அன்சார் காசீம்.
முஸ்லிம்களுக்கான அநீதிகளுக்கு தீர்வு வழங்கப்படாத நிலையில் கல்முனை வடக்கு தமிழ் உப பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படுமானால் அது கல்முனையில் பெரும்பான்மையாக வாழும் முஸ்லிம்களுக்கு பாரிய இழப்பை ஏற்படுத்துவதுடன், அவர்களின் பொருளாதாரமும் கேள்விக்குறியாக ஆக்கிவிடும். என திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர் தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையிலே - இந்நடவடிக்கையானது இலங்கை முஸ்லிம் சமூகத்தின் அரசியல், பொருளாதாரத்தை பலமிழக்கச் செய்து நமது தேசியத்தை சிதைப்பதற்கு வழிவகுக்கும்.
கல்முனை தென்கிழக்கின் முகவெற்றிலையாகும். முஸ்லிம்களைப் பெரும்பாண்மையாகக் கொண்டு காணப்படும் ஒரு வர்த்தக பூமியாகும். இதனை விட்டுக்கொடுக்க முடியாது. இவ்விவகாரத்தை முஸ்லிம்களின் தேசியப் பிரச்சினைகளுள் ஒன்றாக கொண்டு சென்று நியாயமாக தீர்வினைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
இந்த பிரதேச செயலகத்தினை தரமுயற்த்துவதற்கு முஸ்லிம்கள் ஒருபோதும் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. எனினும், இந்த உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவதற்காக தமிழ் மக்களினால் முன்வைக்கப்பட்டுள்ள எல்லையே இங்கு சர்ச்சையை ஏற்படுத்துகின்றது.
இந்தவிவகாரத்தை பௌத்த தேரர்கள் கையிலெடுத்து ஒரு மாத காலம் அவகாசம் வழங்கியுள்ள நிலையில் முஸ்லிம்களின் முன்மொழிவை ஒரு பிரகடமான வெளியீட்டு, நியாயமான தீர்வை பெற்றுக் கொள்வதற்கான நகர்வுகளை மேற்கொள்ள வேண்டும். இதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
எனவே, கல்முனை முஸ்லிம்களின் இந்த சாத்வீகப் போராட்டத்திற்கு அனைத்து அம்பாறை மாவட்ட முஸ்லிம் மக்களும், நாட்டில் வாழும் ஏனைய முஸ்லிம்களும் ஆதரவு வழங்க வேண்டும். என்றார்.
இக்கூட்டத்தில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ், பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எஸ்.எம்.எம். இஸ்மாயில், கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி ஏ.எம்.றகீப், கல்முனை பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவர் எஸ்.எம்.ஏ. அஸீஸ், பிரதேச சபை உறுப்பினர்கள், பள்ளிவாசல் தலைவர்கள், கல்விமான்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது சம்மாந்துறை மக்கள் தங்களது தேரவைவினை தெரிவித்தனர்.