இலங்கையில் காணப்படும் முஸ்லிம் ஊர்களுள் சனத்தொகையாலும் விஸ்தீரணத்தாலும் வரலாற்றுப் புராதனத் தன்மையாலும் உன்னதமானதும் முக்கியத்துவமானதுமான ஓர் கிராமம் அல்லது நகரம் சம்மாந்துறையாகும்.
இன்று அபிவிருத்தி மற்றும் நகராக்கக் தன்மைகளில் சில பிரதேச வாதிகளின் மூக்கணாங் கயிற்றுக்குள் சிக்கி இது பின்னடைந்து காணப்படுகின்றது. 1941ஆம் ஆண்டிலேயே பட்டினசபையாக இருந்த இவ்வூர் பிறத்தியாரின் அரசியல் உயர்வுகளுக்கு முட்டுக்கொடுத்து முட்டுக்கொடுத்து இன்னும் தொடர்ந்தும் பட்டின சiயாகவும் இல்லாது கிராமசபை அந்தஸ்துக்கு தரம் இறக்கப்பட்டுள்ளது. ஆனால் கிராம சபையாக இருந்து பிரதேச சபையாக்கப்பட்ட ஊர்கள் மாநகர சபையாக மாறியிருப்பதும் அப்படியான கைங்கரியத்தைச் செய்த பிததேச வாதிகளை ஆள் மாறி ஆள் முதுகு நிறையச் சுமப்பதும் இவ்வூரின் முரண் நகையாகும்.
எனினும் தமது ஊரின் அபிவிருத்திக்காக ஒட்டுமொத்தமான இலங்கை முஸ்லிம் சமுகத்தையும் அடகு வைக்கவும் அதற்கு பரிசாக போரினவாதத்தின் கடைவாய்ப்பற்களின் ஊடாக வழிந்த வீணிகளை அபிவிருத்தி என தம்பட்டமடித்துக் கொள்ளவும் தயாரில்லாத சமூகப் பொறுப்பு வாய்ந்த முஸ்லிம் பிரஜைகளைக் கொண்ட ஊராக இவ்வூர் இலங்கை வாழ் அனைத்து முஸ்லிம் களாலும் கணிக்கப்படுகின்றது.
புராதனமான வரலாற்று ஆவணமான குளக்கோட்டன் கல்வெட்டு முதல் முதலியார் எஸ்.ஓ. கனகரத்தினத்தின் ஆழழெபசயிhள ழக டீயவவiஉயடழய வரை 1632 ஆண்டு முதலாக மிகத் துல்லியமான எழுதப்பட்ட சான்றாதாரம் இந்த ஊரின் வரலாற்றுக்கு உள்ளது. துறைமுக நகரமாக இவ்வூரிலேயே ஒல்லாந்தர் முதன் முதலாக கால் பதித்தனர் என்பதும் இதுவே புராதன மட்டக்களப்பு நகரம் என்பதும் இவ்வூரின் மங்காப் புகழ் எனலாம்.
1972ஆம் ஆண்டின் அரசியலமைப்புச் சட்டம் அறிமுகப்படுத்தும் வரை ஸ்ரீ தலதா மாளிகையின் பிரதம தலைமையான தியவதன நிலமேயை தீர்மானிக்கும் தேர்தலில் வாக்களிக்கும் உரிமையை சம்மாந்துறை உதவி அரசாங்க அதிபர் கொண்டிருந்தார் என்பதே அதன் வரலாற்றுச் சிறப்புக்கும் கீர்த்திக்கும் தேசிய முக்கியத்துவத்துக்கும் சான்று பகரும் வெளிப்படையான ஆதாரங்களாகும்.
பிரித்தானிய வல்லரசுக்கு எதிராக சுதந்திரத்துக்காகப் போராடியமையால் இவ்வல்லரசின் துரோகியாக பிரித்தானிய குடியேற்றவாத அரச வர்த்தனிப் பத்திரிகையின் மூலம் பிரகடனப்படுத்தப்பட்ட விடுதலைப் போராளி முகாந்திரம் அபூபக்கர் ஈஸா இம்மண்ணின் மைந்தன் எனும்போது அடைகின்ற வராலற்றுக் குதூகலத்துக்கு இணையான ஓர் அம்சத்தை நாம் கண்டுவிட முடியாது.
அன்னாரின் நேரிடையான இரத்தத்தின் இரத்தங்களாக நாம் நம்முடைய தலைவர் அஷ்ரஃப் அவர்களையும் அவரின் கொள்கைளில் இணைந்து போராடியமைக்காக தனது இன்னுயிரை ஈந்த அன்புக்குரிய அஷ்ஷஹீத் முஹம்மத் யூனூஸ் முஹம்மத் மன்சூர் அவர்களையும் காண்கின்றோம்.
அரசியல் முகவரியற்று வாளாவிருந்த இலங்கை முஸ்லிம்களுக்கு அவர்களின் கீர்த்தியையும் வீரத்தையும் எடுத்துக்காட்டி ஒற்றுமைப்படுத்தி அவர்களுக்கு விடுதலையைப் பெற்றுக்கொடுத்த தலைவர் அஷ்ரஃப் இங்குள்ள வீரத்தாயின் புதல்வர் என்பதை விடவும் வேறு என்ன பெருமை இந்த மண்ணுக்கு அவசியமானது?
அதனைப்போலவே பேரினவாதத்தின் இயங்கு பொறி இவ்வூரின் மேற்குத் திசையிலிருந்து குள்ள நரியாக இவ்வூர் முஸ்லிம்களை அசையவிடாது நெருக்கியடித்துக் கொண்டிருந்தபோது அதற்கு வீரியமான விடுதலை உணர்வை அஷ்ரஃப் வித்திட, அதற்கான அளைஞர் அணியைத் திரட்டியவர்தான் இந்த மா மனிதர் மன்சூர்.
II
இத்தகைய சிறப்புக்கும் கீர்த்திக்கும் உரித்தான மண்ணில் ஹாஜியார் ஆலிம் அவர்களின் சகோதரர் என்ற பாரம்பரியப் பெருமை மிக்க மர்ஹூம் முஹம்மத் யூனூஸ் அவர்களுக்கும் அலியார் பாத்திமா அவர்களுக்கும் மூன்றாவது புதல்வராக 1962 பெப்ரவரி முதலாம் திகதியில் மன்சூர் பிறந்தார்.
தன்னுடைய ஆரம்பக் கல்வியை சம்மாந்துறை மத்திய கல்லூரியிலும் பின்னர் படவரைஞர் தொழிற் துறைக்கான தேசிய டிப்ளோமா கல்வியை சம்மாந்துறை தொழில்நுட்பக் கல்லூரியிலும் கற்றுத் தேறினார்.
மன்சூர் அவர்களும் அவரது குழுவினரும் தொழில் நுட்பக் கல்லூரியில் பயின்று கொண்டிருந்த காலமே இலங்கையின் தேசிய இனப் பிரச்சினையானது சூல்கொண்டிருந்த காலக் கட்டமாகும். இலங்கைத் தமிழ் மக்களுக்கு எதிராக பேரினவாதம் தன் ஆக்கிமிப்புக் கரங்களை குரூரமாக அழுத்தியபோது அதற்கு எதிரான போராட்டமானது சாத்வீகத்திலிருந்து முற்று முழுவதுமாக மடைமாற்றம் கண்ட காலக் கட்டமாகும்.
அக்கால கட்டத்தில் அரசியலானது தொழில் வழங்குவதில் மட்டுமன்றி தொழில் நுட்பக் கல்லூரிக்கு மாணவர் அனுமதி வழங்குவது வரை வியாபித்திருந்தது. மன்சூரின் முதலாவது போராட்டம் இதற்கு எதிராகவே தோற்றம் பெற்றது.
அப்போது சம்மாந்துறை தொழில் நுட்பக் கல்லூரியில் பட வரைஞருக்கான தேசிய உயர் டிப்ளோமா அனுமதி பெறுவதற்கு கல்வித் தகைமை மட்டுமன்றி உள்ளுர் அரசியல் வாதியின் கடிதமும் தேவைப்பட்டது. அந்தக் கடிதத்தைப் பெறாதோருக்கு இவ்வனுமதி தரப்பட மாட்டாது என்ற நிலை ஏற்பட்டபோது மன்சூர் கொதித்தெழுந்து ஒரு போராட்டத்தை நடாத்தினார். இளைஞர்களின் இப்போராட்டம் உக்கிரமடைய கல்லூரி நிர்வாகம் மசிந்து கொடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாயிற்று. இறுதியில் நிரப்பப்படாமல் காலியாக இருந்த இடங்களுக்கு அரசியல் வாதியின் கடிதம் இன்றியே மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர். இது மன்சூரின் போராட்டத்துக்குக் கிடைத்த முதலாவது வெற்றியாகும்.
அது மட்டுமன்றி அவர் சம்மாந்துறை தொழில் நுட்பக் கல்லூரியில் கற்றுக் கொண்டிருந்த காலத்தில் 1985ஆம் ஆண்டில் ஒரு மாபெரும் கொள்ளைச் சம்பவம் ஒன்று அப்போதைய புளொட் எனும் இயக்கத்தினால் நடாத்தப்பட்டது. அக்கல்லூரியில் இருந்த மிக அதிக தொகை லேத் மெஷின்களை தங்களின் ஆயுத உற்பத்திக்காக அவ்வியக்கத்தால் கொள்ளையடிக்கப்பட்டது. இது குறிப்பாக இப்பிரதேச மாணவர்களின் தொழில் நுட்பக் கல்வியை பெரிதும் பாதித்தது. இதனை ஆட்சேபித்து அம்பாறை மாவட்டம் அடங்கலாக ஒரு மாபெரிய போராட்டத்தை மன்சூர் முன்னின்று நடாத்தினார். அதற்கு அப்போது சம்மாந்துறையின் வீரம் மிக்க இளம் தலைவராகக் கருதப்பட்ட அஷ்ஷஹீத் முஸ்டாக் அலி முதலியோகளின் ஆதரவைக் கூட மன்சூர் அரசியலுக்கு அப்பால் வென்றெடுத்தார்.
அம்பாறை மாவட்டத்தின் இனத்துவ அரசியல் வரலாற்றைப் பொறுத்த வரை இது பாரிய ஒரு போராட்டமாகவும் முஸ்லிம் இனத்துவ முன்னெடுப்பாகவும் கருதப்படுகின்றது. தமிழ் இளைஞர்களின் ஆயுதப் போராட்ட முன்னெடுப்புக்களை தமிழ் நாடும் இந்தியாவும் தங்கு தடையற்று ஆதரித்த காலத்தில் தொழில் நுட்பக் கல்லூரியின் விலை மதிக்க முடியாத கற்றல் உபகரணத் தொகுதியின் கொள்ளைக்கு எதிரான மன்சூரின் போராட்ட முன்னெடுப்பானது இந்தியாவுக்கே சங்கடத்தை உண்டாக்கிற்று.
அப்போது ஆகாஷவாணியின் இலங்கைக்கான நிருபரும் பிற்காலத்தில் அதன் தவிசாளராகவும் திகழ்ந்த கருப்புசாமி இப்போராட்டத்தின் அடியில் புதைந்துள்ள தொழில் நுட்பக் கல்விக் கல்லூரி மாணவ இளவல்களின் கல்விசார் ஆதங்கத்தை விதந்துரைத்து ஆகாஷவாணிக்கு அறிக்கையிட்டமை அன்றைய காலத்தில் ஏற்பட்ட மாபெரும் சிந்தனை மாற்றமாகும்.
தமிழ் இளைஞர்களின் போராட்டப் பாதையில் புரையோடிப் போயிருந்த துப்பாக்கி ஏந்தியவர்களின் மமதைக்கு முதன் முதலான அறிவார்ந்த விமர்சனமாக இந்தப் போராட்டத்தின் மூலம் விளைந்த இந்த சிந்தனை மாற்றத்தைக் குறிப்பிட முடியும்.
மேலும், சம்மாந்துறை தொழில் நுட்ப கல்லூரிக் காலம்தான் ஸ்ரீ.ல.மு.கா சம்மாந்துறையில் நிறுவன ரீதியாகக் காலூன்றுவதற்கு அடித்தளமாக அமைந்தது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. மன்சூரும் அவரின் சகபாடிகளும் சம்மாந்துறை தொழில் நுட்பக் கல்லூரியில் பட வரைஞர் முதலிய பாட நெறிகளைப் பயின்று கொண்டிருக்கும் காலத்தில் இக்கல்லூரியில் அதிதி விரிவுரையாளர்களாக நமது இப்போதைய செயலாளர் நாயகம் ஹஸன் அலி அவர்களும் கட்டிடக் கலைப் பொறியியலாளர் இஸ்மாயில் அவர்களும் கடமையாற்றிக் கொண்டிருந்தனர்.
தேசிய இனப்பிரச்சினை தமிழ் - முஸ்லிம் கலவரங்களாக மடைமாற்றத்துக்கு உள்ளானபோது அதன் முதலாம் அகதியான தலைவர் அஷ்ரஃப் உடுத்த ஆடையுடன் கொழும்புக்கு ஹிஜரத் சென்று சில காலம் ஏதும் செய்ய முடியால் ஒரு சிந்தனைக் குழப்பத்துக்கு உள்ளாகியிருந்தார். இக்காலத்தில் மீண்டும் ஸ்ரீ ல மு கா வைப் புனரமைப்பது என்ற நிலைமை ஏற்பட்டபோது மேற்படி பொறியியலாளர் இஸ்மாயிலும,; ஹஸன் அலியும் தலைவருக்கு பக்க பலமாயினர்.
அந்த நிலையில் இவர்களின் சிந்தனை மாற்றம் இயல்பாகவே சமூகத்துக்காக தன்னை அர்ப்பணிக்கத் துடி துடித்துக் கொண்டிருந்த மன்சூருக்கும் அவரது போர்க் குணம் மிக்க சகபாடிகளுக்கும் களம் அமைத்துக் கொடுத்தது. அன்றிலிருந்து தான் ஷஹீதாக்கப்படும் வரை அவர் ஒவ்வொரு கணமும் சமூகத்தின் விடுதலைக்காக உழைத்துக் கொண்டிருந்தார்.
இயல்பாகவே மிதவாத சுபாவம் உள்ளவராகக் காணப்பட்ட மிகுந்த ஆத்மீகவாதியான மன்சூர் இஸ்லாத்துக்காகவும் முஸ்லீம்களுக்காகவும் போராடுவதற்காக பின் நிற்கவில்லை. முஸ்லிம்களுக்கான முதன்மையான அரசியல் கட்சியாக முஸ்லிம் காங்கிரசைப் புனரமைப்பதற்காக தலைவர் அஷ்ரஃப் முன் வந்தபோது அவருக்கு முதன் முதலாகப் பக்கபலமாக வந்த ஊர் சம்மாந்துறைதான்.
நிலப் பிரபுத்துவ குணாம்சங்களும் அரசியலில் பாரம்பரிய அம்சங்களுக்கு முதன்மை அளிக்கும் பண்புக்கும் பிரபலாமான சம்மாந்துறை தன் இயல்புகளை முற்றிலும் மாற்றிக் கொண்டு முஸ்லிம்களுக்கான தனியான அரசியல் கட்சி என்ற எண்ணக்கருவுக்குப் பின்னால் அணி திரள்வதற்கு அஷ்ரஃப் அவர்களிடம் இந்த மண் கொண்ட நம்பிக்கை மாத்திரமன்றி மன்சூர் அவர்களின் உழைப்பும் அவரின் சகபாடிகளின் அர்ப்பணிப்புமே காரணம் எனலாம்.
ஸ்ரீ ல மு கா ஓர் அரசியல் இயக்கமாகப் பிரகடனப் படுத்தப் பட்டதன் பின்னர் அது முதன் முதலாக மக்கள் முன்னர் தோன்றியதும் சம்மாந்துறையிலேயாகும். அந்த அளவுக்கு ஸ்ரீ ல மு கா, அஷ்ரஃப், மன்சூர் சம்மாந்துறை என்பன இரண்டறக் கலந்திருந்தனர்.
தலைவர் அஷ்ரஃப் அவர்கள் மன்சூர் மீதும் அவரின் சகபாடிகள் மீதும் அபார நம்பிக்கை கொண்டிருந்தார். ஒரு முறை கட்சியின் கொள்கையில் எந்த ஆர்வமும் இல்லாத, ஆனால் அஷ்ரபுடன் நட்புதலைப் பேணிய அவரின் உறவினர் ஒருவர் தான் சம்மாந்துறையின் அமைப்பாளராக வரவேண்டும் என்பதற்காக தலைவரைப் பற்றி மன்சூர் தப்பாக கூறியதாக ஒரு அபாண்டத்தைக் கூறினார். அதனைக் கேட்ட அஷ்ரஃப் அபாண்டத்தைச் சொல்லிய அந்த நண்பரின் உள்வீட்டுப் பெயரை தனது சுண்டு விரலை நீட்டிக் கொண்டு விழித்து பின்வருமாறு கூறினார். 'மன்சூரிடம் ஒரு கோப்பை நிறைய நஞ்சை ஊற்றிக் கொடுத்து 'மன்சூர் இக்கோப்பை நிறைய நிறைய விஷம் ஊற்றப்பட்டு உள்ளது. இப்போது இந்தக் கணமே இதனை நீர் குடிக்க வேண்டும்' என்று இந்த அஷ்ரஃப் கூறினால் மறு வார்த்தை பேசாது அதைத் தூக்கி மடார் மடார் எனக் குடிக்கக் கூடிய பிள்ளைதான் மன்சூர். அந்த அளவுக்கு அவர் மீது எனக்கு நம்பிக்கையும் என்மீது மன்சூருக்கு விசுவாசமும் உள்ளது' என்று முகத்தில் அடித்தாற்போல் தலைவர் கூறினார். அவர் மீது அபாண்டத்தை சுமத்தியவர் மறு பேச்சுப் பேசாது வெளியேறினார்.
மன்சூர் அவர்களின் தந்தையார் யூனூஸ் ஹாஜியார் கூட இந்தக் கட்சியிடமும் தவைரிடமும் அபார நம்பிக்கையும் ஆர்வமும் கொண்டிருந்தார். அவரின் உறவினர்கள் 'நமது பாட்டன் பூட்டன் பரம்பரையெல்லாம் மரியாதை வைத்திருந்த அரசியலை விட்டு விட்டு, அதேவேளை அரசாங்கத்துக்கே சவால்விட்டு இயங்கிக் கொண்டு துப்பாக்கிகளைத் தோழில் தொங்க விட்டுக் கொண்டு அலைகின்ற புலிகளையும் பகைத்துக் கொண்டு திரிகின்ற இந்த உசைன் விதானையின் மகனின் பின்னால் அலைந்து தொழிலும் எடுக்க முடியால் உயிராபத்தையும் விலைக்கு வாங்கிக் கொண்டு அலைந்து திரிய உன் மகனுக்கு என்ன பைத்தியமா பிடித்திருக்கின்றது' என்று எள்ளி நகையாடினர்.
ஆனால், அந்தத் தியாகத் தந்தை அளித்த பதில் எல்லோரின் குருதியையும் உறைய வைத்திருந்தது. 'எனது எட்டு புத்திரர்களில்; ஒருவரையே இந்த சமூகத்துக்காக உயிர்த்தியாகம் செய்வதற்காக உசைன் விதானையின் மகனின் கையில் பிடித்துக் கொடுத்துள்ளேன்' என்று அவர்களின் முன் வெடுக்கென்று பதில் கூறினார் அந்தத் தியாகத் தந்தை. இவ்வாறு கூறிய அந்தத் தகப்பனின் மனசு நம்மைப்போல் எந்தத் தந்தைக்கு வரும்?
ஸ்ரீ ல மு கா அரியல் கட்சியாக 1986இல் பாஷா வில்லாவில் வைத்து பிரகடனப்படுத்தியாயிற்று. ஆனால் சின்னம் இன்னும் கிடைக்கவில்லை. அதற்கிடையில் அம்பாறை மாவட்டத்தில் பிரதேச சபைத் தேர்தல் பிரகடனப்படுத்தப் பட்டு விட்டது. ஸ்ரீ ல மு கா தராசுச் சின்னத்தில் தேர்தலுக்கு நியமனப் பத்திரத்தை சம்மாந்துறையில் மர்ஹூம் அப்துல் காதர் (சந்தனம் - வட்டைவிதானை) அவர்களின் தலைமையில் தாக்கல் செய்திருந்தது. ஸ்ரீ ல மு கா வின் அமைப்பாளராக மன்சூர் ஏற்கனவே நியமிக்கப்பட்டிருந்தார். புலிகள் இந்த தேர்தலைப் புறக்கணித்தது மட்டுமன்றி முஸ்லீம்கள் உட்பட சிறுபான்மையினர் சகலரையும் எந்தக் கட்சியல்தானும் தேர்லுக்கு நிற்க வேண்டாம் என்ற உத்தரவுடன் ஸ்ரீ ல மு கா அமைப்பாளரான மன்சூர் அவர்களுக்குக் கடிதம் அனுப்பி இருந்தது. அது கவனத்தில் எடுக்கப்படாமல் விடப்பட இரண்டாவதாக எச்சரிக்கும் தோரணையில் மற்றுமொரு கடிதத்தை மன்சூருக்கு புலிகள் அனுப்பி இருந்தனர். அதுவும் மன்சூர் அவர்களால் கருத்திற் கொள்ளப்படாமல் விடப்பட்டமையால் இறுதிக் கடிதமாக மரணதண்டனை நிறைவேற்றப்பட்ட கடிதத்தைப் புலிகள் அவர்களின் மட்டு அம்பாறை மாவட்ட அரசியல் பொறுப்பாளர் பிரான்ஸிஸ் என்பவர் கையொப்பமிட்டு அனுப்பியிருந்தார்.
இறுதியில் வந்த கடிதத்தை தலைவரிடம் காண்பித்தபோது தலைவர் தனக்கு விலாசமிடப்பட்டடிருந்த மற்றொரு கடிதத்தை தன்னுடைய ஷேட் பொக்கற்றிலிருந்தும் எடுத்து நீட்டி 'இது ஷஹீதாவதற்கு விருப்பமானவர்களுக்கு மட்டுமான கட்சி. அப்படி விருப்பமுள்ளவர்கள மட்டும் உட்காhந்து இருக்குமாறு வேட்பாளர்களிடம் கூறுங்கள் மன்சூர்' என்று தலைவர் கூறியபோது அவ்வாறே அவர் தலைமைத்துவக் கட்டுப்பாட்டிற்குக் கீழ்ப்படிய தன்னுடைய சகபாடிகளுக்கும் பயிற்சி அளித்தார்.
இவ்வாறுதான் இந்திய அமைதிப்படையினரின் வருகையின் பின்னர் வடக்கு கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் பிரகடனப்படுத்தப்பட்டபோதும் நிகழ்ந்தது. சம்மாந்துறை ஊரில் தலைமைத்துவப் பண்புகள் நிறைந்து காணப்பட்ட பலர் உயிரின் மீதான அச்சம் காரணமாக மாகாண சபைத் தேர்தலுக்கு முகங் கொடுக்கப் பின்னின்றனர். சம்மாந்துறைக்கு இரண்டு ஆசனங்கள் இச்சபையில் ஒதுக்கப்பட்டிருந்த போதிலும் ஓர் ஆசனத்துக்கு சகோதரர் முனாஸ் காரியப்பர் முன்வந்தார். தலைவர் அன்று இக்கட்டுரை ஆசிரியரிடம் றால உயn'வ லழர pடயல வாளை யஉவiஎந சழடந என்று மிக விருப்பத்துடன் வேண்டிக் கொண்டாலும் அவர் கூட அப்போதிருந்த உயிராபத்தையே மிகவும் கருத்திற் கொண்டார். ஆனால் மன்சூர் யாருக்கும் விருப்பம் இல்லையானால் தான் அதற்கு முன்வருவதாக தன்னுடைய துணிச்சலை வெளிக்காட்டினார். தலைவர் உட்பட பலர் அப்போது மெய் சிலிர்ந்து போயினர்.
மாகாண சபை உருவாகியதன் பின்னர் நுPசுடுகு இயக்கத்தினர் இப்பகுதியின் முழுக் கட்டுப்பாட்டையும் வைத்திருந்தனர். தமிழ்ப் பிரதேசங்களில் வெளிப்படையாகவும் முஸ்லிம் பிரதேசங்களில் ஒழிந்து ஒழிந்தும் சட்டத்தைக் கையிலெடுத்த இவ்வியக்கம் வடக்குக் கிழக்கு மாகாண சபையின் அதிகாரம் தங்களின் கைக்குக் கிடைத்த பின்னர் இந்திய அமைதிப் படையினரின் துப்பாக்கி அதிகாரத்தையும் கையிலெடுத்தக் கொண்டு தங்கள் கோடு கச்சேரியை முஸ்லிம் பிரதேசங்களுக்கும் விஸ்தரித்தனர். பல முஸ்லிம்களும் தங்களின் பிரச்சினைகளை இலகுவாக தங்களுக்கு சாதகமாக தீர்ப்பைப் பெற்றுக் கொள்ள அவர்களை நாடிச் செல்லலாயினர். இப்படியான ஒரு சந்தர்ப்பம் உருவாகிக் கொண்டு வருவதை மன்சூர் அவர்கள் உணர்வு பூர்வமாக எதிர்த்தார்.
இந்தப் பிரச்சினையை முளையிலேயே கிள்ளி எறிந்து விடுவதற்கான நடவடிக்கையை அவர் உயர் மட்டங்களுடன் தொடர்பு கொண்டு துடைத்தெறிந்தார். இதனால் அந்த நுPசுடுகு உள்ளுர்க் காரர்களின் பலமான எதிர்ப்பை மன்சூர் சம்பாதிக்க வேண்டியிருந்தது. அதற்குப் பின்னர் சம்மாந்துறையில் ஹொண்டா றாசீக் அவர்களின் கட்டிடத்தில் ஸ்ரீ ல மு கா வின் அலுவகம் ஒன்று திறக்கப்பட்டு முஸ்லிம்களின் முறைப்பாடுகள் தொடர்பான விசாரணைகளைத் தொடங்கி வைத்தார். இந்த அலுவலகத்துக்கு எம்.எஸ். அமீர் அலி அலுவகப் பொறுப்பாளராகவும் வை.எல்.எம் பௌஸ் உதவியாளர்களாகவும் மன்சூர் அவர்களால் நியமிக்கப்பட்டனர்.
தலைவர் அவர்களதும் கட்சியினதும் சம்மாந்துறை மக்களினதும் மனங்களை வென்ற நமது மன்சூர் அவர்களுக்கு இந்திய அமைதிப்ப படையின் வெளிச் செல்கையும் புலிகளின் அதிகாரப் பிரவேசமும் மிகுந்த சோதனைக் காலமாக அமைந்திருந்தது. அப்போது முஸ்லிம் களின் கரங்களில் மாகாண சபை அதிகாரம் இருப்பதையும் அவர்களின் பாதுகாப்பிற்காக இந்திய அமைதிப்படை செய்திருந்த ஏற்பாடுகளையும் புலிகள் வன்மையாக எதிர்த்தனர்.
அந்தக் கால கட்டத்துள் சம்மாந்துறை மண்ணில் நிகழ்த்தப்பட்ட கோர மரணங்களின் பட்டியலை அனுப்பிவைக்குமாறு தலைமைப் பீடம் மன்சூருக்கு அறிவுறுத்தி இருந்தது. அந்தப் பட்டியலைத் தயாரித்து 29.01.1990 அன்றிவு சுமார் 10.30 மணியளவில் அதன் அடியில் ஒப்பமிடும்போது அடுத்தது யாரோ என்று இக்கட்டுரை ஆசிரியரிடம் கூறியவராவே மன்சூர் ஒப்பத்தை இட்டுள்ளார். காலம் அடுத்த பெயரை அவரின் பெயராகக் குறித்திருக்கும் என்று மன்சூர் எதிர் பார்த்திருக்க மாட்டார்.
ஈவிரக்கம் இல்லாது புலிகள் மேற்கொண்ட உக்கிரமான நடவடிக்கையில் - 30.01.1990 அன்று காலை 9.45 மணியளவில் ஓட ஓட விரட்டி புலிகள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் காலில் வெடி பட்டு கீழே விழுந்த மன்சூர் அவர்களை கொண்டு சென்ற புலிகள் அவரின் ஜனாஸாவைக் கூட வழங்க வில்லை என்பது தமிழ் முஸ்லிம் இனத்துவ அரசியல் வரலாற்றில் அழிக்க முடியாத ஒரு கறை எனலாம்.
ஈவிரக்கம் இல்லாது புலிகள் மேற்கொண்ட உக்கிரமான நடவடிக்கையில் - 30.01.1990 அன்று காலை 9.45 மணியளவில் ஓட ஓட விரட்டி புலிகள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் காலில் வெடி பட்டு கீழே விழுந்த மன்சூர் அவர்களை கொண்டு சென்ற புலிகள் அவரின் ஜனாஸாவைக் கூட வழங்க வில்லை என்பது தமிழ் முஸ்லிம் இனத்துவ அரசியல் வரலாற்றில் அழிக்க முடியாத ஒரு கறை எனலாம்.
ஆனால, மன்சூர் அவர்கள் உயிர்பிழைத்திருக்கக் கூடும் என்ற ஒரு கருத்தும் நீண்டகாலமாக இருந்து வந்துள்ளது. ஏனெனில் சந்திரிக்கா அரசில் அரசு புலிகள் சமாதானப் பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருந்தபோது புலிகளில் தடுப்புக்காவலில் வன்னியில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சில சிங்கள இனத்தைச் சேர்ந்த பொலீசாரை புலிகள் தங்கள் நல்லெண்ண சமிக்ஞையை அரசுக்குத் தெரியப்படுத்துவதன் நிமித்தமாக விடுதலை செய்தனர். அவர்களில் அம்பாறை மாவட்டத்தின் குக்கிராமத்தைச் சேர்ந்த ஒருவரும் தென்மாகாணத்தைச் சேர்ந்த ஒருவரும் தாங்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த புலிகளின் முகாமில் இவர் காலில் முடவராகவும் அங்கு கற்பிக்கும் வேலையில் ஈடுபட்டிருந்ததாகவும் தாங்கள் கண்டதாக இன்றைய முக்கிய புள்ளிகளுள் ஒருவரான இவரின் உறவினரிடம் தெரிவித்துள்ளனர். இதனால் இவ்விடயம் ஸ்ரீ.ல.மு.காவும் புலிகளின் தலைமையும் சந்தித்தபோது பிரஸ்தாபிக்கப் பட்டதாகவும் அப்படி யாரும் இல்லை என்பதாக பதில் கூறப்பட்டதாகவும் அறியக்கிடைத்தது.
ஆனால் மன்சூர் அவர்களின் இளைய சகோதரியின் திருமண நாளுக்கு முந்திய இரவு அங்கு வந்த இனந் தெரியாத ஒருவர் அங்கிருந்த உறவினர் ஒருவரிடம் கடந்த வாரம் மன்சூர் கடுமையான சுகவீனத்தக்கு உள்ளாகியிருந்ததாகவும் கண்டியில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் காலமாகி விட்டார் என்றும் மார்க்கக் கடமைகள் செய்யப்பட்டு அடக்கம் செய்யப்பட்டு விட்டதாகவும் கூறிவிட்டு தாமதிக்காது விரைந்து சென்றுவிட்டார். அவரை யாரென்று அவர்களாள் அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை.
விடிந்தால் சகோதரியின் திருமணம் என்றிருக்கும்போது உறவினர்களிடம் இந்தச் செய்தியைக் கூறத் தைரியப்படாத அந்த உறவினர், குடும்பத்திலுள்ள மிக முக்கியமான ஆண்களிடம் இவ்விடயத்தைக் கூறி இதனை நாம் யாரிடமும் கூறு வதில்லை என்றும் திருமண வேலைகளில் அனைவரும் சிரத்தை காட்டுதல் வேண்டும் என்ற தீர்மானத்தை எடுத்துள்ளனர்.
விடிந்தால் சகோதரியின் திருமணம் என்றிருக்கும்போது உறவினர்களிடம் இந்தச் செய்தியைக் கூறத் தைரியப்படாத அந்த உறவினர், குடும்பத்திலுள்ள மிக முக்கியமான ஆண்களிடம் இவ்விடயத்தைக் கூறி இதனை நாம் யாரிடமும் கூறு வதில்லை என்றும் திருமண வேலைகளில் அனைவரும் சிரத்தை காட்டுதல் வேண்டும் என்ற தீர்மானத்தை எடுத்துள்ளனர்.
அந்த மரணம் எப்படி எங்கு நிகழ்நதிருந்தாலும் சமூகத்துக்கான உயிர்த்தியாகப் பொராட்ட சூழ்நிலையிலேயே அது சிகழப்பெற்றுள்ளது. எல்லாம் வல்ல இறைவன் இந்த சமூகத்தின் விடிவுக்காக அவர் செய்த தியாகங்களைப் பொருந்திக் கொள்வானாக.
It is circulated specially for Sammanthurai friend to get their ideas to develop this article.