பௌசர் மஹ்ரூப்.
ஒரு சமூகத்திற்கு, மக்கள் பிரிவுக்கு அநீதி இழைக்கப்படுகின்ற போது , அடக்குமுறை அரசுக்கு எதிராகவும், அதன் நலன் காக்கும் சட்டம், விதிகளுக்கு எதிராகவும் – தன்னையே அர்ப்பணித்து , ஒடுக்குமுறைகளுக்கு எதிராக தனக்குள்ள வாய்ப்பின் அனைத்து தளங்களிலும் தீர்க்கமாக குரல் கொடுத்த – முஸ்லிம் சமூகத்தின் மீதான அரச ஒடுக்குமுறையை ஒரு தனிமனிதனாக நின்று எதிர்த்த தோழன் RAMZY RAZEEK இப்போது இலங்கை அரசாங்கத்தின் சிறைக்கம்பிகளுக்குள் அடைக்கப்பட்டிருக்கிறான். RAMZY RAZEEK கைது செய்யப்படும் போது சுகவீனமுற்ற நிலையில் இருந்துள்ளார்.
நேற்று நீதிமன்றின் முன் நிறுத்தப்பட்ட நமது தோழனுக்கு ICCPR, CYPER CRIME சட்டங்களின் அடிப்படையில் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. இந்தச் சட்டங்களின் பாரதூரமும், இச்சட்டங்கள் இலங்கை அரசின் ஒடுக்குமுறை வடிவங்களை முற்று முழுதாக பாதுகாக்கும் வடிவங்கள் என்பதும் தெரிந்தவர்களுக்கு தெரிந்தவையே.
“இலங்கை முஸ்லிம் மீடியா போரம்” என்ற அமைப்பு இருக்கின்றது ஆனால், இப்படியான விசயங்களுக்கு அல்ல என்ற கதை நமக்குத் தெரிந்ததுதான். ஒரு ஊடக அமைப்பு இப்படியான சந்தர்ப்பங்களில் குப்பைதான் கொட்டும் என்பதற்கு இன்று மட்டுமல்ல, கடந்த காலமும் நமக்கு சாட்சியமாகும்.
“ எழுத்தாளர்கள், கலைஞர்கள், சுதந்திர ஊடகவியலாளர்கள், சுயாதீன அரசியல், சமூக செயற்பாட்டாளர்கள் என்போர் ஒரு சமூகத்தின் கண்ணும் காதும் மனச்சாட்சியுமாகும்” என்பதை மறந்து விடாதீர்கள்.
எந்தவித சுயநல நோக்கமும் இன்றி , தனது சமூகம் ஒடுக்குமுறையாள ஆட்சியாளர்களால் ஒடுக்கப்படும் போது அதற்காக , நமது மனச்சாட்சியின் குரலாக குரல் கொடுத்த தோழன் ஒருவனுக்காக நாம் எமது குரலை, எழுத்தை , பங்களிப்பினை வழங்க நம்மை தடுக்கும் விடயங்கள்தான் என்ன? நாம் இந்த அடைமொழிகளை சூடிக் கொள்ள எந்தளவில் பொருத்தமானவர்கள் என்பதை யோசித்துப் பாருங்கள்?.