கட்டுரை - கியாஸ் ஏ புகாரி.
‘கை’யின் கையில் கத்தியை கொடுத்த நிலைதான் இம்முறை உள்ளுராட்சி தேர்தலில் சம்மாந்துறை பிரதேச சபை. “கட்டப்பட்ட புதிய கட்டிடத்தின் தவிசாளர் ஆசனத்தில் அமரக் கிடைத்திடுமோ?’ அது சாத்தியமில்லை” என பலரும் விமர்சித்தனர் முன்னாள் தவிசாளரை. அதே நேரம் “முன்னாள் மாகாண சபை உறுப்பினருக்கே இந்த ஆசனம் கைகூடும்” என ஒரு சிலர் கனவுப்; பாதையில் மிதந்தனர்.
ஆட்சியின் பொறி ஸ்ரீ.ல.சு.க.விடம் அகப்பட்டதும் இறுதித் தருணம் வரை புரியாத புதிராகவே இருந்தது தவிசாளர் கனவு. இறுதியில் முன்னாள்; தவிசாளர் ஏ.எம்.எம். நௌஷாட் அவர்களுக்கே இந்த பதவி கிடைத்தது. இது இறைவனின் நியதி.
இந்தக் கட்டுரை மூலம் உணர்த்தவரும் விடயம் என்னவென்றால்,
வெறும் பேச்சுக்களாலும், சுயநல கருத்துக்களாலும், கட்சிகளின்மேல் சிலர் கொண்டுள்ள மோகத்தினாலும் அதே நேரம் தனிநபர்மீது கொண்டுள்ள விருப்பு, வெறுப்புக்களால் இனவன்முறைகளை ஊரிலோ அல்லது நாட்டிலோ தோற்றம் பெற வைப்பது பிழையான வெளிப்பாடாகும்.
அரசியல் என்கின்ற ஒரு ஊடகம் மக்களையும், அரசியல்வாதிகளையும் தேர்தல் காலங்களில் மட்டுமல்லாது எப்பொழுதும் சமூகத்துக்காக விதைத்துக் கொடுக்கின்ற தானியமாக இருக்கவேண்டும். அரசியல் விமர்னங்களால் அது அரசியல்வாதிக்கும் மக்களுக்குமிடையே ஊடலாகவோ அல்லது ஊழலாகவோ மாற்றம்பெறக்கூடாது.
அரசியலை நன்றாக விளங்கி விமர்சிப்பதே சுகாதாரமானதாக இருக்குமென நினைக்கின்றேன். ஏனென்றால் தற்கால நவீன நூற்றாண்டில் ஊடகம் உள்ளங்கையளவில் அமைந்துள்ளது. ஒரு விடயத்தை நொடிப்பொழுதில் சமூக வளைத்தளங்;களினூடாக பிரபல்யப்படுத்த முடியும். இவ்வாறான சூழ்நிலையில் நம் பதிவுகளும், கருத்துக்களும் சமாதானத்தை சீர் குலைப்பதாக அமைந்துவிடக்கூடாது.
அதாவது கடந்த மார்ச் 27ஆம் திகதி சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் பிரதித் தவிசாளர்கள் பதவியேற்றதைத் தொடர்ந்தது ஒருசில சகோதரார்களால் விமர்சிக்கப்படுகின்ற விடயம் தமிழ் சகோதரர் ஒருவர் பிரதித் தவிசாளராக வந்தமை.
- சம்மாந்துறை பட்டின சபையாக இருந்து இன்று பிரதேச சபையாக மாற்றம் பெற்று நாளை இது நகரசபையாகவும் வரக்கூடும் ஆனால், இந்த ஊரில் பிறந்த முஸ்லிம் ஒருவர்தான் தவிசாளராகவோ அல்லது நகரபிதாவாகவோ வரவேண்டும் என்ற சட்டம் எந்த வகையிலும் யாப்பிலோ அல்லது தேர்தல் அமைப்பிலோ கிடையாது. இது சட்டரீதியாக உள்ள ஒரு விடயம்.
- அதேபோல் இறைவனால் நிர்ணயிக்கப்பட்ட ஒரு ஆட்சி அதிகாரத்தில் யார் இருந்தாலும் அந்த ஆட்சிக்கு ஒத்துழைத்து செல்லவேண்டும் என்பது மார்க்கத்தின்பால் உற்றுநோக்கப்பட வேண்டிய விடயம்.
- பல ஆண்டுகளாக சம்மாந்துறையில் தமிழர்கள் இருந்த போதிலும் அவர்களுக்கு சாதகமாக அமைந்த தேர்தல் முறைமை இதுவாகும். இது நடைமுறையளவில் ஒப்பிடக்கூடிய விடயம்.
அவ்வாறே, மனிதர்கள் என்ற அடிப்படையில்; தமிழர்கள் முஸ்லிம்களை ‘நாநா’ என்று அழைக்கிறார்கள், முஸ்லிம்கள் தமிழர்களை ‘அண்ணன்’ என்று சாதாரண காலங்களில் அழைக்கின்றவர்களிடையே அரசியல் என வரும்போது மட்டும் பிரித்து நோக்குவது சரியான விடயமா?
யதார்த்தம் புரியதவர்களே இவ்வாறான சிந்தனைகளினூடாக மக்கள் மனங்களை குழப்பமடையச் செய்கின்றனர். இந்த கட்டுரையை வைத்து இது ஒரு பக்கச்; சார்பான கட்டுரை என பலரும் உற்றுநோக்கலாம். அவ்வாறு பேசக்கூடியவர்கள் ஒரு விடயத்தை நன்றாக சிந்திக்க வேண்டும் எமது நாட்டில் 30 வருட காலமாக இருந்த யுத்தம் உருவாகியது இனவாத சிந்தனைகளாலே.
அதேபோல் சிங்கள பேரினவாதிகளின் நாசகார செயல்கள் இனவாத கருத்துக்களாலேதான்;.
நாட்டில் இவ்வாறெல்லாம் பல பிரச்சினைகள் தலைதூக்கியபோதும், தூக்குகின்றபோதும் சுமார் 33000 மக்கள் தொகையை (தமிழர்கள் உட்பட) கொண்ட சம்மாந்துறையில் தமிழர் ஒருவர் பிரதித் தவிசாளராக வந்தமையை விமர்சிப்பது ஏற்றுக்கொள்ள முடியாததாகும். இந்த விடயத்தை வாழ்த்துவதன் மூலமும் இதனை பொருந்திக் கொள்வதன் மூலமும் நமது ஊர் ஒரு இன உடன்பாட்டில் முன்னுதாரணத்துக்கான ஊர் என்ற எடுத்துக்காட்டாக இருக்கவேண்டும்.
சாதரணமாக எண்ணிப் பார்ப்போமேயானால் சம்மாந்துறை பிரதேச சபையில் இதுவரையில் இருந்த பிரதித் தவிசாளர்களால் புரியப்பட்ட சாதனைகள் என்ன? அல்லது தடுக்கப்பட்ட விடயம் என்ன? அதே போல் தவிசாளரை மீறி அவர்கள் செய்த வித்தைகள்தான் என்ன? இந்தப் பதவி இவ்வாறு இருக்கின்ற நிலையில் இது ஒரு மரியாதைக்கும், கௌரவத்துக்கும் மாதத்திரம் உகந்த பதவி மட்டுமே என்பதை நாம் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.
வெளியில் பேராளிகளாகவும், கட்சித் தொண்டர்களாகவும் விமர்சனங்களை வீரியமாக பேசிக் கொண்டிருப்பவர்கள் சற்று சிந்திக்க வேண்டும் அன்றைய தினம் சபையில் இடம்பெற்ற வாக்கொடுப்பின் மூலமாகவே இவ்வாறு தவிசாளர், பிரதித் தவிசாளர் தெரிவு செய்யப்பட்டனர். அதை வைத்து இவ்வாறான விமர்சகர்களின் கூற்றுப்படி நோக்கினால் சம்மாந்துறைக்கு அநீதி இழைத்தவர்கள் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகளா?....
வெறும் தனிப்பட்ட அரசியல் விமர்சனங்களுக்காக பதிவேற்றப்படும் இவ்வாறான பதிவுகளால் மாற்றுமத சகோதரர்களின் மத்தியில் தேவையற்ற குரோதங்களை வளர்த்துக்கொள்வது சிறந்ததொன்றாக இருக்காது. தற்காலத்தில் இடம்பெற்ற சிங்கள பேரினவாதிகளின் சக்திகளை எதிர்த்து பல தமிழர்கள் முஸ்லிம்களுக்கு ஆதரவாக வடமாகாணத்தில் ஆர்ப்பட்டங்கள் செய்தனர். அதே நேரம் நாட்டின் பல ஊர்களில் இன ரீதியிலான வன்முறைகள் இடம்பெறுகின்றன ஆனால், குறிப்பாக எமது ஊரில் அப்படி இடம்பெற்ற வராலாறு அரிதே.
எனவே, தேவையற்ற வாதங்களை விலத்தி நாம் அனைவரும் மனிதர்கள் எனும் தொனியில் சிந்திந்து செயல்படுவதே தற்காலத்தில் சாலச்சிறந்தது.
- கியாஸ் ஏ. புஹாரி -