தகவல் - வைத்தியர் எம்.எம். நௌஷாத்.
சம்மாந்துறையின் கலை இலக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல், நுால் ஆய்வுகளில் ஈடுபடுதல், எழுத்தாளர்களுக்கு களம் அமைத்துக் கொடுத்தல், சம்மாந்துறையின் வரலாறோடு தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளல் போன்றவற்றினை நோக்காக கொண்டு சம்மாந்துறையில் உள்ள இலக்கியவாதிகளின் நான்காவது “குயிலோசை இலக்கிய ஒன்றுகூடல்” ஒன்று நேற்று (2018-03-04) சம்மாந்துறை மத்திய கல்லுாரி ஆராதனை மண்டபத்தில் காலை 9.30 மணியளவில் இடம் பெற்றது.
சிறப்பு அதிதியாக பேராசிரியர் றமீஸ் அப்துல்லா அவர்கள் கலந்து கொண்ட நேற்றைய நிகழ்வில் கவிதை, சிறுகதை, வரலாறு, புதிய இலக்கியப் போக்குக்கள், சஞ்சிகை போன்றன தொடர்பாக வருகை தந்த இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள், வரலாற்று ஆசிரியர்கள், கவிஞர்கள் போன்றோரால் கருத்துக்கள் பரிமாறப்பட்டது.
சிறுகதைகள் தொடர்பாக மசூரா ஏ மஜீத் அவர்களாலும், கவிதைகள் தொடர்பாக வைத்தியர் எம்.சி.எம். காலித் இஸ்மா பரீட், கலாபூஸணம் ஏ.சி.இஸ்மாலெப்பை, கவிஞினி றமீஸா மற்றும் கவிஞர் இஸ்மாயில் ஏ முஹம்மத் போன்றார்களாலும், வரலாறு தொடர்பாக எழுத்தாளர் ஜலீல் ஜீ அவர்களாலும் பல்வேறுபட்ட ஆரோக்கியமான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது.
மேலும் இந் நிகழ்வில் “நேசம்” என்ற புதிய சஞ்சிகை அறிமுகப்படுத்தப்பட்டு அது தொடர்பாக ஊடகவியலாளர் அஹமட்லெப்பை அன்சார் அவர்களால் விளக்கமளிக்கப்பட்டது.
நிகழ்வுக்கு சிறப்பு அதிதியாக கலந்து கொண்ட பேராசிரியர் றமீஸ் அப்துல்லா அவர்கள் தற்காலத்தில் உள்ள புதிய இலக்கியப் போக்குகள் தொடர்பாக தனது ஆரோக்கியமான கருத்துக்களை பரிமாறிக் கொண்டதோடு குயிலோசை சந்திப்பின் எதிர்கால திட்டங்கள் குறித்தும் இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டது.
குறித்த நிகழ்வானது இஸ்மா பரீட் அவர்களின் நன்றியுரையோடு இனிதே நிறைவுற்றது.