெர்மாகூல் அட்டையை பொருத்தி வைப்பது நல்லது.


வெளியூர் அல்லது சுற்றுலா கிளம்புவதற்கு முன் காரை சர்வீஸ் மையங்களில் கொடுத்து சிறப்பான பரிசோதனை செய்துகொள்ளுங்கள். 



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe