கலிமா சொன்ன முஸ்லிம் ஒருவரின் ஜனாஸா என்பது இஸ்லாமிய சடங்குகள் செய்யப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட வேண்டும் என்பது இஸ்லாமிய கோட்பாடாகும். இந்த நிலையில் எமது நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கியதாக கூறப்படுகின்ற முஸ்லிம் ஒருவரின் ஜனாஸா இன்று அதிகாலை எரிக்கப்பட்டமை முஸ்லிம்கள் மத்தியில் ஆழந்த துக்கத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம். எம். ஹரீஸ் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்படுவதாவது:-
இலங்கை சட்டத்தின் படி ஒரு பிரஜைக்கு வழங்கப்பட்ட அடிப்படை உரிமையை கூட மறுக்கின்ற இந்த கொடூரமான செயலானது ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையும் அவமதித்த ஒரு செயலாகவே கருதவேண்டி உள்ளது. முஸ்லிம்களின் ஜனாஸா விடயத்தில் அரசு தீர்க்கமான முடிவு எடுக்கவேண்டியது காலத்தின் அவசியம் ஆகும்.
எனினும் யாராக இருந்தாலும் எமது இஸ்லாமிய மார்க்க கோட்பாட்டுகளுக்கு எதிராக தொடர்ந்தும் செயற்பட அனுமதிக்க முடியாது. இவ்வாறான செயல்கள் உடன் களைந்தெறியும் வழிமுறைகளை நாம் மேற்கொள்ள வேண்டியது காலத்தின் அவசியமானதாகும்.
முஸ்லிம் சகோதரரின் ஜனாஸா தகனம் செய்ய உள்ள செய்தியை நான் அறிந்தவுடன் தொடர்ந்தும் அரச உயரதிகாரிகள் பலரையும் அழைத்திருந்தும் அந்த விடயம் வெற்றியளிக்க வில்லை என்பது கவலையளிக்கிறது. இது விடயம் தொடர்பில் அனைத்து முஸ்லிம் அமைப்புகள் மற்றும் கட்சிகளுடனும் கலந்துரையாடி இதற்கு முற்றுப்புள்ளி வைக்க முயற்சிகளை செய்து வருகிறேன்.
இதேவேளை, இவ்வாறான நிலை தொடருமானால் தொற்று ஏற்பட்டு தாம் மரணித்தால் தனது ஜனாஸா எரியூட்டப்பட்டுவிடும் என பயந்து கொரானா தொற்றுக்குள்ளாகும் மக்கள் தமது நோய் தொற்றை மறைக்கும் அபாய நிலை எமது நாட்டில் ஏற்படலாம். என்பதை கவனத்தில் கொண்டு அரசாங்கம் செயற்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.