பொருத்தமற்ற உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகளால் இலங்கையில் பாடசாலை மாணவர்களின் உடல், மனவளர்ச்சியில் பாதிப்பு ஏற்படுவதாக ஆய்விலிருந்து தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் தரமற்ற, துரித உணவுகளை விற்பனை செய்யும் பாடசாலை சிற்றுண்டிச்சாலைகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசத்தை மேற்கோள்காட்டி கொழும்பு ஊடகமொன்று நேற்றைய தினம் குறித்த செய்தியை வெளியிட்டுள்ளது.
அதன்படி, பாடசாலை சிற்றுண்டிச்சாலைகள் தரமான முறையில் நடத்தப்படுகின்றனவா என்பது குறித்து, பொது சுகாதார பரிசோதகர்களின் உதவியுடன் கல்வியமைச்சு கண்காணிக்கவுள்ளது. தற்போது, பாடசாலை சிற்றுண்டிச்சாலைகள் தொடர்பில் தகவல்கள் சேகரிக்கப்படுவதுடன், மூன்றாவது தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பித்த பின் தேவையான தரத்தை பூர்த்தி செய்யாத உணவகங்கள் குறித்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.