ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச நிர்வாகத்தின் கீழ் 5 வயது சிறுவன் உட்பட இரண்டு சிறுவர்கள் அடங்கலாக 8 பொதுமக்களை கொலை செய்த இராணுவ உறுப்பினர் பொதுமன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டமை நீதியை துஸ்பிரயோகம் செய்யும் மோசமான செயல் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
முன்னாள் இராணுவ உறுப்பினர் சுனில் ரட்நாயக்க கொலைக்குற்றம் சுமத்தப்பட்ட ஐந்து பேரில் ஒருவராவார். யாழ்ப்பாணம்- மிருசுவிலில் இடம்பெற்ற இந்த கொலைகளின் பின்னர் நடத்தப்பட்ட பிரேத பரிசோதனைகளின் போது கொலை செய்யப்பட்டவர்கள் சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டார்கள் என்பது நிச்சயமானது.
எனவே ஏனைய நாட்டு அரசாங்கங்கள் இலங்கை அரசாங்கத்தின் போர்க்குற்றங்கள் தொடர்பான விடயத்தில் மனித உரிமைகளை காப்பதற்கு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மீனாட்ஷி கோரியுள்ளார்.
இலங்கை போரின்போது இராணுவத்தினரும் விடுதலைப் புலிகளும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டனர். இந்தநிலையில் கோத்தாபய ராஜபக்ச பாதுகாப்பு செயலராக இருந்த அந்த காலக்கட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை கண்டறிந்தது.
வைத்தியசாலைகள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டதுடன் மனித கேடங்கள் என்ற வகையில் பலர் கொல்லப்பட்டனர். எனினும் பொய்யான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள இராணுவ போர் வீரர்களை விடுதலை செய்யப்போவதாக கோட்டாபய 2019 ஜனாதிபதி தேர்தலின்போது உறுதியளித்திருந்தார்.
எனவே இலங்கையின் போர்க்குற்றங்களுக்கு பொறுப்புகூற சர்வதேச பொறிமுறை அவசியம் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தென்னாசிய பணிப்பாளர் மீனாட்ஷி கங்குலி கோரிக்கை விடுத்துள்ளார்.