(காரைதீவு நிருபர் சகா)
கல்முனை மாநகரசபையை பல துண்டுகளாக கூறுபோடுவதற்கு அங்குவாழும் தமிழ்மக்கள் உடன்பாடில்லை
இவ்வாறு இலங்கை தமிழரசுக்கட்சியின் மூத்தஉறுப்பினரும் முன்னாள் கல்முனை மாநகரசபையின் எதிர்க்கட்சித் தலைவருமான குஞ்சித்தம்பி ஏகாம்பரம் (வயது84) கூறினார்.
கடந்த 26ஆம் திகதி கொழும்பில் கல்முனை மாநகரசபை மற்றும் சாய்ந்தமருது விவகாரம் தொடர்பாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர கூட்டிய கூட்டத்திற்கு மு.கா. மற்றும் அ.இ.ம.கா. மட்டுமே அழைக்கப்பட்டன. ஆனால் அப்பிரதேசத்தினுள் வாழ்ந்துவரும் தமிழ்மக்களின் பிரதிநிதிகளை அழைக்காதது வேதனைக்குரியது. கல்முனைமாநகரசபை விவகாரம் என்பது தனியே முஸ்லிம்கள் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல தமிழர்களுக்கும் சம்பந்தமானது என்பதை மறந்துவிடக்கூடாது என்று உரத்ததொனியில் தெரிவித்தார்.
ஒருவேளை கல்முனை மாநகர சபையிலிருந்து சாய்ந்தமருது தனியான நகரசபையாக பிரித்து உருவாக்கப்படுமானால் ஏனைய பிரதேசங்கள் அனைத்தும் இணைந்து ஒரு தனியான மாநகரசபையாக இருக்கவேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும் என்றார்.
அவர் மேலும் கூறுகையில்:
எனவே சாய்ந்தமருது நகரசபையானால் ஏனையபிரதேசங்கள் ஒரு மாநகரசபையாக இருக்கவேண்டுமே தவிர 3ஆக 4ஆக கூறுபோட அனுமதிக்கமுடியாது. அப்படிக்கூறுபோட்டால் தமிழர்கள் இருந்ததையும் இழந்தாய் போற்றி என்ற துர்ப்பாக்கியநிலைக்கு ஆனாகிவிடுவோம்.
தற்போது கல்முனை மாநகரசபையில் முஸ்லிம்கள் 70வீதமும் தமிழ்மக்கள் 30வீதமும் வாழ்ந்துவருகின்றனர். ஒருவேளை சாய்ந்தமருது பிரிந்தாலும் மீதிப்பிரப்பில் முஸ்லிம்கள் 60வீதமும் தமிழர்கள் 40வீதமும் இருப்பார்கள். ஆக முஸ்லிம் மக்களே கூடுதலாகவே இருப்பார்கள்.
ஆனால் சிலமுஸ்லிம் அரசியல்தலைமைகள் சாய்ந்தமருது பிரிந்தால் கல்முனைமாநகரம் தமிழர்களின் கைக்குப்போய்விடும் என்று பூச்சாண்டி காட்டுகிறார்கள். அதற்கு பெரும்பாலான முஸ்லிம்கள் துணைபோகமாட்டார்கள்.
எந்தக்காலத்திலும் தமிழர்கள் பள்ளிவாசல்களை உடைக்கவில்வை தடயங்களை அழிக்கவில்லை மையவாடிகளை சொர்க்காபுரிகளாக மாற்றவில்லை குளங்களைநிரப்பி தமிழர்க்குக்கொடுக்கவில்லை அவர்கள் பகுதியில் ‘தமிழர்பாத்’ அமைக்கவுமில்லை.எனவே இதுவிடயத்தில் முஸ்லிம்கள் எள்ளவும் அஞ்சத்தேவையில்லை
விரும்பாவிட்டால் நாம் விழிப்புடன் வீதிக்குவரவேண்டிய தேவை ஏற்படும்.