Ads Area

ஏறாவூரிலும் விடுமுறை காலத்தில் டியூஷன் வகுப்புக்கள் நடாத்த தடை விதிப்பு.

தகவல் - அஹமட் மொஹமட்.

ஏறாவூர்ப் பிரதேசத்தில் அடுத்த இரண்டு வாரங்களுக்கு பிரத்தியேக வகுப்புக்கள் மற்றும் மதரசாக்களை நடாத்துவதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு பள்ளிவாயல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் விசேட வேண்டுகோள் விடுத்துள்ளது.

எதிர்வரும் 17 ஆந்திகதி முதல் பிரத்தியேக வகுப்புக்களையும் 24 ஆந்திகதி தொடக்கம் அல்- குர்ஆன் மதரஸாக்களையும் இடைநிறுத்தம் செய்து மாணவர்களுக்கு ஓய்வினை வழங்குமாறு சம்மேளனத்தின் தலைவர் அஷ்ஷேக் எம்.எல்.ஏ. வாஜித் கேட்டுள்ளார்.

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பாடசாலைத் தவணைக்காலம் ஆரம்பமாகும் வரை பிரத்தியேக வகுப்புக்களை நடாத்தவேண்டாம் என அவர் தனது வேண்டுகோளில் தெரிவித்துள்ளார்.

தொடர்ச்சியாக கற்றல் நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் மாணவர்களுக்கு உளவியலாளர்களது ஆலோசனைப்படியே விடுமுறைகள் சிபாரிசு செய்யப்பட்டுள்ளன. அதனடிப்படையிலேயே பாடசாலை மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்படுவதுண்டு.

ஆனபோதிலும் பிரத்தியேக வகுப்புக்கள் மற்றும் மதரசாக்களை நடாத்துவதனால் மாணவர்கள் உடல் ,உள ஓய்வின்றி செயற்படவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுவது பிள்ளைகளது ஆரோக்கியத்திற்கு உகந்ததாகக் கருதமுடியாதுள்ளது.

விடுமுறைக்காலங்களில் மாணவர்கள் ஓய்வெடுக்கவும் உல்லாசப்பயணங்கள் செய்யவும் அனுமதிக்கப்படவேண்டும். அவ்வாறான நிலையிலேயே சிறப்பான சமுதாயத்தைக் கட்டியெழுப்ப முடியும் என்பது எதிர்பார்ப்பாகும் என சம்மேளனத்தின் தலைவர் மௌலவி வாஜித் கேட்டுள்ளார்.






Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe