சீனாவில் பரவிய கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல நாடுகளையும் அச்சுறுத்தியதுடன் பாதிப்புகளையும் ஏற்படுத்திய கொரோனா, இந்தியாவிலும் பரவத்துவங்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அசாம் மாநிலத்தின் சட்டசபையில் நேற்று பசு கடத்தல் தொடர்பாக விவாதம் நடந்தது. அந்த விவாதத்தில் கலந்து கொண்ட பாஜ எம்.எல்.ஏ சுமன் ஹரிபிரியா, கொரோனா வைரஸ் தடுப்பு குறித்தும் பேசினார்.
பசு மாட்டு சாணம் மற்றும் அதன் கோமியம் மிகவும் புனித தன்மை வாய்ந்தது. பல நோய்களையும் தீர்க்கும் தன்மை கொண்டது. இது தொடர்பாக அரசு சில ஆய்வுகளை நடத்தி வருகிறது. மாட்டு சாணத்தை எரிப்பதன் மூலம் அதிலிருந்து வெளியேறும் புகைக்கு கொரோனா வைரசினை எதிர்கொள்வதற்கான திறன் உள்ளது. இந்த வகை வைரசை கட்டுப்படுத்த மாட்டு சாணம் உதவும் என நம்புகிறேன்.
மதச்சடங்குகளுக்காக பயன்படுத்தும் மாட்டின் கோமியம், மாட்டுச் சாணத்தின் பின் அறிவியல் ரீதியான காரணங்களும் உள்ளன. குஜராத்தில் சில மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு ஆயுர்வேத மருந்துகள் மூலம் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. அங்கு நோயாளிகள் பசுவிற்கு அருகாமையில் அமரவைக்கப்பட்டு, அவர்களுக்கு மாட்டு சாணம் மற்றும் கோமியம் மூலம் தயாரிக்கப்பட்ட பஞ்சாமிர்தம் மருந்தாக வழங்கப்படுகிறது.