அன்சார் காசீம்.
வெறும் திண்ணைப் பேச்சு நடத்தும் முஸ்லிம் அரசியலிருந்து வேறுபட்டு மக்களுக்கான அரசியலை நடத்தி மக்கள் பணியிலே தன்னை முழுமையாக அர்ப்பணித்துச் செயற்பட்டு வந்தவர்தான் முன்னாள் நீர்ப்பாசனத்துறை அமைச்சர், சட்டத்தரணி மர்ஹூம் எம்.ஐ. அன்வர் இஸ்மாயில் ஆவார்.
முஸ்லிம்களின் அரசியலை ஒரு புதிய பாதையில் நகர்த்துவதற்கு திடசங்கற்பம் பூண்டிருந்த அரசியல்வாதியாகவும், இலங்கை முஸ்லிம் அரசியல்வாதிகளுள் இளையவராக இருந்த போதும் அதிக கவனத்தைப் பெற்றவராகவும் திகழ்ந்த அன்வர் இஸ்மாயில் எம்மை விட்டுப்பிரிந்து பதினொரு வருடங்கள் பூர்த்தியாகின்றன.
முஸ்லிம் அரசியலிலும் அவர் பிறந்த மண்ணான சம்மாந்துறை அரசியலிலும் அவர் எழுப்பிய அதிர்வுகள் இன்றும் வெற்றோசை போல் கேட்டுக்கொண்டிருக்கின்றன. அவரது இடைவெளி நிரப்பப்பட முடியாத ஒன்றாகவுள்ளது.
சிறுவயதிலேேய தந்தையை இழந்த அன்வர் இஸ்மாயில் எப்போதுமே தீவிரமான போக்குள்ளவர். மாணவர் பருவத்திலிருந்து துடுக்குத்தனமான தலைமைத்துவமும் சமூக சேவை ஈடுபாடும் அதனைத் தொடர்ந்ததான சுதந்திரக் கட்சி மேடைப் பேச்சுக்களும் அவரது அரசியல் ஆளுமைக்கு களம் அமைத்தன.
1985 இல் இலங்கையில் இனப்பிரச்சினை உக்கிரமடைந்த காலகட்டத்திலே முஸ்லிம்களின் பிரச்சினைகளை வெளிக்கொணர்வதில் முன்னின்று உழைத்த இயக்கமான ”பாமிஸின்” கிளை நிறுவனமான ”முஸா” என்ற அமைப்பினைச் சம்மாந்துறையில் நிறுவி முஸ்லிம்களின் பல்வேறுபட்ட பிரச்சினைகளை சர்வதேச மயப்படுத்தினார்.
சட்ட பீடத்திற்குத் தெரிவு செய்யப்பட்டது முதல் பெருந்தலைவர் எம்.எச்.எம். அஷ்ரபின் சிஷ்யனாகவே செயற்பட்டார்.
முஸ்லிம் காங்கிரஸின் உருவாக்கம் அன்வர் இஸ்மாயிலை தனது பிடிக்குள் கொண்டு வந்தது. 1984ஆம் ஆண்டு இலங்கையில் இஸ்ரேலிய துாதரகம் திறப்பதற்கான முஸ்தீபுகளை முஸ்லிம்கள் எதிர்த்தபோது அதில் ஒருவராகச் செயற்பட்டு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார். அப்போது சட்டத்தரணி அஷ்ரஃப் அவரை மீட்டெடுத்தார்.
முஸ்லிம் காங்கிரஸ் என்ற முகாம் உருவானதற்குப் பின்னர் அஷ்ரஃபோடு இணைந்து கொண்ட அன்வர் இஸ்மாயில் அவரது அரசியல் நடவடிக்கைகளுக்கு உதவியாக இருந்தார். அப்போதிலிருந்தே அன்வர் இஸ்மாயில் என்ற ஆளுமை வளரத்தொடங்கியது.
1989 ஆம் ஆண்டு காலப் பகுதியில் நிகழ்ந்த யாழ் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமை, காத்தான்குடி, ஏறாவூர், மூதுார் மற்றும் சம்மாந்துறை முஸ்லிம்களின் படுகொலைகள் மற்றும் காரைதீவில் வைத்து முஸ்லிம் பொலிஸார் கொல்லப்பட்டமை தொடர்பான அஷ்ரப் அவர்களினால் 1992ஆம் ஆண்டு 'கறுப்பு வெள்ளி' பிரகடம் செய்த போது அதனை சமூக மட்டத்திற்குள் கொண்டு சென்றதில் அன்வர் இஸ்மாயில் பெரிதும் துணையாக இருந்தார்.
அஷ்ரப் அவர்கள் அமைச்சராக இருந்த காலங்களில் அவரின் இணைப்புச் செயலாளராகவும் செயற்பட்டு அவரின் அலுவல்கள் பெரும்பாலானவற்றை ஓய்வுறக்கமின்றி செய்தவர்களில் சிலரில் அன்வர் இஸ்மாயிலுக்கு முக்கிய பங்குண்டு பொதுமக்கள் அஷ்ரபை தேடிவருகின்ற போதெல்லாம் அவரின் செயலாளர்கள் மறைந்து கொண்ட சந்தர்ப்பங்களே அதிகம் ஆனால், அன்வர் இஸ்மாயிலோ பொதுமக்களிடம் முன்வந்து அவர்களின் பிரச்சினைகளை் அஷ்ரபோடு தொடர்பு கொண்டு பலருக்கு தீர்வுகளைப் பெற்றுக் கொடுத்ததோடு, நுாற்றுக்கு மேற்பட்டவர்களுக்கு துறைமுக அதிகாரசபையில் தொழி்வாய்ப்புக்களையும் பெற்றுக் கொடுத்தார்.
அஷ்ரபின் அரசியல் பணியில் பாரியதொரு பகுதியைத் தனது தலையில் சுமர்ந்து கொண்டு சம்மாந்துறையின் உத்தியோகப்பற்றற்ற பாராளுமன்ற உறுப்பினராக அக்காலத்தில் செயற்பட்டார்.
நிறைந்த பேச்சாற்றல், வசீகரம், தைரியம், மக்களின் மனதினை ஆளுதல் அறிதல், சந்தர்ப்பத்தினை நன்றாகச் சரிவரப்பயன்படுத்துதல், அரசியல் மேலிடத்தில் சாதிக்கக்கூடிய மதிநுட்பம், பரந்த அரசியல் அனுபவம், விரைவில் புரிந்து கொள்ளுதல், சரியான நேரத்தில் சரியான முடிவு, ஆதரவாளர்களை அரவணைக்கும் பண்பு, புண் சிரிப்பு போன்ற குணங்களினால் தனக்கென்று ஒரு பிரத்தியோக ஆதரவாளர்களை கொண்ட வட்டத்தினை உருவாக்கி அரசியல் பயணத்தினை மேற்கொண்டார்.
2002ஆம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சி அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட யுத்த நிறுத்த ஒப்பந்த காலப் பகுதியில் முஸ்லிம்கள் சார்பாக பாராளுமன்றத்தில் ஆக்ரோஷமாகவும், ஆணித்தரமாகவும் விடுதலைப் புலிகளை சாடியும் அவர் உரையாற்றினார். அப்போது விடுதலைப் புலிகளிடமான பேச்சுவார்த்தையில் முஸ்லிம்களை புறக்கனித்த ”மூன்றாம் தரப்பு” விடயத்தில் முரண்பட்டு பாராளுமன்றப் பகிஷ்கரிப்பைச் செய்தார்.
முரண்பாடுகள் வலுத்த போது தான் வளர்த்த முஸ்லிம் காங்கிரஸை விட்டு பிரிந்து முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவின் தேசிய காங்கிரஸில் இணைந்தார்.
தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்ற உறுப்பினராகிய அன்வர் இஸ்மாயில் கிழக்கு மாகாண அபிவிருத்தி உட்கட்டடைப்பு பிரதியமைச்சரானார். இதன் மூலம் தனது அரசியல் சாணக்கியத்தினை மீண்டும் வெளிப்படுத்தினார்.
2001-2007 செப்டெம்பர் மாதம் வரை பாராளுமன்ற உறுப்பினராகவும், கிழக்கு மாகாண அபிவிருத்தி உட்கட்டமைப்பு பிரதியமைச்சராகவும், நீர்ப்பாசனத்துறை அமைச்சராகவும் பணியாற்றி சம்மாந்துறையின் பொதுச்சந்தை நிர்மாணம், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் அறபு மொழிப்பீட உருவாக்கம், உலமாக்களுக்கான உலமா சபைக்கான செயலகம், கலாசாரச் சின்னங்கள் கொண்ட வரவேற்புத் தோரணங்கள், மேம்பாலங்கள் நிர்மாணம், நீர்ப்பாசன அணைக்கட்டுக்கள் நிர்மாணம், விவசாயக் குளங்கள் புனரமைப்பு, குடிநீர்த்திட்டங்கள், தொழில் பயிற்சி நிலையம் நிர்மாணம், விளையாட்டு நிலையங்கள் நிர்மாணம், கல்வி அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி சுகாதார அபிவிருத்தி உள்ளிட்ட அம்பாறை மாவட்டத்தில் எந்த அமைச்சரும் செய்யாத பாரிய பல்முனை அபிவிருத்தித் திட்டங்களை குறுகிய காலப்பகுதியில் துணிச்சலுடன் முன்னெடுத்து வெற்றிகண்டார்.
2005ஆம் ஆண்டு நீர்ப்பாசனத்துறை அமைச்சராக திகழ்ந்த அன்வர் இஸ்மாயில் தேசிய ரீதியாகப் பல சாதனைகளைப் புரிந்தார். ஹம்பாந்தோட்டை வெகரகல நீர்ப்பாசனத்திட்டம், புத்தளம் தெதுறுஓயா நீர்ப்பாசனத்திட்டம், மகாஓயா முந்தனி ஓயா பள்ளத்தாக்கு அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் ரம்புக்கன் ஓயா நீர்ப்பாசனத்திட்டம் முதலானவற்றை அவர் செயற்படுத்தத் துணிந்தார். ஆனால், அவர் கனவு கண்ட கல்லோயா நவோதயத்திட்டம் அவரது மரணத்துடன் கனவாகவே ஆகிவிட்டது.
குறிப்பாக பெருந்தலைவர் அஷ்ரப்பினால் உருவாக்கப்பட்ட தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அம்மையாரிடமிருந்து இரண்டு பீடங்களை கொண்டு வருவதற்கு பெருமுயற்சியினை செய்து அதில் ஒன்றான அறபு இஸ்லாமிய பீடத்தினை உருவாக்கி அவற்றில் இன்று சுமார் ஆயிரம் மாணவர்கள் கல்வி கற்கச் செய்த பெருமையும் அந்தப் பல்கலைக்கழகத்தை பெருந்தலைவர் அஷ்ரப் கொண்டு வந்த நோக்கத்தையும் உயிர்ப்பித்துக் கொண்டிருக்கின்ற பெருமையும் அன்வர் இஸ்மாயிலையே சாரும்.