Ads Area

அவுலியாக்களை கோடிச் செலவில் கௌரவிப்பதை விட ஏழைகளை வறுமையிலிருந்து மீட்கலாமே.

முஹம்மது நியாஸ்

அப்துர் றஊப் மௌலவி அட்ரசில்லாத அவுலியாக்களின் பெயரால் மாதத்திற்கொரு தடவை அரங்கேற்றுகின்ற திருவிழாக்களுக்கும் "மயிர் காட்டும்" ஊர்வலங்களுக்கும் வாரி இறைக்கின்ற இலட்சங்களையும் கோடிகளையும் திரட்டினாலே அப்பகுதியில் வசிக்கின்ற கணிசமான மக்களை வறுமையின் கோரப்பிடியிலிருந்தும் மீட்டெடுக்க முடியும்.

அப்துர் றஊப் மௌலவியின் ஆதரவாளர்கள் செறிவாக வாழ்கின்ற டீன் வீதி மற்றும் ஹைராத் நகர்ப் பகுதியில்தான் வட்டி என்னும் வன்கொடுமை அதிகளவில் தலைவிரித்தாடுகின்றது. இதன்மூலமே அவ்வப்போது பல கலாச்சார சீரழிவுகளும் அரங்கேற்றுகின்றன.

அந்த வகையில் அவுலியாக்களை கௌரவிப்பதாகக் கூறிக்கொண்டு ஆடம்பரமான திருவிழாக்களுக்கு வரம்புமீறிய பொருளாதாரத்தை வாரியிறைப்பதை நிறுத்திவிட்டு அப்பகுதிவாழ் மக்களுடைய வாழ்க்கைத்தரம் பற்றி சிந்திப்பதே சிறந்தது.

மேலும் இது தவிரவுள்ள ஏனைய பள்ளிவாசல்களும் கூட வர்ணமயமான மின்விளக்குகளுக்கும் தரை விரிப்புக்களுக்கும் வர்ணப் பூச்சுக்களுக்கும் வருடா வருடம் பணத்தை வாரியிறைப்பதை விடவும் அந்தந்தப் பகுதிகளில் வாழ்கின்ற அடித்தட்டு மக்களுடைய பொருளாதாரத் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு முன்வரவேண்டும்.

காத்தான்குடியிலுள்ள பிரதான ஜும்ஆ பள்ளிவாசல்களுடைய மாதாந்த வருமானமே ஒரு சில வருடங்களுக்குள் ஒட்டு மொத்த ஊரையும் கட்டம் கட்டமாக வறுமையின் கோரப்பிடியிலிருந்தும் மீட்பதற்குப் போதுமானது.

ஆனால் பள்ளிவாசல்களை பகட்டாக அலங்கரித்து பெருமையடிக்கின்ற நிருவாகிகள் குறைந்த பட்சம் அந்தப்பள்ளிவாசல்களை உயிர்ப்பிகின்ற பேஷிமாம்கள், முஅத்தின்களுடைய வாழ்க்கைத்தரங்கள் பற்றிக்கூட சிந்திப்பதில்லை.

வறுமையின் காரணமாக விபச்சாரத்தை நெருங்கக்கூடிய, ஈமானிய பலவீனத்தையுடைய ஒரு சமூகம் மெல்ல மெல்ல உருவாகி வருகின்ற இந்த காலசூழலில் பள்ளிவாசல்களை அலங்கரிப்பதாலோ அவுலியாக்களின் பெயரால் ஆடம்பரமான திருவிழாக்களை நடாத்துவதாலோ ஆகப்போவதுதான் என்ன?

எனவே கால தாமதங்கள் எதுவுமின்றி இந்த விடயங்கள் கவனத்தில் கொள்ளப்படவேண்டும். "ஊர் மானம் போகிறதென்று" ஊளையிடுவதால் மாத்திரம் ஊர் மானத்தை காப்பாற்றிவிட முடியாது. மாறாக கப்பலேறிய மானத்தை கரை சேர்ப்பதற்கான ஆலோசனைகளும் தீர்வுகளும் தெளிவாகவே முன்வைக்கப்பட்டுள்ளன. ஊர் மானத்தில் அக்கறையுள்ளவர்கள் தாமதங்கள் எதுவுமின்றி அவற்றுக்கு செயலுருவம் கொடுப்பதே அறிவார்த்தமானது.







Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe