மட்டக்களப்பில் வெளியாகவுள்ள முழு நீள திரைப்படத்திற்கு ஈழ தமிழ் மக்கள் தமது முழுமையான ஆதரவினை வழங்க வேண்டுமென இயக்குநர் நா.விஸ்ணுஜன் கோரியுள்ளார்.
மட்டக்களப்பில் முழுமையாக உருவாக்கப்பட்டுள்ள வேட்டையன் என்னும் முழு நீளத்திரைப்படம் எதிர்வரும் 19ஆம் திகதி மட்டக்களப்பில் திரையிடப்படவுள்ளது.
இது தொடர்பாக ஊடகவியலாளர்களை தெளிவுபடுத்தும் வகையிலான ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்றது.
இதன்போது விஸ்ணுஜன் மேலும் கூறுகையில், “மட்டக்களப்பு மாவட்டத்தில் முதன்முறையாக இந்த முழு நீள திரைப்படத்தினை உருவாக்கியுள்ளோம். இந்த திரைப்படத்தினை எதிர்வரும் 19ஆம் திகதி காலை 10.30க்கு கல்லடி சாந்தி திரையரங்கில் வெளியிடவுள்ளோம்.
இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளராக நோர்வேயினை சேர்ந்த பரணிதரன் என்பவர் இருக்கின்றார். அவரின் சிறிய வயது ஆசையினை எங்களுடன் இணைந்து இன்று நிறைவு செய்துள்ளார்.
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் மட்டக்களப்பு மாவட்டத்திற்குள்ளேயே செய்யப்பட்டுள்ளது. அத்துடன் படப்பிடிப்பின் தொழில்நுட்பம், இசையமைப்பு உட்பட அனைத்து செயற்பாடுகளும் மட்டக்களப்பு மாவட்டத்திற்குள்ளேயே செய்யப்பட்டுள்ளது.
இந்த திரைப்படத்தின் நடிகர், நடிகைகள் அனைவரும் மட்டக்களப்பினை சேர்ந்தவர்களாகவே உள்ளனர். நிறையக்கலைஞர்கள் இந்த திரைப்படத்திற்காக பணியாற்றியுள்ளனர்.
மட்டக்களப்பில் இந்த திரைப்படத்தினை உருவாக்க முற்பட்டபோது பல சாவல்களை நாங்கள் எதிர்கொண்டோம். எங்களுக்கு சரியான அங்கீகாரம் இங்கு கிடைக்கவில்லை. எங்களது அடையாளங்களை கொண்டுவரமுடியாத நிலையில் தென்னிந்திய சினிமாவில் எமது மக்கள் மூழ்கியுள்ளதன் காரணமாக அதன் ஊடாகவே எமது சினிமாத்துறையினை கொண்டுவரவேண்டிய நிலையேற்பட்டது.
தொழில்நுட்ப வசதி, கெமரா மற்றும் ஸ்ரூடியோ வசதிகள் மட்டக்களப்பில் இல்லாத நிலையே உள்ளது. இவற்றினையெல்லாம் தாண்டி இந்த திரைப்படத்தினை உருவாக்கியுள்ளோம்.
இந்த திரைப்படம் மூலம் கிடைக்கும் பணம், மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வறிய நிலையில் உள்ள மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக பயன்படுத்தவுள்ளோம்.
எனவே எமது இந்த முழுநேர வேட்டையன் திரைப்படத்திற்கு வடகிழக்கு உட்பட புலம்பெயர் தமிழர்கள் தமது ஆதரவினை வழங்கவேண்டும்” என தெரிவித்தார்.