Ads Area

சஜித்தை வேட்பாளராக்க பிரதமர் ரணில் விதித்த முக்கிய நிபந்தனைகள்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவை, ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் உயர்மட்ட உறுப்பினர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு இடையிலான முக்கிய சந்திப்பு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அலரிமாளிகையில்   நேற்று (24) இரவு இடம்பெற்றது.

இதன்போதே பிரதமர் இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டதாக அமைச்சர் லக்ஷமன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பில் அமைச்சர் லக்ஷமன் கிரியெல்ல, கபீர் ஹசிம், ரவி கருணாநாயக்க, நவீன் திசாநாயக்க, ரஞ்சித் மத்தும பண்டார, மலிக் சமரவிக்ரம ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

எனினும், எழுத்துமூல ஒப்பந்தம் ஒன்றின் அடிப்படையில் அவரை வேட்பாளராக நிறுத்த ஐக்கிய தேசியக் கட்சியின்  தலைவர் இணங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சஜித் பிரேமதாசவை  வேட்பாளராக நிறுத்துவதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இணங்கியுள்ளபோதிலும், ரணில் விக்ரமசிங்கவே கட்சியின்  தலைவராகவும், பிரதமராகவும் நீடிப்பார் என்ற எழுத்துமூல உத்தரவாதத்தை சஜித் பிரேமதாசவிடம் பெற்றுக் கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதற்கான வாக்குறுதியையும் சஜித் பிரேமதாச வழங்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

நாளை நடக்கவுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் சஜித் பிரேமதாச ஜனாதிபதி வேட்பாளராக முறைப்படி தெரிவு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை நிபந்தனைகளின் அடிப்படையில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடப் போவதில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளதாக கூறப்படுகிறது.

இவ்வாறு நிபந்தனைகள் பற்றி தமக்கு எதுவும் அறிவிக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எந்வொரு காரணத்திற்காகவும் நாட்டையோ, கட்சியையோ, ஐக்கிய தேசிய முன்னணியையோ இழிவுபடுத்தும் வகையில் அவற்றின் கௌரவத்திற்கு களங்கம் கற்பிக்கும் வகையில் செயற்படப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனது சுய கௌரவத்தை விற்பனை செய்து அதன் ஊடாக நலன் பெற்றுக்கொள்ளும் பழக்கம் தமக்கு கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நிபந்தனைகளின் அடிப்படையில் வேட்பாளர் பதவியை பெற்றுக்கொள்ளும் உத்தேசம் எப்பொழுதும் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்

Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe