முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்ரஸின் தலைவருமான ரிசாட் பதியுதீன் அவர்கள் பாராளுமன்றத்திலே தன்னையும், ஜனாதிபதியையும், கோதாபாய ராஜபக்ச அவர்களையும் கொலைசெய்ய திட்டம்போட்டதாக நாமல் குமார என்பவர் கூறியும் எனது பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது என்றும், எனவே எனது பாதுகாப்பையும் உறுதிப்படுத்த சபாநாயகர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறினார்.
இதில் வேடிக்கை என்னவென்றால்,.. ஜனாதிபதி மைத்ரி அவர்கள் இதே காரணத்துக்காகவே ரணிலை எதிர்க்க துவங்கினார் என்பதை மூடிமறைத்துவிட்டு, ரணிலின் பிரதமர் பதவியை ஜனநாயகமற்ற முறையில் பறித்துவிட்டார் ஜனாதிபதி என்று கூறி, அந்தக் கொலைமுயற்சியை மூடி மறைக்க முற்படுகின்றார்கள். அது ஏன் என்றுதான் புரியவில்லை.
உண்மையில் ஜனாதிபதியையும், ரிசாட் பதியுதீனையும் மற்றும் பலரையும் கொலை செய்ய முற்பட்டது உண்மையென்பதனால்தானே ரிசாட் பதியுதீ்ன் அவர்கள் தனது பாதுகாப்பையும் உறுதிப்படுத்துமாறு கோருகின்றார் என்பதுதானே உண்மையாகும்.
இந்தக் கொலைமுயற்சி நடந்தது உண்மை என்பதனால்தானே ஜனாதிபதி மைத்ரியும் தனது பாதுகாப்புக்காக அதனோடு சம்பந்தப்பட்டவர்களை எதிர்க்க துவங்கினார் என்பதுதானே உண்மையாகவும் இருக்கமுடியும்.?
அப்படி கொலை செய்ய முற்பட்டது உண்மையென்றால், அந்த கொலை முயற்சிக்கு பின்னால் ரணில் விக்கிரமசிங்க, சரத்பொன்சேகா போன்றோர் இருந்தனர் என்றுதானே அந்த நாமல் குமார பகிரங்கமாக கூறிவருகின்றார்.
நிலைமை அப்படியிருக்கும்போது ஏன் ரிசாட் பதியுதீன் அவர்கள் தன்னுடைய பாதுகாப்பைக் கோரும் அதேநேரம், அந்தக் கொலைமுயற்சிக்கு பின்னாலிருக்கும் ரணில் அவர்களின் பின்னால் ஏன் நிற்கவேண்டும் என்ற வினா எழுகின்றது அல்லவா?
கொலை முயற்சிக்கு பயந்து நீங்கள் பாதுகாப்பு தேடலாம் என்றால், அதே கொலைமுயற்சிக்கு பின்னாலிருந்தவர்களின் பின்னால் ஏன் நிற்கவேண்டும்?
இந்த கொலைமுயற்சிக்கு பயந்துதானே ரிசாட் அவர்கள் பாதுகாப்பு கேட்கின்றார் என்கின்றபோது, ஏன் ஜனாதிபதியும் தனது பாதுகாப்புக் கருதி சில நடவடிக்கைகளை எடுக்கக்கூடாது என்று கேட்கத் தோன்றுகிறது அல்லவா?
ஜனாதிபதி கூறும் அந்தக் கொலைமுயற்சி பொய்யானது என்றால், ரிசாட் பதியுதீன் அவர்கள் ஏன் அதனை உண்மையென்று நம்பி பாதுகாப்பு கேட்கவேண்டும்?
ஆகவே ஜனாதிபதி மைத்ரி அவர்கள் ரணில் அவர்களை இப்படி படுமோசமாக வெறுப்பதற்கான காரணத்தில் இதுவும் ஒன்று என்பதை நீங்கள் புரிந்து கொண்டால், நிச்சயமாக ஜனாதிபதி மைத்ரியின் பக்கமே நீங்கள் நியாயம் இருப்பதாக கூறியிருக்கவேண்டும்.
அப்படிக் கொலை செய்ய முயற்சித்த விடயம் உண்மையென்றால், ஏன் அதற்கு பின்னாலிருந்து இயக்கிய கூட்டத்தின் பக்கம் நீங்கள் நிற்கவேண்டும்? என்ற கேள்விகளுக்கு விடை கிடைக்குமா என்று தெரியவில்லை.