பொக்கிஷங்களைப் பாதுகாக்க பொங்கி எழுகின்ற இன்றைய சமூகத்தினரை நாம் பாராட்ட வேண்டும். இதே நேரம் வரலாற்றுச் சான்றுகளை கூறுபோட முனைபவர்களையும் தடுக்க வேண்டும். இருந்தபோதிலும் இல்லாதொன்றை சித்திரம் வரைந்து சான்று படைக்க முனைவது எவ்வகையில் நியாயம்!...
நான் சொல்ல வருவது புரிவதற்கு கடினமாக இருக்கும், சில வேளை புரிதலுக்கு கசப்பாக இருக்கும், அதே நேரம் புரிந்துகொள்ள சில ஆட்சி மோகங்கள் தடுப்புச் சுவராய் அமையும். இவை போன்ற அற்ப குணங்களை அடி மனதில் விதைகளாக்கி அல்லோலகல்லோலப்படும் சில ஆவேச சமூகவாதிகளிக்கு இக் கட்டுரை சமர்ப்பணம்.
அதாவது, இற்றைக்கு 3 நாட்களாக ‘சம்மாந்துறையின் சரித்திரம் அழிக்கப்படுகின்றது’, “ஊரின் அடையாளம் உடைக்கப்படுகின்றது’, ‘அன்றையஎம்.பி.க்களிடம் இருந்த ஊர் பற்று இன்றைய தவிசாளரிடம் இல்லாமல் போய்விட்டது’ என்றெல்லாம் பல கோஷங்கள்.
மணிக் கூட்டுகோபுரத்தின் அடியிலுள்ள பகுதி உடைக்கப்படுகின்றது. இது தான் ஆரம்பம்! இருந்தால் இதன் பின்னூட்டம் தெரியாமல் பல்வேறு வசை பாடல்கள்.
உண்மைதான், இவ்வாறான செயற்பாட்டை ஊர்ப்பற்றுள்ள எந்த மகனும் பார்த்துக் கொண்டு இருக்கமாட்டான், பொங்கி எழுவான்!
எது எவ்வாறாக இருந்தாலும், குறிப்பிட்ட விடயம் சம்பந்தமான தெளிவுக்காக பிரதேச சபையின் உயர் மட்டங்களுடன் தொடர்பு கொண்டு சில விளக்கங்களை கோரியதில் இவ்வாறான பதில் கிடைத்தது,
சம்மாந்துறை ஹிஜ்ரா சந்தி சுற்றுவட்டம் பரப்பளவில் சிறியது, வாகனங்கள் திரும்பும் போது பல விதமான விபத்துகளுக்கு உள்ளாகும் வாய்ப்பு அதிகம், கனரக வாகனங்கள் திருப்புவது மிகவும் கடினம்.
இப்படி பல விடயங்களைக் கருத்தில் கொண்டு, காலத்தின் தேவை கருதியே இச் சுற்று வட்டத்திலுள்ள வளைவுக் கம்பிகளை அகற்றிவிட்டு நவீனத்துவமான முறையில் பாதகங்களை உருவாக்காத அமைப்பில் சுற்றுவட்டத்தின் சுற்றுப் புறத்தை அழகுபடுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்தார்கள்.
மேலும், இந் நடவடிக்கை மேற்கொள்ள முன்னர் இது விடயமாக எமதூரின் சில பொறியியலாளர்களுடனும் கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது. அவர்களும் இத் திட்டத்துக்கு ஆதரவளித்து ஆலோசனைகளை வழங்கியுள்ளனர்.
இக் கலந்தாலோசிப்பில் சம்மாந்துறையின் அரசியல் வரலாற்றில் தடம்பதிக்க ஆவலுடன் அறிக்கைகள் விடுகின்ற ஒரு சில பொறியியலாளர்களின் ஆலோசனைகளும் பெறப்பட்டுள்ளது.
இவ்வாறு இந்த நடவடிக்கையின் பின்னணியில் பல்வேறு உள்வாரியான தூர நோக்குகள் இருப்பதை உணர்ந்து எவ்வித அரசியல் பாகுபாடுகளுமின்ற இந்த விடயத்தை முன்வைக்கலாம் என முனைகின்றேன்.
மேற்கூறிய கருத்தாடல்களின் பின்னணியில் சிந்திக்கும் போது, விளக்கமற்ற குழப்பத்தில் தான் பலரும் வியாக்கணம் புரிந்து கொண்டிருக்கின்றனர் என்பதை தெளிவாக உணர முடிகின்றது.
.
ஒரு விடயத்தை சிந்தியுங்கள் எமதூரின் அபிவிருத்தியில் அக்கறை கொண்டு அதிவேக வீதியாக மாற்றுவதற்கு மர்ஹ_ம் அமைச்சர் அன்வர் இஸ்மாயில் முதல் இந் நாள் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ எம்.ஐ.எம். மன்சூர் வரை எவ்வளவு முயற்சி செய்தும் குறித்த பிரதேச மக்களின் நலன் கருதி அவ்வாறான அபிவிருத்திகள் முட்டுக்கட்டைகளாக இன்றும் இருக்கின்றன.
இப்படி பல விடயங்களை திண்ணவும் முடியாமல், முழுங்கவும் முடியாமல் பலதையும் சிந்தித்து பல விடயங்களையும் கைவிட்ட நிலையில் எமது அரசியல்வாதிகள் திண்டாடிக் கொண்டிருக்கின்றனர்.
இந்த விடயங்கள் அரசியலுக்கு அப்பால் மனிதாபிமான வடிவில் சதாரணமாக எம்மில் எத்தனை பேருக்கு தெரியும்!
அது போன்றதொரு விமர்சனத்திற்குரிய விடயம்தான், தற்போது புணரமைப்புக்கு எத்தணிக்கப்பட்டுள்ள மணிக்கூட்டுக் கோபுர விடயம்.
எது எப்படியோ இத் திட்டத்தினை பொறுத்த வரையில் எதிர்காலத்தின் நன்மை கருதியும், கால சூழலுக்கு ஏற்றாற்போலும் புணரைமைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் மணிக்கூட்டுக் கோபுர விடயம் சரி என்பதே எனது வாதம்!...
(இதற்கு பல சான்றுகள் உண்டு)
இச் சந்தர்ப்பத்தில் ஒரு விடயத்தை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். அதாவது, 1993 ஆம் ஆண்டளவில் அமைக்கப்பட்ட மணிக்கூட்டுக் கோபுரம் சற்று புனர்நிர்மாணம் செய்யப்படுவதில் வரலாறு அழியுதென்றால், ஆண்டாண்டு கால பொக்கிஷமான சம்மாந்துறை பெரிய பள்ளிவாசலின் அத்திவாரம் வரை உடைத்து, இன்று பழையை அமைப்பின் நிழல் கூட இல்லாமலாக்கப்பட்டபோது இந்தக் கிளர்ச்சியாளர்கள் எங்கிருந்தார்கள்…?!
✍️ கியாஸ் ஏ. புஹாரி