Ads Area

டக்ளஸ் தேவானந்தாவை கொல்ல வந்த பெண் தற்கொலைதாரி முகத்திரையிட்டு-ஹபாயா அணிந்தா வந்தார்..??

மக்கள் நண்பன் - சம்மாந்துறை அன்சார்.

இலங்கையில் கடந்த 21ம் திகதி இடம் பெற்ற மிலேச்சத்தனமான தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் பின்னர் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பேசுப்பட்டுக் கொண்டிருக்கும் விடையம் முஸ்லிம் பெண்களின் ஆடை விவகாரமாகும். தற்போது முகத்திரையிடும் விவகாரத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தடையேற்படுத்தியிருப்பது இதனை மேலும் பேசுபொருளாக ஆக்கியுள்ளது.

இலங்கை முஸ்லிம் பெண்களில் பலர் கருப்பு நிறத்திலான ஹபாயா என்ற ஆடையினை அணிவது வழமை அதனோடு சேர்த்து சில பெண்கள் முகத்துக்கும் திரையிட்டுக் கொள்வதுண்டு, சிலர் முகத்திரையிடாமல் ஹபாயா மாத்திரம் அணிவதுண்டு.

முஸ்லிம் பெண்கள் முகம் மூடுவது அவர்களின் விருப்பத்துக்குரியதே அன்றி இஸ்லாமிய சமூகத்தினால் பெண்கள் மீது திணிக்கப்பட்டதோ அல்லது கட்டாயமாக்கப்பட்டதோ கிடையாது இஸ்லாமியர்கள் பின்பற்றும் வேதநுால்களிலும் முகம் மூடுவது சம்பந்தமாக எந்தவித கட்டளையும் இடப்படவில்லை ஒரு முஸ்லிம் பெண் தனது சுயவிருப்பத்தின் அடிப்படையில் முகத்தை மூடிக் கொள்ள விரும்பினால் மூடிக் கொள்ளலாம், திறந்திருக்க விரும்பினால் திறந்து கொள்ளலாம் இந்த நிலைப்பாட்டில் இலங்கை முஸ்லிம்களிடத்தில் மாற்றுக் கருத்துக்கள் இல்லை.

நாட்டின் பாதுகாப்புக் கருதி முகத்தை மூடாமல் நாட்டின் சட்டதிட்டத்திற்கு கட்டுப்பட்டு நடக்கவும் முஸ்லிம்கள் தடையாக இருக்கப் போவதில்லை.

இது இப்படியிருக்க இங்கு எழுந்துள்ள கேள்விகளும் பிரச்சினைகளும் என்னவென்றால் கடந்த 21ம் திகதி இடம் பெற்ற அத்தனை தற்கொலைக் தாக்குதல்களும் முஸ்லிம் பெயர் தாங்கிகளால் நடாத்தப்பட்டாலும் அவர்கள் ஹபாயா அணிந்து கொண்டா தாக்குதல் நடாத்தினார்கள்...??? அல்லது முகத்தை மூடிக் கொண்டா தாக்குதல் நடாத்தினார்..?? இல்லையே எல்லாவற்றுக்கும் மேல் தாக்குதல்கள் நடாத்தியவர்கள் ஆண்கள்தானே அப்படியிருக்க நடைபெற்ற தாக்குதலை முஸ்லிம் பெண்களின் ஆடையோடு சம்பந்தப்படுத்திப் பேசுவது எந்தவிதத்தில் நியாயம்...??

இந்த நாடு சந்தித்த கடந்த 30 வருட தீவிரவாதத்தில் இந்த நாட்டில் எத்தனை அப்பாவி உயி்ர்கள் பலியெடுக்கப்பட்டுள்ளது, எத்தனை அரச அதிகாரிகள், அரசியல் தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள், எத்தனை தற்கொலைத் தாக்குதல்கள் நடைபெற்றுள்ளது இவைகள் அத்தனையும் முகத்திரை அணிந்து கொண்டு, ஹபாயா அணிந்து கொண்டா நடாத்தப்பட்டது..? நி்ச்சயமாக இல்லை.

2000ம் ஆண்டு ஜனவரி 5ம் திகதி  விடுதலைப் புலிப் பெண் தற்கொலைக் குண்டுதாரியால் நடாத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 12பேர் வரை கொல்லப்பட்டும் 24 பேர் காயமுற்றுமிருந்தனர்.

2004ம் ஆண்டு ஜீலை மாதம் 7ம் திகதி விடுதலைப் புலி பெண் தற்கொலைக் குண்டுதாரியால் கொழும்பு கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் நடாத்தப்பட்ட தாக்குதலில் 5 படையினர் கொல்லப்பட்டனர். முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகத்திற்கு முன் சந்தேகத்திற்கிடமான முறையில் திரிந்த  பெண்னை அமைச்சின் அலுவலகத்திற்கு முன் உள்ள  கொழும்பு கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து விசாரிக்கும் போதே அப் பெண் குண்டை வெடிக்கச் செய்திருந்தார்.

2006ம் ஆண்டு ஏப்ரல் 25ம் திகதி நடைபெற்ற தற்கொலைக் தாக்குதலில் 10 படையினர் உட்பட பொதுமக்களும் கொல்லப்பட்டனர் இதில் இராணுவத் தளபதி லெப்டினென்ட் ஜெனரல் சரத் பொன்சேகா படுகாயமடைந்து உயிர் தப்பியிருந்தார். இத் தாக்குதலை மேற் கொண்டது கர்ப்பிணிப் பெண் போன்று மாறுவேடமிட்டு வந்த விடுதலைப் புலிப் பெண் தற்கொலைதாரியாகும்.





2007ம் ஆண்டு  அப்போதைய சமூக சேவைகள் அபிவிருத்தி அமைச்சராகவிருந்த டக்களஸ் தேவானந்தாவை மீண்டும் குறித் வைத்து அமைச்சின் அலுவலகத்திலேயே நடாத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 18 பேர் வரை கொல்லப்பட்டு அமைச்சர் மயிரிழையில் உயிர் தப்பியிருந்தார். இந்தத் தற்கொலைத் தாக்குதலை மேற்கொண்டதும் விடுதலைப் புலிப் பெண் தற்கொலைக் குண்டுதாரியாகும்.





விடுதலைப் புலிப் பயங்கரவாதம் கோரத்தாண்டவம் ஆடிய 30 வருடகால கட்டத்தில் பெண் தற்கொலைக் குண்டுதாரிகளால் நடாத்தப்பட்ட மேற்குறிப்பிடப்பட்டுள்ள எந்தத் தாக்குதல்களிலும் தாக்குதல் நடாத்திய பெண் தனது முகத்திற்கு முகத்திரையிடவில்லை, கருப்பு நிற ஹபாயாக்கள் அணிந்திருக்கவில்லை, பாத்திமா-ஆயிஷா போன்ற முஸ்லிம் நாமங்கள் கொண்டவர்கள் அல்ல அப்படியிருக்க தற்போது இலங்கையில் நடைபெற்ற தாக்குதலை மாத்திரம் முஸ்லிம்களின் ஆடையோடு சம்பந்தப்படுத்திக் திட்டமிட்ட சதிகள் அரங்கேற்றப்படுவது இந்த நாட்டில் வாழும் முஸ்லிம்கள் மீது கொண்ட காழ்ப்புணர்ச்சியினையே காட்டுகின்றது.

தீவிரவாதத்திற்கு எப்படி மதம்-இனம்-மொழி-பிரதேசம் கிடையாதோ அப்படியே ஆடைக்கலாச்சாரமும் கிடையாது. ஒரு இனத்தின் ஆடைக்கலாச்சாரத்தை தீவிரவாதக் கண்னோடு பார்ப்பது கொஞ்சமும் ஏற்புடையதல்ல.

முஸ்லிம் பெண்கள் முகம் மறைப்பது கட்டாயமல்ல விரும்பத் தக்கதே இவற்றுக்கு அப்பால் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள இந்த சட்டத்தின் மூலம் பயங்கரவாதமும் தீவிரவாதமும் தோற்கடிக்கப்பட்டது என்பதை விட, ஒரு சமூகத்தினரின் ஆடைக்கலாச்சாரத்துக்கு எதிரான மதவாதம் வெற்றி கண்டுள்ளது என்பதே உண்மை.


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe