Ads Area

முஸ்லிம் பிரதிநிதித்துவங்களை இல்லாமல் செய்வதற்கு, மறைமுகமாக சூழ்ச்சிகள் இடம்பெற்று வருகிறது.

நூருல் ஹுதா உமர் 

மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் பிரதிநிதித்துவங்களை இல்லாமல் செய்வதற்கு, மறைமுகமாக சூழ்ச்சிகள் இடம்பெற்று வருகிறது. இக்காலகட்டத்தில் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் பிரிந்து நின்று செயற்படுவோமானால், முஸ்லிம் பிரதிநிதித்துவங்களை இழக்க வேண்டியதொரு சூழ்நிலை ஏற்படும். எனவே எமது பிரதிநிதித்துவங்களை தக்க வைப்பதற்கான வியூகங்களை வகுத்து செயற்பட வேண்டியது சகலரதும் பொறுப்பாகும். என கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரும், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மட்டு, மாவட்ட தலைவருமான எம்.எஸ்.சுபைர் தெரிவித்தார்.

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக, (14) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கன்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம் பிரதிநிதித்துவங்களை பாதுகாப்பதற்கு சகல தரப்பினரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும். அதற்காக மட்டக்களப்பு மாவட்ட அரசியல் தலைவர்களை ஒற்றுமைப்படுத்துவதற்கு, உலமாக்கள், புத்திஜீவிகள் முன்னின்று உழைக்க வேண்டும். அவ்வாறானதொரு சந்தர்ப்பம் ஏற்படுமாக இருந்தால், சமூகத்தின் நலன் கருதி தானும் இணைந்து செயற்படுவதற்கு தயாராகவுள்ளேன்.

குறிப்பாக, முஸ்லிம் பிரதிநிதித்துவங்களை பாதுகாப்பதற்காக கட்சி பேதங்களை களைந்து செயற்படுவதற்கு தயாராகவுள்ளதாகவும், மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் அரசியல் தலைவர்களும் அதற்காக, ஒன்றுபட்டு செயற்படுவதற்கு முன்வர வேண்டும். மட்டு, மாவட்ட தமிழ் அரசியல் தலைவர்கள் அவர்களது பிரதிநிதித்துவங்களை அதிகரிப்பதற்கான வியூகங்களை வகுத்து, கட்சி பேதங்களை மறந்து செயற்பட்டுக்கொண்டிருக்கின்றனர். கட்சிகளாக பிரிந்து நின்றாலும் அவர்கள் தமிழ் சமூகத்தின் நலன் குறித்து சிந்தித்து செயற்பட்டுக்கொண்டிருக்கின்றனர்.

முஸ்லிம் அரசியல் தலைவர்களும் கடந்த காலங்களைப்போலல்லாது தமது சமூகம் சார்ந்த விடயங்களில் அக்கரையுடன் செயற்பட வேண்டும். நாம் சகலரும் கட்சி ரீதியாகவும், கொள்கை ரீதியாகவும் பிரிந்து செயற்பட்டாலும் எமது பிரதிநிதித்துவங்களை பாதுகாக்கின்ற விடயத்தில் ஒன்றுபட்டாக வேண்டும். இந்த விடயத்தில் எமக்குள் இணக்கப்பாடுகள் எட்டப்படாதவிடத்து, எமது பிரதிநித்துவங்கள் இல்லாமல் போகும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம் பிரதிநிதித்துவங்களை பாதுகாப்பதற்காக, நான் கட்சி பேதங்களை கடந்து ஒன்றுபட்டு செயற்படவும் தயாராகவுள்ளேன். நாம் நமக்குள் உள்ள விருப்பு வெறுப்புக்களை களைந்து ஒன்றுபடுவது காலத்தின் தேவையாகும். தமது அரசியலுக்கப்பால் சமூகத்தின் நன்மை கருதி நாம் ஒற்றுமைப்பட்டாக வேண்டும். அப்போதுதான் எமது உரிமைகளை வென்றெடுக்க முடியும்.

குறிப்பாக, இன்று சுயநல அரசியலுக்காக நாட்டில் இனவாதத்தினை விதைத்து இன விரிசலை ஏற்படுத்தியுள்ளனர். ஒரு சமூகம் இன்னுமொரு சமூகத்தை சந்தேகங்கொண்டு பார்க்கின்ற நிலமைகள் உருவாகியுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒற்றுமையாக வாழ்ந்த தமிழ் முஸ்லிம் மக்களிடையே விரிசலை ஏற்படுத்துவதற்கும், அதனால் அரசியல் இலாபம் தேடுவதற்கும் சில தமிழ் அரசியல்வாதிகள் முனைகின்றனர். எனவே இவ்வாறான சூழ்நிலையில் முஸ்லிம் சமூகம் சிந்தித்து செயற்பட வேண்டும்.

முஸ்லிம் சமூகத்தின் நன்மை கருதி கட்சி ரீதியாக பிரிந்து நிற்கின்ற அரசியல் தலைவர்களை ஒன்றுபடுத்தி, பிரதிநித்துவங்களை அதிகரிப்பதற்கான விடயத்தில் உலமாக்கள், புத்திஜீவிகள் அசட்டையாக இருந்துவிடாமல் மிகவும் வேகமாக செயற்பட்டு, சிறந்த முடிவுகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe