Ads Area

பாசிசம் (Fascism) என்றால் என்ன..??

இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய தீவிர அரசியல் சித்தாந்தங்களுக்குள் பாசிசமும் ஒன்றாகும். பாசிச சித்தாந்தத்தின் தந்தையாக இத்தாலியின் சர்வாதிகாரியாகிய பெனிடோ முசோலினி (Benito Mussolini) கருதப்படுகிறார். 1922-ஆம் ஆண்டு முசோலினையும் அவரது பாசிசக் கட்சியும் இத்தாலியில் பதவிக்கு வருவதோடு பாசிசக் கோட்பாடும் ஆரம்பமாகிறது. 1933-ஆம் ஆண்டு ஜெர்மனியில் பதவிக்கு வரும் சர்வாதிகாரி அடொல்ப் ஹிட்லர் (Adolph Hitler) முசோலினியை பின்பற்றி நாசிசம் (Nazism) என்ற பெயரில் பாசிசக் கோட்பாட்டை உருவாக்கினார்.


பாசிசம் என்பது ஒரு சமுதாயத்தின் அதிகார வர்க்கத்தால் சர்வாதிகார முறையில் பொருளாதார மற்றும் மற்றைய விடயங்கள் தீர்மானிக்கப்படுவதையே குறிக்கும். முதலாளிகள் இவ்வதிகார வர்க்கத்திற்குள் அடங்குவர். ஆரம்ப கட்டங்களிலே அடிமட்ட மக்களின் ஆதரவும் இவ்வதிகார வர்க்கத்திற்கு கிடைக்கும். முசோலினியின் இத்தாலி, ஹிட்லரின் ஜெர்மனி பாசிசத்திற்கு எடுத்துக்காட்டுகள் ஆகும். தனிமனித உரிமைகளை நாட்டு நலனுக்காக, வல்லமைக்காக எனக் கூறி மதிக்காமல் அரசுக்கு எதிராகக் கேள்வி கேட்பவர்களை அடக்குமுறைகள் மற்றும் வன்முறை மூலம் நசுக்குகின்ற அரசியல் நடைமுறையே பாசிசம் எனப்படும். தனியுரிமை முதலாளித்துவத்தின் தேய்ந்த நிலையே பாசிசம் என மார்க்சியவாதிகள் அதனைக் கண்டிப்பதுண்டு. மார்க்சியவாதிகளின் இந்தக் கண்டனத்திலே உண்மை அதிகம் இருந்தபோதிலும், சில முக்கியமான விடயங்களைக் கருத்திலே கொள்ளாதிருக்கின்றது. தனியுரிமை, முதலாளித்துவம் கையாலாகாத நிலையில் பாசிசத்தைச் சரணடைகின்றது என்பது உண்மையே.

பாசிச தத்துவத்தின் மூலகங்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தீவிர தத்துவங்களிலிருந்து பெறப்பட்டதாகும். எடுத்துக்காட்டாக நீட்சேயின் (Nietzsche) அதிமானுடன் (Superman) என்ற அதிகாரக் கோட்பாட்டினாலும் சொரல் (Sorel) இன் பலாத்காரக் கோட்பாட்டினாலும் ஹெகல் (Hegel) இன் அரசை மேம்படுத்தும் வாதங்களினாலும் பாசிசம் பெருமளவிற்கு வளர்ந்திருந்தது அத்துடன் மாக்கியவல்வியின் கருத்துக்களாலும் முசோலினி கவரப்பட்டிருந்தார்.


பாசிசம் என்ற சொல் பாஸ்சியோ (Fascio) அல்லது பாஸ்சி (Fasci) என்ற இத்தாலிய சொல்லிலிருந்து உருவாக்கப்பட்டதாகும். இத்தாலிய சொல்லாகிய Fascio என்பதற்கான பொருள் இறுக்கமாக கட்டப்பட்ட தடிக்கட்டு (well tied bundle of nods) என்பதாகும். பாசிசம் இத்தாலிய இராணுவத்திற்குள் ஐக்கியம், பலம், ஒற்றுமை என்பவற்றை இறுக்கமாக ஏற்படுத்த முயலுகிறது. புராதன உரோமானிய இராணுவத்தினால் பயன்படுத்தப்பட்ட கோடரிச் (Axe) சின்னமே பாசிச இராணுவத்தின் சின்னமாக பயன்படுத்தப்பட்டது.

அரசின் மகிமைக்காகத் தன்னுடைய எல்லாவற்றையும் அதற்கு அர்ப்பணம் செய்ய வேண்டுமென்ற அடிப்படையிலே தான் பாசிச இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. பாசிஸ் என்பது ரோமானியப்பேரரசின் நீதிபதிகள் உருட்டுக் கட்டைகளுக்கு நடுவே கோடாரி சொருகப்பட்டிருக்கும் ஒரு ஆயுதம் வைத்திருப்பார்கள். இந்த ஆயுதத்திற்குப் பெயர் பாசிஸ் எனப்படும்.

தோற்றமும் பின்னனியும்

முதலாம் உலகப் போரில் பாசிசம்


ஆகஸ்ட் 1914 ல் முதலாம் உலகப் போர் வெடித்தபோது, இத்தாலிய அரசியல் இடதுகள் போரில் அதன் நிலைப்பாட்டை கடுமையாக பிரித்தனர். இத்தாலிய சோசலிஸ்ட் கட்சி (PSI) போரை எதிர்த்தது, ஆனால் பல இத்தாலிய புரட்சிகர சிண்டிகலிஸ்டுகள் ஜெர்மனி மற்றும் ஆஸ்திரியா-ஹங்கேரி ஆகியோருக்கு எதிராக போருக்கு ஆதரவு கொடுத்தனர். அவர்கள் பிற்போக்குத்தன ஆட்சிகள் தோற்கடிக்கப்பட வேண்டும் என்றும் சோசலிசத்தின் வெற்றியை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் விரும்பினர்.

ஏஞ்சலோ ஒலிவியேரோ ஒலிவேட்டி அக்டோபர் 1914-ல் சர்வதேச இத்தாலிய காம்பாட் படைகள் என்றழைக்கப்படும் ஒரு சார்பு-தலையீடு குழுவை அமைத்துள்ளார். பெனிட்டோ முசோலினியின் ஜெர்மனிய எதிர்ப்பு நிலைப்பாட்டின் காரணமாக PSI இன் பத்திரிகையான அவந்தியின் தலைமை ஆசிரியர் பணியில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டார். "பாசிசம்" என்ற வார்த்தை முதன் முதலில் 1915-இல் முசோலினியின் இயக்கமான சர்வதேச இத்தாலிய காம்பாட் படைகள் உறுப்பினர்களால் பயன்படுத்தப்பட்டது. 1917 அக்டோபர் புரட்சி, விளாடிமிர் லெனின் தலைமையிலான போல்ஷ்விக் கம்யூனிஸ்டுகள் ரஷ்யாவில் அதிகாரத்தை கைப்பற்றினர். இது பாசிசத்தின் வளர்ச்சியை பெரிதும் அதிகரித்தது.1917-ல், முசோலினி, புரட்சிகர நடவடிக்கை பாசிச தலைவர், அக்டோபர் புரட்சியை பாராட்டினார். ஆனால் பின்னர் அவர் லெனினுடன் ஒத்துப் போகவில்லை, அவரை ஜார் நிக்கோலஸின் ஒரு புதிய பதிப்பாக மட்டுமே கருதினார்.


நாம் சோசலிசத்திற்கு எதிரான போரை அறிவிக்கின்றோம், ஏனென்றால் அது சோசலிசம் என்பதற்காக அல்ல, மாறாக அது தேசியவாதத்தை எதிர்க்கிறது என்பதற்காகவே. சோசலிசம் என்னவென்பது பற்றி விவாதிக்கலாம் என்றாலும், அதன் வேலைத்திட்டம் என்ன, அதன் தந்திரோபாயங்கள் என்னவென்றால், ஒன்று தெளிவாக உள்ளது: அதிகாரபூர்வ இத்தாலிய சோசலிஸ்ட் கட்சி பிற்போக்குத்தனமாகவும் முற்றிலுமாகப் பழமைவாதமாகவும் உள்ளது. அதன் கருத்துக்கள் நிலவியிருந்தால், இன்றைய உலகில் நம் உயிர் பிழைத்திருப்பது சாத்தியமற்றது.

முதலாம் உலகப் போரின் பின்னர் வெற்றி பெற்ற நாடுகளுக்கும் தோல்வியடைந்த ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளுக்கும் இடையே வெர்சைல்ஸ் (Versailles) உடன்படிக்கை ஏற்பட்டது. இவ் உடன்படிக்கை வெற்றி பெற்ற நாடுகளுக்கு சாதகமாகவும் தோல்வியடைந்த நாடுகளுக்கு பாதகமாகவும் அமைந்தது. இவ் உடன்படிக்கை இத்தாலி, ஜெர்மனி ஆகிய நாடுகளின் தேசிய நலன் தேசிய கௌரவம் போன்றவற்றிற்கு பெரும் சவாலாக மாறியது.

வெர்சையில் உடன்படிக்கையினைப் பயன்படுத்தி நேசநாடுகள் இத்தாலியையும் ஜெர்மனியையும் பல கூறுகளாகப் பிரித்ததுடன் பல பிரதேசங்களை தமதாக்கிக் கொண்டன. இத்தாலி மற்றும் ஜெர்மனியின் குடியேற்றங்கள் பாதிக்கப்பட்டன. அத்துடன் பெருந்தொகைப் பணத்தினை நஷ்ட ஈடாக நேச நாடுகளுக்கு வழங்க வேண்டும் எனவும் கூறியது.

யுத்தத்தின் தோல்வியினால் அவமானமும் வெட்கமும் அடைந்திருந்த இவ்விருநாடுகளுக்கும் வெர்சையில் உடன்படிக்கை பெரும் பாதிப்பினை ஏற்படுத்தியது. வேலையில்லாப் பிரச்சினை, பணவீக்கம் என்பன பெரும் பொருளாதார பிரச்சினைகளை தோற்றுவித்தன. இப்பிரச்சினைகளைத் தீர்க்கக் கூடிய நிலையில் இந்நாடுகளின் அரசாங்கங்கள் காணப்படவில்லை.

ஆட்சியாளர்கள் நேச நாடுகளின் கைப்பொம்மைகளாகவே காணப்பட்டனர். இதனால் விவசாயிகள், தொழிலாளர்கள் அரசாங்க உத்தியோகத்தர்கள் வர்த்தகர்கள், படை வீரர்கள் போன்ற பல்வேறு பிரிவினர்களிடமும் அதிருப்தி ஏற்பட்டது. இக்காலத்தில் இவ்விரு நாடுகளிலும் சோசலிஸ்ட்டுகள் பெரும் செல்வாக்குப் பெற்றிருந்தார்கள். இச்சூழ்நிலையினை முசோலினையும் ஹிட்லரும் நன்கு பயன்படுத்தத் தொடங்கினர்.


தேசிய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஆட்சியாளர்களாலோ சோசலிஸ்ட்டுகளாலோ முடியாது என பிரச்சாரம் செய்யத் தொடங்கினர். முசோலினியின் பிரச்சாரம் பிரச்சினைகளுடன் போராடிக் கொண்டிருந்த மக்களுக்கு முசோலினி மீது நம்பிக்கையினை ஏற்படுத்தத் தொடங்கியது. முசோலினிக்கு ஆதரவு வழங்குவதன் மூலம் தொழிலாளர்கள் எழுச்சியை முறியடிக்க ஏனைய வர்க்கத்தினர் முற்பட்டனர்.
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe