அன்சார் காசீம்.
நாட்டின் இன்றைய அசாதாரண சூழ்நிலையில் மக்கள் அனைவரும் விழிப்புடன் செயற்பட வேண்டுவதுடன், சட்டத்தினை மதித்து பாதுகாப்புத் தரப்பினரின் பாதுகாப்பு சார்ந்த வேலைத்திட்டங்களுக்குப் பொது மக்கள் தங்களின் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டியது அவசியமாகும். அவ்வாறு ஒத்துழைப்பு வழங்கி செயற்படுவதன் ஊடாகவே தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும். என திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர் தெரிவித்தார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை தொடர்பாக சம்மாந்துறை பிரதேச செயலகப் பிரிவில் கடமையாற்றும் கிராம சேவையாளர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு பாதுகாப்பு நிலவரம் தொடர்பாக விளக்கமளிக்கும் விசேட கூட்டம் நேற்று (29) பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் சம்மாந்துறை பிரதேச செயலக உதவிச் செயலாளர் எம்.எம். ஆசீக் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையிலே – நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பாக அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதன் ஊடாக மக்கள் அனைவரும் விழிப்புடன் இருப்பது அவசியமாகும்.
இயேசு பிரான் உயிர்த்தெழுந்த புனித ஞாயிறன்று அப்பாவி மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தொடர் குண்டுத் தாக்குதல்கள் மிலேச்சத்தனமானதும், மனித நாகரீகத்தைக் கேள்விகுள்ளாக்குவதாக அமைந்து காணப்படுகின்றதுடன், மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும்.
மிலேச்சத்தனமான குண்டுத் தாக்குதல்களை நடத்தி அப்பாவி உயிர்களை காவுகொண்ட தீவிரவாதக் குழுக்களை பூண்டோடு அழிப்பதற்கு அனைவரினதும் ஒத்துழைப்பு அவசியமாகும்.
பயங்கரவாதிகளினால் நிகழ்த்திய இச்சம்பவங்களினால் இன்று முஸ்லிம் சமூகம் அச்சமும், பதட்டமும் அடைந்துள்ளது. முழு முஸ்லிம்களையும் பயங்கரவாதிகளாகப் பார்க்கின்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. ஆனால் முஸ்லிம்கள் இந்த நாட்டின் ஐக்கியத்திற்காகவும், தேசிய ஒற்றுமைக்கும் பாடுபட்டவர்கள் என்பது வரலாற்றுப்பதிவாகும்.
நாட்டின் பாதுகாப்பு பிரிவுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையிலும், மக்களின் பாதுகாப்பு கருதியும் எமது முஸ்லிம் பெண்கள் “புர்கா” ஆடை அணிந்து பொது இடங்களுக்கு செல்வதனை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.