கொரோனா வைரசின் பாதிப்பு காரணமாக வளைகுடா நாடுகளில் சிக்கிய இந்தியர்களை மீட்கும் நடவடிக்கையில் கடற்படை மற்றும் ஏர் இந்தியா விமான நிறுவனங்கள் தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. உலகின் பல நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. இதற்கு வளைகுடா நாடுகளும் விதிவிலக்கல்ல. வளைகுடா நாடுகளிலும் பாதிப்பு அதிகரித்து வருகிறது.
வளைகுடா நாடுகளில் சுமார் 10 மில்லியன் இந்தியர்கள் வசிக்கின்றனர். அவர்களில் பலர் துறைமுக நகரங்களில் இருப்பதால் கடற்படை மூலம் அவர்களை மீட்க வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இந்திய கடற்படை வளைகுடா நாடுகளில் இருந்து 1,500 இந்தியர்களை மூன்று கடற்படை போர்க்கப்பல்களில் இருந்து வெளியேற்ற முடியும் என்று குறிப்பிட்டுள்ளது. தேவையான நடவடிக்கைகளைத் தொடங்க வெளிவிவகார அமைச்சகம் (எம்.இ.ஏ) மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் ஆலோசனைகளைத் தொடங்கியுள்ளது. இதுபோலவே துறைமுகங்கள் இல்லாத மற்ற பகுதிகளில் ஏர் இந்தியா விமானங்களை அனுப்பி மீட்டு வருவது குறித்து ஆலோசனைகள் நடந்து வருகின்றன. அவ்வாறு மீட்கப்படும் போது முதலில் வசதி குறைந்த தொழிலாளர்களை முன்னுரிமை அடிப்படையில் மீட்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிகிறது.
அரசாங்கத்தின் உயர் வட்டாரங்கள் கூறுகையில்,
"வளைகுடா நாடுகளிலிருந்து இந்திய மக்களை சொந்த நாடுகளுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளோம். அங்கு இருக்கும் நிலைமையைக் கண்காணித்து அதற்கேற்ப தயாராகி வருகிறோம். நாங்கள் ஏர் இந்தியா மற்றும் இந்திய கடற்படையிடம் விரிவான திட்டத்தை உருவாக்க கேட்டுக் கொண்டுள்ளோம் எனக் கூறியுள்ளனர். இது தொடர்பாக துபாயில் உள்ள இந்திய தூதரக அதிகாரி கூறுகையில், இங்கிருந்து இந்தியர்களை அழைத்து செல்வது தொடர்பாக டில்லியில் இருந்து அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். அதற்காக காத்திருக்கிறோம். இந்திய அரசு அது தொடர்பாக நடவடிக்கை எடுக்கும். ஏர் இந்தியா விமானம் இந்த சேவையில் ஈடுபடும். இவ்வாறு தெரிவித்தார்.