நூருல் ஹுதா உமர்
கல்முனை மாநகர சபையில் பணியாற்றும் பட்டதாரி பயிலுனர்களுக்கான மார்ச் மற்றும் ஏப்ரல் மாத கொடுப்பனவுகள் இதுவரை வழங்கப்படாமையால் தாங்கள் கடுமையான வாழ்வாதார சிக்கல்களில் மாட்டிக்கொண்டிருப்பதாக குறித்த பட்டதாரி பயிலுனர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இதுசம்பந்தமாக மேலும் தெரியவருவதாவது,
அம்பாறை மாவட்டம், கல்முனை மாநகர சபையில் கடந்த நல்லாட்சி அரசில் 21 பட்டதாரிகள், பட்டதாரி பயிலுனர்களாக இணைக்கப்பட்டு அவர்களுக்கான மாதாந்த கொடுப்பனவுகள் வழங்கப்பட்டு வந்த போதிலும் 2020 ஆம் ஆண்டின் மார்ச் மற்றும் ஏப்ரல் மாத கொடுப்பனவுகள் இதுவரை வழங்கப்பட வில்லை. ஜனாதிபதியின் பணிப்புரையின் படி கொரோனா மற்றும் புதுவருட காரணங்களுக்காக ஏப்ரல் மாத சம்பளம் கடந்த 08ஆம் திகதிக்கு முன்னர் நாடுபூராகவும் வழங்கப்பட்டிருக்கின்றது. அம்பாறை மாவட்ட ஏனைய உள்ளுராட்சி மன்றங்களான அக்கரைப்பற்று மாநகர சபை, அக்கரைப்பற்று பிரதேச சபை, சம்மாந்துறை பிரதேச சபை போன்ற அலுவலகங்களில் பணியாற்றும் தமது நண்பர்கள் இவ்வாண்டின் மார்ச் மற்றும் ஏப்ரல் மாத கொடுப்பனவுகளை பெற்றுவிட்டதாகவும் தாங்கள் இதுவரை எவ்வித கொடுப்பனவுகளையும் பெறாமல் ஏமாற்றப்பட்டிருப்பது பாரிய மன உளைச்சலை உண்டாக்கி இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.