Ads Area

தேவாலய பிரார்த்தனைக்கு யாரும் வர வேண்டாம்: போப் அறிவிப்பு

வாடிகன்: சீனாவில் உருவான கொரோனா வைரஸ் காரணமாக இத்தாலியில் இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்; 21 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு நோய்த்தொற்று உறுதியாகியுள்ளது.

இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள, தன்னாட்சி பெற்ற நாடான வாடிகனிலுள்ள புகழ்பெற்ற தேவாலயத்தில் நடக்கும் பிரார்த்தனையில் எப்போதும் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பர். கொரோனா அச்சத்தால், யாரும் இல்லாமல், போப் மட்டும் தனிமையில் பிரார்த்தனை நடத்தினார். அதை உலகம் முழுவதும் உள்ள ஊடகங்கள், ஒரு வரலாற்று சம்பவமாக அதை ஒளிபரப்பின.

இந்நிலையில், 'வைரஸ் அச்சம் காரணமாக பிரார்த்தனை செய்பவர்கள் இல்லாமலேயே பாரம்பரிய ஈஸ்டர் வார கொண்டாட்டங்கள், பிரார்த்தனைகள் நடத்தப்படும்' என, வாடிகன் தெரிவித்துள்ளது.

வாடிகனில் உள்ள போப் நிர்வாக அலுவலகம் இன்று (15ம் தேதி) வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கொரோனா வைரசால், உலகளாவிய பொது சுகாதார அவசரநிலை ஏற்பட்டுள்ளது. இதனால், ஈஸ்டர் புனித வாரத்தின் அனைத்து வழிபாட்டு கொண்டாட்டங்களும், பிரார்த்தனைகளும் பார்வையாளர்களின்றி நடைபெறும். ஏப்., 12ம் தேதி வரையிலான பிரார்த்தனைகள், வாடிகனின் அதிகாரபூர்வ செய்தி இணையதளத்தில், நேரடியாக ஒளிபரப்பப்படும். மக்கள் அதில் பிரார்த்தனையைக் காணலாம்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe