அடுத்த ஜனாதிபதி தேர்தலில் முதன்முறையாக வாக்களிப்போகும் 1.7 மில்லியன் வாக்காளர்களும், கோட்டாபயவின் சர்வாதிகார போக்கை பற்றி அறிந்து கொள்ள வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார் ஐ.தே.கவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்க பிரேமச்சந்திர.
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபயவின் சர்வாதிகார மனநிலைக்கு சிறந்த எடுத்துக்காட்டு, அவரது கூட்டங்களில் செய்தியாளர்கள் கேள்வியெழுப்ப தடைவிதிக்கப்பட்டுள்ளமை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். முன்னைய ஆட்சியில் ஊடக அடக்குமுறை, தணிக்கை, ஊடகவியலாளர்கள் கடத்தப்பட்டமை, பண மோசடி என்பன எந்தளவு ஆழமாக விவகாரமாக இருந்தது என்பதை இதன் மூலம் புரிந்து கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.அலரி மாளிகையில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே ஹிருணிக்கா இதனை தெரிவித்தார்.
முன்னாள் அமைச்சர் மெர்வின் சில்வா சிஐடிக்கு அளித்த அறிக்கையின்படி, பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர், எனது தந்தையை கொலை செய்ய துமிந்தா சில்வாவுக்கு அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. அதைச் சொல்ல நான் பயப்படவில்லை. இருப்பினும், கிராமங்களில் உள்ளவர்களுக்கு அவரைப் பற்றி அதிகம் தெரியாது. வனதமுல்ல, மட்டக்குளிய, பொரல்ல மற்றும் கொலன்னாவவில் வசிக்கும் மக்கள் அவரைப் பற்றி நன்கு அறிவார்கள்.
இந்த பகுதிகளில், முந்தைய ஆட்சியின் போது எந்தவொரு ஐந்து வீடுகளிலிருந்தும் ஒருவரை வெள்ளை வான்களால் கடத்திச் சென்றதாக ஹிருணிக்கா தெரிவித்தார். கடந்த நான்கு ஆண்டுகளில், வரம்பற்ற ஊடக சுதந்திரம் இருந்தது என்றும், பிரதமர் மற்றும் ஜனாதிபதி இருவரும் பெரிதும் குறிவைக்கப்பட்டு விமர்சிக்கப்பட்டனர், குறிப்பாக இணைய அடிப்படையிலான ஊடகங்களில் இது அதிகம் நடக்கிறது.