1994ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலின் போது ஐ.தே.கட்சிக்கோ அல்லது சந்திரிக்கா அரசுக்கோ அறுதிப்பெரும்பாண்மை கிடைக்கவில்லை, இந்த நிலையில் ஏழு பாராளுமன்ற உறுப்பினர்களை தன்வசம் வைத்திருந்த அஷ்ரப் அவர்களும், ஒரு உறுப்பினரான மலைநாட்டைச் சேர்ந்த சந்திரசேகரனும் எந்தப் பக்கம் இணைகின்றார்களோ அந்தப்பக்கம் 113 உறுப்பினர்கள் உறுதியாகுவார்கள் என்ற நிலையில் நாட்டில் பெரும்பரபரப்பான நிலை ஏற்பட்டிருந்தது..
இந்த நிலையில் அஸ்ரப் அவர்கள் எந்தப்பக்கம் செல்லுவாரோ அந்தப்பக்கமே நானும் சேர்ந்து கொள்வேன் என்று சந்திரசேகரன் எம்பி சொன்னதன் காரணமாக அஸ்ரப்பின் பக்கமே எல்லோருடைய பார்வையும் சென்றிருந்தது.
இந்த நிலையில் தேர்தல் நடந்து முடிந்த காலத்தில் அஸ்ரப் கல்முனையில் இருந்தார். அந்த நிலையில் அன்றய ஐ.தே.கட்சி ஜனாதிபதி விஜேதுங்க அவர்கள் கல்முனையில் இருந்த அஸ்ரப் அவர்ளை கெலிக்கெப்டர் மூலம் அழைத்துவர ஏற்பாடும் செய்திருந்தார்.
இதற்கிடையில் புதிதாக அரசியல் களத்துக்கு வந்த சந்திரிக்கா அம்மையார் அவர்கள் அஸ்ரப்பை வலைத்துப் போடுவதில் கடும் பிரயத்தணத்தை மேற்கொண்டிருந்தார். அத்தோடு அஸ்ரப் தனக்கு ஆதரவு தெரிவிக்காது விட்டால் தனது அரசியல்வாழ்க்கை இத்தோடு அஸ்தமித்து விடும் என்ற பயத்தில், அஸ்ரப்பிடம் தனக்கு ஆதரவு தெரிவிக்குமாறும் உங்களுக்கு வேண்டிய உதவிகளை நான் தறுகிறேன் என்று அஷ்ரப்பிடம் சந்திரிக்கா மன்றாடிக் கொண்டிருந்த நிலையில் மறுபக்கம் ஐ.தே.கட்சியினர் பேரம் பேசலில் ஈடுபட்டிருந்தனர்.
இந்தப்பேச்சு வார்த்தையில் காமினி திஸ்ஸநாயக்க மற்றும் ரணில் விக்கிரமசிங்க போன்றவர்கள் அஸ்ரப்பிடம் பேரம்பேசலில் ஈடுபட்டதுடன். அஷ்ரப் அவர்களுக்கு அமைச்சர்கள் எதுவானாலென்ன இன்னோரன்ன பதவி பட்டங்களும், இதர சலுகைகளும் தறுகின்றோம் வாருங்கள் எங்கள் பக்கம் என்று வாதாடிக்கொண்டிருந்தார்கள். இன்னுமொரு படி மேலே சென்று உங்களுக்கு பிரதமர் பதவி வேண்டுமென்றாலும் தறுகிறோம் என்றும் கூறியிருந்தார்கள்.
இந்த நிலையில்தான் ஜனாதிபதி டிங்கிரிபண்டா விஜேதுங்க அவர்கள் அனுப்பிய கெலியில் கல்முனையிலிருந்து கொழும்பு இறத்மலானை விமான நிலையத்தில் வந்திறங்கினார். இறத்மலான விமான நிலையத்தில் வந்திறங்கிய அஷ்ரப் அவர்களை கொழும்புக்கு ஏற்றிச் செல்வதற்காக சந்திரிக்காவும் கார் அனுப்பியிருந்தார், காமினி திஸ்ஸாநாயக்காவும் கார் அனுப்பியிருந்தார். இந்த நிலையில் கெலியை விட்டு இறங்கிய அஷ்ரப் அவர்கள் நேராக சென்று சந்திரிக்கா அம்மையார் அனுப்பிய காரில் ஏறி அமர்ந்து கொண்டார். அத்தோடு கதை முடிவுக்கு வந்தது.
இதன் பின் சந்தரசேகரன் எம்பியும் சந்திரிக்காவுடன் இணைந்து கொண்டார். அதனால் சந்திரிக்கா பிரதமரானார் என்பது வரலாறு. அதன் பின் என்ன நடந்தது என்பதை வேறொரு சந்தர்ப்பத்தில் எழுதுகின்றேன்.
இதனால்தான் சொல்லுகின்றோம் ஆட்சியமைக்க பேரம்பேசுதல் என்பதை ஆரம்பித்து வைத்ததே ரணில் விக்கிரம சிங்காவும் அவரது கட்சியுமே என்றால் மிகையாகாது.
இதனால்தான் ரணில் விக்கரமசிங்க அவர்கள் தலைவர் அஷ்ரப்போடு காழ்ப்புணர்ச்சியுடனே நடந்து கொண்டார் என்பதும், அதன் காரணமாகத்தான் தலைவர் அஷ்ரப் அவர்கள் ரணில் றைவராக இருக்கும்வரை அவரது வாகனத்தில் ஏறிவிடாதீர்கள் என்று முஸ்லிம் சமூகத்தைப் பார்த்து கூறியிருந்தார். அதன் உண்மைத்தண்மை அஷ்ரப்புக்கும் ரணிலுக்குமே தெரியும் ரகசியம் என்பதே உண்மையாகும்.
எம்.எச்.எம். இப்றாஹிம்.
கல்முனை..