Ads Area

குப்பை மாளிகைகள்' நாறும் தலைநகரம்.

சுத்தமான நாடு வேண்டும், வளமான நாடு வேண்டும் என வாய் நிறையப் பேசிய அரசாங்கம்; சட்டத்தை கொடுத்த அதே கனம் மாற்றுத் திட்டத்தை கொடுத்துள்ளதா? என்பது புரியாமல் இருக்கின்றது. நல்லாட்சி அரசாங்கம் ஆரம்பிக்கப்பட்ட சில நாட்களிலேயே மேல்மாகாணத்தில் குப்பை பிரச்சினை ஆரம்பித்தது. அது பெருக்கெடுத்து இறுதியில் மீதொட்டமுல்ல குப்பை மேடும் வீழ்ந்து அதை அண்டிய பகுதியிலிருந்த மக்களும் இன்னல்களுக்குள்ளானமை நாம் யாவரும் அறிந்த விடயம்.

வீதியோரங்களிலும், பொது இடங்களிலிலும் குப்பைகளை வீசுவது தவறாக இருந்த போதிலும் அதை தடுப்பதற்கு அரசாங்கம் எடுத்த உத்திகள் சரிதான்.

ஆனால், அதன் பின்னர் ஒவ்வொரு வீடுகளும் குப்பையால் நிரம்பி துர்நாற்றம் எடுக்கும் அளவுக்கு சுகாதாரமற்று வருகின்றமை நாம் அறிந்திராத ஒரு இக்கட்டான நிலை. இந்த நிலை இன்று கொழும்பிலுள்ள பெரும்பாலானவர்கள் அனுபவித்து வருகின்ற பிரச்சினையாகும்.

கொழும்பு மாநகரத்தை தூய்மையாக்க வேண்டும் என மேல் மாகாண அபிவிருத்தி மற்றும் மெகா பொலிஸி அமைச்சர் சம்பிக்க ரணவக்கவினால் மேற்கொள்ளப்பட்ட நகரை தூய்மையாக்கும் திட்டம் சிறந்த அடைவை எட்டியிருந்தாலும் இதன் பின்விளைவாக மக்கள் எதிர்கொள்ளும் அல்லல்களை இந்த கட்டுரை மூலம் சுட்டிக்காட்ட முனைகின்றேன். 

அதாவது, கடந்த ஆண்டின் ஆரம்பப் பகுதியிலிருந்து பொலித்தின் பாவனைக்கான தடையேற்பாடுகள் செய்யப்பட்டன. குப்பைகள் உக்காமை போன்ற பிரச்சினை வளர்வதையிட்டும், சூழல் மாசுபடுவதை கட்டுப்படுத்தும் பொருட்டும் இத் திட்டம் ஜனாதிபதியால் முன்னெடுக்கப்பட்டது. அதன் பின்னர் ஒரு வகை உக்கலடையக் கூடிய பொலித்தீனும் அறிமுகம் செய்யப்பட்டது.


இது போன்ற செயற்பாடுகளை முன்னெடுத்து வந்த அரசாங்கம் குப்பைகளை தான்தோன்றித்தனமாக பொதுமக்கள் அங்கும் இங்கும் வீசுவதை கட்டுப்படுத்துவதற்காக கடந்த வருடம் ஜூன் மாதமளவில் கடுமையான சட்டத்தையும் அமுல்படுத்தியிருந்தது. அது எத்தகையது என்றால் வீதியோரங்களில் சாதாரணமாக குப்பைகள் வீசப்பட்டால் கூட பொலிஸார் கைது செய்து சுற்றாடல் பாதுப்பு பிரவினரால் குறிப்பிட்ட தொகை தண்டப்பணம் விதிக்கும் அளவுக்கு வலுத்திருந்தது. 

இவையனைத்தும் உண்மையிலேயே வரவேற்கத்தக்க விடயம்.


ஏனெனில் இலங்கையின் தலைநகரமாக திகழும் கொழும்பு அதன் சுற்றுப்புறம் அழகாக இருப்பதும், சுகாதாரம் பேணப்படுவதும் அனைவருக்கும் ஆரோக்கியமே. நிலைமை இவ்வாறு செல்லுகின்ற வேளையில் கொழும்பிலுள்ள குப்பைகள் கொட்டப்படும் பல இடங்களில் அந்த இடங்களை அண்மித்து வாழும் மக்களால் அவ்விடங்களில் குப்பை கொட்டக்கூடாது என எதிர்ப்புகள் முளைக்கத்தொடங்கிவிட்டன.

இவற்றை கருத்திற்கொண்ட அரசாங்கம் அவற்றுக்கு தீர்வாக சமீப காலமாக குப்பைகளை பிரித்து எடுக்கும் செயற்பாட்டை அமுல்படுத்தியுள்ளது. அதாவது, உக்கலடையும் பொருட்கள் வேறாகவும், உக்கலடையா பொருட்கள் வேறாகவும் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு தினங்களில் மாநகர சபை சிற்×ழியர்களால் சேகரிக்கின்றது.

மேற்கூறப்பட்ட அனைத்தையும் வெற்றிகொண்ட அரசுக்கு கழிவுகளை சேகரிப்பதில் மக்களுக்குள்ள அசௌகரியத்துக்கு தீர்வு என்ன? என்பதே தற்போது முன்வைக்கப்படும் கேள்வியாகும். மாநகர சபை சிற்×ழியர்களும் அரச ஊழியர்கள்தான் என்கின்ற வகையில் சாதாரணமாக காலை 8 மணிக்கு தங்களது பணியை ஆரம்பித்தாலும் குறிப்பிட்ட பகுதிகளுக்கு செல்ல மு.ப. 9 மணியையும் தாண்டுகின்றது. அந்த நேரங்களில் அனைத்து வீடுகளிலும் மக்கள் இருப்பது சாத்தியமற்றது.

ஏனெனில் கொழும்பு மாநகரத்தை பொறுத்த வரையில் பெரும்பாலானவர்கள் தொழில் புரிபவர்களாகவே உள்ளனர். அதையும் விட பெரும்பாலான வீடுகளில் வெளி மாவட்டங்களிலிருந்து வந்தவர்கள் வாடகைக்கு இருக்கின்றனர். எனவே அவர்கள் அனைவரும் சாதõரணமாக மு.ப. 9 மணியை அண்மித்த நேரத்திற்கிடையில் அலுவலகங்களுக்கு சென்றிடுவர். 
இந்த நெருக்கடியான நேர இடைவெளிக்குள் உக்கலடைந்த பொருட்களை சேகரிக்க ஒருநாளும், உக்கலடையாத பொருட்களை சேகரிக்க ஒரு நாளும் என சுழற்சி அடிப்படையில் செயற்படுகின்றனர். இத்திட்டம் பலருக்கும் சாத்தியமில்லை. காரணம் என்னவென்றால் குப்பைகளை பிரித்து வைத்தாலும் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு நாட்கள் காத்திருந்து வீச வேண்டிய நிலை. அப்படி காத்திருந்தால் ஒவ்வொரு நாளும் அலுவலகங்களுக்கு செல்லும் நேரங்களில் தாமதம். சில நிறுவனங்களில் வேலை ஆரம்பிக்கும் நேரம் 30 நிமிடங்கள் பிந்தினால் அரை நாள் வேலைசெய்ததாகவே கருதப்படக்கூடிய சந்தர்ப்பமும் உள்ளது. இவற்றுக்கு தீர்வு அரசிடம் கிடைக்குமா?


மேற்கூறப்பட்ட அமைப்புக்களில் கழிவு முகாமைத்துவத்தை அரசு கடுமையாக செயற்படுத்துவதானால் மாநகர சபையில் பணிபுரியும் சிற்றூழியர்களும் தங்களுடைய நேரத்துக்குள் அவற்றை சேகரித்துவிட்டு அவசரமாக செல்கின்றனர். அதைவிட கொழும்பு மாநகரத்தை சுத்தப்படுத்துவதற்காக சில தனியார் நிறுவனங்கள் அத்திட்டத்தை பாரமெடுத்து செய்வதனால் அவர்களால் வேலைக்கமர்த்தப்பட்டுள்ள சிற்றூழியர்களின் வண்டியிலும் குப்பை போட முடியாதுள்ளது. ஒரு சந்தோசத்துக்காக பணம் தருகின்றோம் என்றாலும் குப்பைகளை வீசுவது சாத்தியமற்றுக் காணப்படுகின்றது. 

இந்நிலைமை தொடர்வதானால் அலுவலகங்களுக்கு செல்வோர் கழிவுகளை வீட்டினுள்ளேயே சேமித்து வைக்கின்றனர். அதில் காய்கறிகள், பழவகைள் மற்றும் உணவுப் பொருட்கள் பழுதடைந்து ஓரிரு நாட்களில் தூர்நாற்றம் வீச ஆரம்பிக்கின்றது. அது மட்டுமல்லாது புழுக்கள், பங்கசுக்கள் போன்றனவும் உருவாகத்தொடங்குகின்றன.


இதனால் காலப்போக்கில் எவ்வாறான சூழல்மாசடைவுகள், நோய்கள் உருவாகும் என்பதை ஊகிக்க முடியாமல் உள்ளது. பெரும்பாலானவர்கள் விடுமுறையில் இருக்கக்கூடிய நாள் ஞாயிற்றுக் கிழமையே அந்நாளில் சில நேரம் கழிவுசேகரிப்போர் வரலாம் அல்லது வராமலும் விடலாம், அப்படி வராமல் விட்டால் ஒரு கிழமைக் கழிவு இரண்டாவது கிழமை 14 நாட்கள் சேகரிக்கப்பட்ட கழிவுகளாக மாற்றமடைந்து நாற்றம் வீசும் அளவுக்கு வருகின்றது.

இந்த அவலம் கொழும்பு மாநகரத்திலுள்ள பல இடங்களில் இருக்கின்றது. குறிப்பாக இருபாலாரும் தொழில்புரிபவர்களின் வீடுகளிலேயே அதிகம் இருக்கின்றது.இதனை நிவர்த்திப்பதற்காக தன்னுடைய பார்வையில் முன்வைக்கக்கூடிய கருத்தாக,


1. எந்த நாளும் காலையில் 7 முதல் 9 மணி வரை குறிப்பிட்ட சில இடங்களில் மொத்தமாக கழிவுகளை போட ஏற்பாடு செய்து, அந்தக் கழிவுகள் அனைத்தையும் மு.ப. 9 மணிக்கு பின்னர் மாநகர சபையால் அகற்றமுடியும்.

2. குறிப்பிட்ட சில சிற்றூழியர்களை பயன்படுத்தி ஒவ்வொரு வீடுகளிலும் பிரித்து வைக்கப்பட்டுள்ள உக்கலடையும், உக்கலடையாக் கழிவுகளை ஒவ்வொரு நாளும் சேகரித்தல். அவர்களுக்கு மக்களிடம் சந்தா முறையில் பண அறிவீடு செய்து மேலதிக கொடுப்பனவுகளை வழங்கி ஊக்கப்படுத்தல்.

3. இரவு நேரங்களில் மாநகர கழிவகற்றல் பிரிவை வேலைக்கு அமர்த்தி கழிவுகளை சேகரிக்கச் செய்தல்.

இது போன்ற பலதரப்பட்ட வழிமுறைகளில் ஏதாவதொன்றை பயன்படுத்தி கழிவுகளை சேகரிக்கும் விடயத்தில் மக்கள் எதிர்கொள்கின்ற இன்னல்களை நிவர்த்தி செய்வது இது சம்பந்தப்பட்ட அமைச்சரினதும், அரசாங்கத்தினரினதும் தலையாய கடைமையாகும்.


சுருக்கமாக கூறினால் பல நாட்களாக சேகரிக்கப்பட்ட கழிவுகள் துர்நாற்றம் எடுத்ததனால் சில நாட்கள் அரை நாள் வேலைக்கு செல்லவேண்டிய சந்தர்ப்பங்கள் பலருக்கும் ஏற்பட்டுள்ளது. அலுவலகத்தில் விடுமுறைப் படிவத்தை பூரணப்படுத்திற்கொடுக்கும்போது "குப்பை வீசுவதற்காக அரைநாள் லீவு' என்பது யாராலும் ஏற்றுக்கொள்ளப்படும் விடயமா? இந்த அவலத்தை கட்டாயம் அரசு கவனமெடுக்க வேண்டும்.

கொழும்பு மாநகரம் மற்றும் மேல்மாகாணம் சுத்தமாக இருப்பது வரவேற்கத்தக்க விடயம். அதே போல் கொழும்பிலுள்ள ஒவ்வொரு வீடுகளும், வீதிகளும் சுத்தமாக இருக்கவேண்டும். அரசாங்கத்துக்கு வீட்டு வரி, காணி வரி என பல்வேறு வரிகளை செலுத்தும் மக்கள் குப்பையால் அசௌகரியத்தை சுமப்பது ஏற்றுக்கொள்ள முடியாததாகும்.

எனவே, இக் கட்டுரை அச்சிடப்பட்ட தாள் வாசித்துவிட்டு வீசப்படும் கழிவுப்பொருளாக மாறிவிடாமல் கழிவு முகாமைத்துவத்தால் கொழும்பிலுள்ள மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைக்கு சிறந்த தீர்வைப்பெற்றுக் கொடுக்க இன்றியமையாததாக காணப்படவேண்டும். 
அத்தோடு கொழும்பு மாநகர சபை மேயர் மற்றும் உறுப்பினர்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த விடயத்தை கவனமெடுத்து இதற்குரிய சரியான தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டும்.


வெறுமனே தேர்தல் காலங்களில் மேடைப் பேச்சுக்களில் மக்களின் மனங்களை உணர்பவர்கள்; ஆட்சியிலிருக்கும்போது மக்களின் அவலங்களை உணர்ந்து செயற்படுவதே சிறந்த ஆட்சியாகும். இது ஒரு சிறிய விடயம். ஆனால், இதன் தாக்கம் மேல் மாகாணத்தில் வாழுகின்ற மக்களை மிகவும் இன்னல்களுக்குள்ளாக்குகின்றது. 

எனவே, சிறந்த கழிவு முகாமைத்துவத்தை எமது நாட்டில் கட்டியெழுப்ப நாம் அனைவரும் ஒத்துழைப்பது ஒவ்வொருவரினதும் கடமையாகும்.


- கியாஸ் ஏ. புஹாரி -
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe