வறுமையை ஒழிப்பதற்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் நிகழ்ச்சித் திட்டங்களை முறையாக நடைமுறைப்படுத்தி நாட்டு மக்களை வறுமையிலிருந்து விடுவிப்பதற்காக உழைப்பது அனைவரினதும் பொறுப்பாகும். என சம்மாந்துறை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத்தலைவரும், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம.ஐ.எம். மன்சூர் தெரிவித்தார்.
சம்மாந்துறை பிரதேச செயலக அபிவிருத்திக் குழுக்கூட்டம் சம்மாந்துறை பிரதேச ஒருங்கிணைப்புத் தலைவரும், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஐ.எம். மன்சூர் தலைமையில் பிரதேச செயலக கேட்போர்கூடத்தில் அண்மையில் (16) இடம்பெற்றபோது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையிலே -
2030 ஆம் ஆண்டாகும் போது இலங்கை நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைந்து கொள்வதற்குத் தேவையான தலைமைத்துவத்தை வழங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னெடுத்துள்ள நிகழ்ச்சித் திட்டங்கள் அடுத்துவரும் 12 வருடங்களில் நாட்டின் நீண்டகால பொருளாதார, சமூக மற்றும் சுற்றாடல் வளர்ச்சிகளைத் தீர்மானிக்கவுள்ளதுடன், பேண்தகு அபிவிருத்தி இலக்குகளைக் கொண்ட நிலையான தொலைநோக்கின் ஊடாக 2030 ஆம் ஆண்டளவில் வறுமை நிலையற்ற இலங்கை தேசத்தை கட்டியெழுப்ப முடியும்.
2030 ஆம் ஆண்டளவில் வறுமை நிலையற்ற இலங்கையை கட்டியெழுப்பும் நோக்குடன் உலகளாவிய பேண்தகு அபிவிருத்தி இலக்குகளை பூர்த்திசெய்வதற்கு 2017ஆம் ஆண்டிலிருந்து பல செயற்றிட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. அரசாங்க அதிகாரிகள், திணைக்களங்களின் தலைவர்கள், சமயத்தலைவர்கள் உள்ளிட்ட சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் இணைந்து இந்த நிகழ்ச்சித் திட்டத்தை வெற்றிபெறச் செய்வதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்.
2030 ஆம் ஆண்டு பேண்தகு அபிவிருத்தி இலக்குகளான வறுமை, விவசாயம், சுகாதாரம், கல்வி, பெண்களுக்கான பாதுகாப்பு, நீர், வலுசக்தி, வேலைவாய்ப்பு, கைத்தொழில், சமூக, சமனற்ற தன்மை, சனத்தொகை, நுகர்வு, காலநிலை வேறுபாடுகள், சமுத்திரம், உயிர்பல்வகைமை, சமாதானம் மற்றும் பொது வேலைத்திட்டங்கள் போன்ற துறைகள் உள்ளடக்கப்படும் வகையில் 17 இலக்குகளுக்கான 17 துறைகளின் நிபுணர்களை உள்ளடக்கிய ஒரு குழுவின் மூலம் தேசிய கொள்கை வடிவமைக்கப்படவுள்ளது. இதன் மூலம் நிலையான தொலைநோக்கின் ஊடாக நாட்டின் அனைத்து துறைகளிலும் அபிவிருத்தி குறித்து விரிவாக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
எனவே, பேண்தகு அபிவிருத்தி இலக்குகளைக் கொண்ட நிலையான தொலைநோக்கின் ஊடாக 2030 ஆம் ஆண்டளவில் வறுமை நிலையற்ற இலங்கை தேசத்தை கட்டியெழுப்ப முடியும். அதற்கு தரப்பினரும் தங்களது பங்களிப்பினை வழங்க வேண்டும்.
2018 இல் செயற்படுத்தப்பட்டுள்ள பன்முகப்படுத்தப்பட்ட வரவு- செலவுத்திட்டம், கிராமிய அபிவிருத்தி உட்கட்டமைப்பு விசேட வேலைத்திட்டம், கிராமிய பொருளாதார அபிவிருத்தி, மீள்குடியேற்றம், கிராம சக்தி வேலைத்திட்டம், கம்பெரலிய வேலைத்திட்டம், அமைச்சுக்களினால் முன்னெடுக்கப்பட்டுள்ள அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் பற்றிய மீளாய்வும், மாட்டு வண்டியில் மணல் ஏற்றுவதற்கு அனுமதிப்பத்திரம் வழங்குவதுகுறித்தும், கைத்தொழில் பேட்டைக்கு காணி வழங்குவது குறித்தும், “ஐ” திட்ட வேலைத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படவுள்ள மத்திய வீதி மற்றும் பஸார் வீதி ஆகியவற்றை விஸ்தரிப்பது சம்பந்தமாகவும் ஆராயப்பட்டது.
கல்வி, சுகாதாரம், வீதி அபிவிருத்தி, காணிப்பிரச்சினை, விவசாயம், நீர் வழங்கல், விளையாட்டு மைதான அபிவிருத்தி, வீடமைப்பு அபிவிருத்தி, மின்சாரம், தபாலகம் அபிவிருத்தி, நீர்ப்பாசனம், உயர் கல்வி அபிவிருத்தி உள்ளிட்ட துறைகள் சம்பந்தமான பிரச்சினைகள் இதன்போது ஆராயப்பட்டதுடன், முன்மொழிவுகளும் இடம்பெற்றன.
இதில் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில், சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.எம்.நௌஸாத், சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்..முகம்மட் ஹனீபா, உதவி பிரதேச செயலாளர் எம்.எம். ஆசீக், உதவித் தவிசாளர் வீ. ஜெயச்சந்திரன், பிரதேச சபை உறுப்பினர் ஐ.எல்.எம். மாஹீர், உதவித் திட்டமிட் பணிப்பாளர் ஏ.எல்.ஏ. மஜீத், திணைக்களங்களின் தலைவர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.