Ads Area

கொழும்பில் ஓரினச் சேர்க்கையாளர்கள் அமைதி ஆர்ப்பாட்டம்.


ஓரினச் சேர்க்கையாளர்கள் குறித்து ஜனாதிபதி சிறிசேன அண்மையில் வெளியிட்ட கருத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் ஜனாதிபதியின் தலைமையில் நாடாளுமன்ற மைதானத்தில் நடைபெற்ற மக்கள் கூட்டத்தில் உரையாற்றியிருந்த ஜனாதிபதி சிறிசேன,முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பாலினத்தை ஓரினச் சேர்க்கையாளர்களுடன் ஒப்பிட்டு கிண்டலாக கருத்து வெளியிட்டிருந்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதியிலிருந்து மேற்கொண்டுவருகின்ற ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கொழும்பில் இன்றைய தினம் ஓரினச் சேர்க்கையாளர்கள் அமைதி ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளனர்.

கொழும்பு லிப்டன் சுற்று வட்டத்தில் இன்று மாலை இந்த அமைதிப் போராட்டம் ஆரம்பமாகியது.கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதியிலிருந்து வந்த 50க்கும் மேற்பட்ட ஓரினச் சேர்க்கையாளர்கள் இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.

அதேவேளை, மனித உரிமை ஆர்வலர்கள், வெளிநாட்டுப் பிரஜைகள் ஆகியோரும் ஓரினச் சேர்ககையாளர்களின் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து போராட்டக் களத்தில் இணைந்து கொண்டமை இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவிக்கையில், “கடந்த காலங்களில் ஜனநாயகத்தைக் கோரி ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன. 

ஆனால் இந்த ஆர்ப்பாட்டமானது ஓரினச் சேர்க்கையாளர்களால் ஏற்பாடு செய்யப்பட்டதாகும்.ஜனாதிபதி ஓரினச் சேர்க்கையாளர்களை இழிவுபடுத்தும் வகையில் வெளியிட்ட கருத்திற்கு எதிராகவே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. ஜனநாயகமானது மிகவும் ஆழமானது.யார் பிரதமர், யாருக்கு பெரும்பான்மை என்ற பிரச்சினை கிடையாது. இலங்கையில் பல்வேறு இனத்தவர்களிடையே பாலின உரிமையை மதிப்பதே ஜனநாயகமாகும்.” என கூறியிருந்தனர்.
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe