(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
தினகரனின் முன்னாள் பிரதம ஆசிரியரும் மூத்த ஊடகவியலாளருமான எஸ். தில்லைநாதனின் மறைவுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியாபோரம் அதன் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துள்ளது.
அமைப்பின் தலைவர் என்.எம். அமீன் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் கூறியிருப்பதாவது,
தமிழ் ஊடகத்துறையில் ஜாம்பவானாகத் திகழ்ந்த தில்லைநாதன், நாட்டில் நூற்றுக் கணக்கான தமிழ், முஸ்லிம் ஊடகவியலாளர்களை உருவாக்குவதற்கு பங்களிப்புச் செய்தார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்துடன் நெருங்கிய உறவை கடைசிவரை பேணிவந்த தில்லைநாதன் ஐயா, முன்னாள் சபாநாயகர் எம்.ஏ. பாக்கீர் மாக்கார், முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். அஸ்வர் உட்பட முஸ்லிம் அரசியல் தலைவர்களுடன் நெருங்கிய உறவைப் பேணிவந்தார்.
தில்லைநாதன் தனது ஐம்பது வருட அனுபவத்தை உள்ளடக்கி தமிழில் வெளியிட்ட நூலானது பாராளுமன்றத்தில் குறிப்பாக தமிழ் - முஸ்லிம் அரசியல் பற்றி பல தகவல்களை வெளிப்படுத்துவதாகவுள்ளது.
1993இல் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது தனியார் வானொலி எம்.எம். 99 இன் தமிழ் பிரிவுக்குப் பொறுப்பாகவிருந்து அவ்வானொலிச் சேவையை ஜனரஞ்சகப்படுத்தினார்.
இவரது மறைவு ஊடகத்துறையில் பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது.