இன்று மிக அதிகமாக தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட இஸ்லாமிய மரபுச்சொல் ஜிஹாதாகத்தான் இருக்க வேண்டும். ஜிஹாத் என்றாலே மற்ற மதத்தவர்களைக் கொல்லுதல்; தாக்கி அழித்தல்; அவர்கள் மீது போர் தொடுத்தல் என்கிற ரீதியில் ஒரு தவறான கருத்தோட்டம் நிலை பெற்றிருக்கிறது. இந்த தவறான புரிதலுக்கும், கருத்தாக்கத்துக்கும் பல்வேறு காரணங்களும் பின்னணிகளும் இருக்கின்றன. மேற்கத்திய மீடியாக்களின் சளைக்காத பிரச்சாரமும் இதற்கு ஒரு காரணம். இஸ்லாத்தை முஸ்லிம்களே சரியாக விளங்கிக் கொள்ளாமல் இருப்பதும் ஒரு காரணம்.
'முயற்சித்தல்' எனப் பொருள்படும் 'ஜஹத' எனும் அரபி மூலச்சொல்லிலிருந்து பிறந்ததுதான் 'ஜிஹாத்' எனும் பதம். இச்சொல்லுக்கு 'அயராத போராட்டம்', 'விடா முயற்சி', 'கடின உழைப்பு' என்றெல்லாம் பொருள் உண்டு. குர்ஆனில் 'ஜிஹாத்' என்ற சொல் பல இடங்களில் நான்கு விதமான அர்த்தங்களில் இடம் பெற்றுள்ளது.
1. இணைவைப்பவர்கள், நயவஞ்சகர்களுடன் போர் புரிதல்.
2. வழிகேட்டில் இருப்பவர்களுடன் போர் புரிதல்.
3. தனது மனோஇச்சையுடன் போர் புரிதல்
4. இறைவன் காட்டிய நேர்வழியில் நடக்க முயற்சித்தல், அல்லது போராடுதல்.