Ads Area

ஏன் நாங்கள் தனிமைப்பட வேண்டும்? ஏன் பள்ளிகளை மூட வேண்டும்?

ஏன் நாங்கள் தனிமைப்பட வேண்டும்?
ஏன் பள்ளிகளை மூட வேண்டும்?

COVID19 ன் தாக்குதல் உலகம் முழுக்க முழு வீச்சுடன் எகிறிக் கொண்டிருக்கிறது. அதனால், ஒவ்வொரு நாடுகளும் தங்களை தற்காத்துக் கொள்வதற்காக வேண்டி இயலுமான அதி உச்ச நடவடிக்கைகளை தற்போது மேற் கொண்டு வருகின்றன.

இந்த கோவிட்19 மனிதப் பேரவலத்திலிருந்து தப்பித்து கொள்வதற்காக தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ளவதும், சன சந்தடி மிக்க இடங்களை தவிர்ந்து கொள்வதும் தான் நோய்த்தொற்றை தடுப்பதற்கான மிகச் சிறந்த முறைகளாக நிரூபிக்கப்பட்டிருக்கின்றன. அதுவே வெற்றி வாகை சூடிய ஒரு ஸ்றடஜி ஆகவும் காணப்படுகிறது.

இந்த தனிமைப்படுத்தலை வலுப்படுத்தும் நோக்கிலும், நோய்த் தொற்றை கட்டுப் படுத்தும் வண்ணமும், பாடசாலைகள் மூடப்பட்டிருக்கின்றன, அலுவலகங்கள் வீட்டிலிருந்து வேலை செய்யக்கூடிய வசதிகளை செய்து கொடுத்திருக்கின்றன, இதனால் நகரங்கள் வெறிச்சோடிப்போய் இருக்கின்றன. இப்போது, பள்ளிவாசல்களிலும் கூட்டுத் தொழுகை தடை செய்யப்பட்டிருக்கிறது.

ஏன் இவ்வாறெல்லாம் செய்ய வேண்டும்?

இதற்கு முதலும் இதுபோன்ற பல தொற்றுகள் உலகில் ஏற்பட்டது தானே? அப்போதெல்லாம் நாங்கள் இப்படி செய்யவில்லையே? பள்ளிகளை எல்லாம் ஏன் மூடவேண்டும்? ஏன் உம்ராவை தடை செய்ய வேண்டும்? அது ஏன்? இது ஏன்?? என ஏகப்பட்ட கேள்விகளுக்கு மேல் கேள்விகள் மேலெழுந்து கொண்டிருக்கின்றன.

இவைகளுக்கெல்லாம் விடைகளை விளங்குவதற்கான ஒரு அடிப்படையை புரிந்து கொள்ளவே இந்தப் பத்தி.

கொரோனா தொற்று ஏனைய தொற்றுகளை விட மிக வித்தியாசமானது(அது குறித்து ஏலவே நாங்கள் முன்னைய கட்டுரைகளில் பார்த்திருக்கிறோம். அப்படித்தானே!🤔)

கொவிட்19 இன் தொற்றுகைத்திறன் மற்றைய தொற்றுக்களை விட ஆபத்தானது, வீச்சு நிறைந்தது. கீழ்வரும் மூன்று தொற்று நோய்கள் தான் கிட்டிய நம் காலத்தில் உலகத்தில் பெரும் புரளியை ஏற்படுத்திய தொற்றுக்கள். அவைகள் எப்படி கொரோனாவோடு வேறுபடுகின்றன என்பதை நாங்கள் விளங்கிக்கொண்டால் ஏன் இந்த COVID19 பேரவலம் குறித்து நாங்கள் இவ்வளவு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஏன் மேற்கொள்கிறோம் என்பதை இலகுவாக புரிந்து கொள்ளலாம்.

முதலாவது Ebola தொற்று. இது 1976 முதல் இன்றைய நாள் வரை மனிதனுக்கு நோயை ஏற்படுத்தி வருகிறது. இருந்தாலும் இந்த நோய்த்தாக்கத்தினால் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் மொத்தமே 33,577. அதில் இறந்தவர்கள் 13,562. அது போல அது தனது பீக் என்று சொல்லப்படும் உச்சத்தில் இருக்கும் போது ஒரு நாளைக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 5 அல்லது 6. இந்த நோய் ஆபிரிக்க நாடுகளான கொங்கோ, சியாரலியோன் (சன்னி லியோன் அல்ல), கினியா, லைபிரியா போன்றவற்றில் மட்டுமே பரவுகிறது. அது தவிர்த்து இது வெளியே வேறெங்கும் பரவிச் செல்லவில்லை.

இரண்டாவது SARS. இது 2002ம் ஆண்டு சீனாவில் ஆரம்பித்து கனடா, ஹாங்காங்க், தாய்பேய், சிங்கப்பூர், வியட்நாம் போன்ற நாடுகளில் பரவியது அவைகளை தாண்டி இதுவும் வெளியில் செல்லவில்லை.  இந்த நோயினால் மொத்தமே 8097பேர் மட்டுமே பாதிக்கப்பட்டனர். அதில் இறந்தவர்களின் எண்ணிக்கை 774. இது பீக்கில் பரவும் போது ஒரு நாளைக்கு 3 அல்லது 4பேரை மட்டுமே கொலை செய்தது.

மூன்றாவது MERS. இது இதன் பெயருக்கு ஏற்றாற்போல் (Middle East Respiratory Syndrome) பெரும்பாலும் பஹ்ரைன், ஜோர்டான், குவைத், லெபானன், ஓமன், கத்தார், சவுதி அரேபியா,யெமன் ஆகிய மத்திய கிழக்கு நாடுகளை மட்டுமே தாக்கியது. அது தவிர பெரிதாக வெளியே வேறு நாடுகளுக்கு இந்த மேர்சும் செல்லவில்லை. அது போல இது மனிதனி லிருந்து இன்னுமொரு மனிதனுக்கு பரவவும் இல்லை. அதன் காரணமாக மத்திய கிழக்கில் இது பரவியிருந்தாலும் ஹஜ், உம்ரா போன்றவைகளும் அன்று தடை செய்யப்படவில்லை. 2012 முதல் 2019 வரையான ஏழு வருடங்களிலும் இந்த நோயின் மொத்த தொற்றுகள் 2494 மட்டுமே. இறந்தவர்கள் 858. அது போல இது நோய் உச்சத்தில் (Peak) பரவிக்கொண்டிருக்கும் போது ஒரு நாளைக்கு 2 அல்லது 3 பேர் மட்டுமே இந்த நோயினால் உயிரிழந்தனர்

ஆனால் புதிய கொரோனா வைரஸ் தொற்றான கோவிட்-19 இது வரையில் வெறும் மூன்று மாதங்களுக்குள் 162,650 தொற்றுகளை தாண்டி சென்று கொண்டிருக்கிறது. அது போல இந்த வைரஸின் பரவும் விகிதமும், கொல்லும் திறனும் மேற்சொன்ன எல்லா வைரஸ்களை விடவும் பன்மடங்கு அதிகமாகவும் இருக்கிறது.

அது போல COVID19 இது வரை 6069 உயிர்களை காவு கொன்றுள்ளது. உச்சத்தில் பரவி வரும் இந்த நாட்களில், இன்று மட்டும் இறந்தவர்களின் எண்ணிக்கை 400ஐ தொட்டுக் கொண்டிருக்கிறது.

ஆக மொத்தத்தில் கோவிட்19 மூன்று மாதங்களுக்குள் அது சென்ற இடங்களிலெல்லாம் கோரத் தாண்டவம் ஆடி வருவது கண்கூடு. இதுவரை 120 நாடுகளுக்கு மேல் ஏழை, பணக்காரன், வெள்ளையன், கருப்பன், ஆசியன், அமெரிக்கன் என வித்தியாசமின்றி அசுர வேகத்தில் இது பரவிக் கொண்டிருக்கிறது.

இப்போது சொல்லுங்கள்....

அரசாங்கங்கள் எடுக்கின்ற இந்த தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் கட்டாயம் தேவையானதா? இல்லையா? நாம் ஒவ்வொருவரும் மேற்கொள்ளும் நோய் தடுப்பு பற்றி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வேண்டியதா? இல்லையா? மக்காவில் உம்ராவை தடை செய்தது சரியான முடிவா? இல்லையா? பள்ளிவாசல்களில் அல்லது பொது இடங்களில் கூடுவதை தடை செய்யதது எல்லாம் காரண காரியத்தோடு தான் நடந்திருக்கிறதா? இல்லையா?

ஆம் என்றால் நீங்களும் சக மனிதர்களை மதிக்கிறீர்கள். அவர்களுக்கும் உங்களுக்கும் இந்த நோய் தொற்றி விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறீர்கள். நவீன வரலாறு கண்டிருக்கும் ஒரு மனிதப் பேரவலத்தை தடுப்பதற்காக நீங்களும் ஏதோ ஒரு வகையில் முயற்சி செய்கிறீர்கள்.

இல்லை! இவைகள் எல்லாம் பொய்கள், இலுமினாட்டிகளின் சதித் திட்டம்.
மருத்துவ மாபியாவின் கண்டுபிடிப்பு. கட்டாய வக்சீன் போடுவதற்கான முன்னாயத்த நடவடிக்கை. அரசாங்கங்கள் மக்களை கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்கின்ற பொய்ப்பிரச்சாரம் என்று நீங்கள் நம்பினால், அதை தாராளமாக நம்புவதற்கு உங்களுக்கு உரிமை இருக்கிறது. ஆனால் அந்த உரிமை, அந்த நம்பிக்கை நடந்து கொண்டிருக்கும் ஒரு மனிதப்பேரவலத்திற்கு எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் அமைந்து விடாமல் இருக்கட்டும்.

தனிமை படுவோம், வெற்றி பெறுவோம்.
Dr PM Arshath Ahamed MBBS MD PAED
குழந்தை நல மருத்துவர்
ஆதார வைத்தியசாலை சம்மாந்துறை.

பிற் குறிப்பு. சிங்கப்பூரில் எப்படி மக்கள் தங்களை தாங்களே பொது இடங்களில் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதை இந்தப் படம் விளக்குகிறது.


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe