Ads Area

கல்முனை விடையத்தில் அமைச்சர் ஹரீஸ் மட்டும் மோதுகிறார் மற்றவர்கள் கைகட்டி வேடிக்கை.

அரசியல் வேற்றுமைகளை மறந்து ஒற்றுமையாய் பயணிக்க வேண்டிய காலகட்டத்தில் அமைச்சர் ரிஷாட் உட்பட அவரது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கல்முனை விடயத்தில் மௌனமாக இருப்பது கல்முனை முஸ்லிம் மக்களிடையே அச்சத்தையும், சந்தேகத்தையும் ஏற்படுத்துகிறது.

2019க்கான பட்ஜட்டை ஆதரிப்பதானால் கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தி தருமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரதமர் ரணில் அவர்களிடம் அழுத்தம் கொடுத்து வரும் சூழ்நிலையில் இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் அவர்களின் தலையீட்டின் காரணமாக தற்போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் கள்ளத்தனமான இச் செயல்பாடு வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.

இந்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் அவர்கள் தனது வழமையான பாணியில் மிக மோசமான முறையில் பாராளுமன்றத்தில் விமர்சிப்பதையும் அவரின் விடாப்பிடியான நிலைப்பாட்டை ஆதரிக்கும் வகையில் "பட்ஜட்"மீதான மூன்றாவது வாக்கெடுப்பிற்கு முன்னதாக கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தி தரவேண்டும் எனவும் இன்று பாராளுமன்றத்தில் மாவை சேனாதிராஜா அவர்கள் ஆவேசமாக உரையாற்றியதையும் பார்க்கின்ற போது முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இவ்வரசாங்கத்தில் பலவீனமானவர்களாக இருக்கிறார்களா? என்ற கேள்வியும்,சந்தேகமும் எழும்புகிறது. 

பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் இதுவரை முறையான வர்த்தமானி அறிவித்தல் செய்யப்படாத நிலையில் "ஆயுதமுனையில்" கொண்டு செல்லப்பட்டு சட்டவிரோதமான முறையில் இயங்கிவரும் கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தி தருமாறு கோறும் தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் வீரியத்திற்கு ஈடு கொடுக்க முடியாதவர்களாக முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருப்பது வெட்ககேடானதாக மக்கள் பார்க்கிறார்கள்.

ஆளும் அரசின் பங்களிகளான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸினீ பாராளுமன்ற உறுப்பினர்கள் 11 பேர் இருக்கிறார்கள். ஆனபோதும் இந்த விடயத்தில் இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் அவர்களை மாத்திரம் மோதவிட்டு மற்றயவர்கள் வேடிக்கை பார்ப்பது மிகப் பெரிய காட்டிக்கொடுப்பாகும்.

சமூகத்தின் காவலனாக தன்னை அடையாளப்படுத்த முயற்சிக்கும் அமைச்சர் றிஷாட் பதியுதீன் அவர்கள் மாத்திரம் அல்ல, அக்கட்சியின் பிரதானிகளான பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளுர் பிரமுகர்கள் உட்பட, ஏன்? கல்முனை மாநகர சபையின் உறுப்பினர்கள் கூட இதுவரை தங்களுடைய நிலைப்பாடு குறித்து எதுவும் போசாமலிருப்பது மிகவும் வேதனையளிக்கிறது.

எனவே உங்கள் அரசியல் கருத்து வேறுபாடுகளால் கல்முனை மாநகரம் சிதைக்கப்படுவதை தயவுசெய்து அனுமதிக்காதீர்கள். காலத்தின் தேவை கருதியும் கல்முனை மக்களின் இருப்புக்காகவும், ஒற்றுமையாக செயல்பட வேண்டிய காலத்தின் கட்டாயத்தை உணர்ந்து செயல்படுமாறும், கல்முனை முஸ்லிம்களின் அச்சத்தை கலையும் விதமாக இவ்விடயத்திற்காக குரல் எழுப்புமாறும் கல்முனை மக்கள் சார்பாக வேண்டுகின்றோம்.

அஹமட் புர்க்கான் 
கல்முனை
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe