நாட்டிலுள்ள வறிய மக்களை தட்டியெழுப்பி அவர்களது வாழ்வினை மேம்படுத்தி அவர்களை சமூகத்தில் உயர்ந்த இடத்தினை அடைவதற்கு இன்றைய அரசாங்கம் பல்வேறு திட்டங்களை அமுல்படுத்தியுள்ளது. இதனை பயன்படுத்தி தங்களது வாழ்வினை முன்னேற்ற கடின முயற்சிகளை மேற்கொண்டு நாட்டினை வறுமையற்ற நாடாக முன்னேற்ற வேண்டும். திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர் தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூரின் 2018ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு – செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டின்கீழ் கொள்வனவு செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் சமுர்த்தி பயனாளிகள் 13பேருக்கு வாழ்வாதார உதவிப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் அண்மையில் (04) பிரதேச செயலாளர் எஸ்.எம்.முஹம்மட் ஹனீபா தலைமையில் இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையிலே - பயனாளிகள் வாழ்வாதார உதவிகள் மூலம் தங்களது வாழ்வினை முன்னேற்ற வேண்டும். நாங்கள் அரசாங்கத்தின் வெறும் உதவிகளை மட்டும் நம்பி இருக்காமல் தனது உழைப்பின் மூலம் எழுந்து நிற்க வேண்டும்.
நாட்டின் வறுமையை நீண்டகாலம் நிலைத்திருக்கச் செய்யக்கூடாது. அதனை தோல்வி அடையச் செய்து நாட்டினை முன்னேற்ற வேண்டும். நாம் அனைவரும் தனித்து எழுந்துநின்று தன் குடும்பத்தினையும், நாட்டினையும் முன்னேற்றப் பாதையில் வெற்றிபெறச் செய்ய வேண்டும். என்றார்.
சம்மாந்துறை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட சமூக சேவை அமைப்புக்கள், பாலர் பாடசாலைகள், மாதர் அமைப்புக்கள், முதியோர் அமைப்புக்கள், கிராம மாதர் அபிவிருத்திச் சங்கங்களுக்கு 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான கதிரைகள், அலுமாரிகள் மற்றும் மேசைகளும், சமுர்த்தி பயனாளிகளுக்கு 06 இலட்சம் ரூபாய் பெறுமதியான மா அரைக்கும் இயந்திரம், மேசன் உபகரணங்கள், ஓடாவி உபகரணங்கள், சிறுகைத்தொழில் உபகரணங்கள், விவசாய உபகரணங்கள் என்பன பாராளுமன்ற உறுப்பினரினால் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் உதவிச் செயலாளர் எம்.எம். ஆசீக், பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.எல்.ஏ. மஜீத், சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ.எல்.சலீம், பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியோகச் செயலாளர் சட்டத்தரணி எம்.எம்.சகுபீர், பிரதேச செயலக கணக்காளர் திருமதி ஹீசைனா பாரீஸ், திவிநெகும அபிவிருத்தி திணைக்கள உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பயனாளிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஊடகப் பிரிவு.