(காரைதீவு நிருபர் சகா)
காரைதீவில் கொரோனாத் தொற்று ஒன்று ஏற்படுமானால் அதறகான முழுப் பொறுப்பையும் காரைதீவுப் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியே பொறுப்பேற்க வேண்டும். இவ்வாறு காரைதீவுப் பிரதேச சபையின் 26ஆவது மாதாந்த அமர்வு நேற்று முன்தினம் நடைபெற்றபோது உரையாற்றிய தவிசாளர் கே.ஜெயசிறில் காட்டமாகத் தெரிவித்தார்.
முன்னதாக உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலில் உயரி;நீத்த உறவுகளுக்காக இருநிமிடநேரம் அஞ்சலி செலுத்தப்பட்டது.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்:
கொரோனா எமது பக்கம் வரக்கூடாது என்பதற்காக பிரதேச செயலாளரும் நாங்களும் இரவுபகலாக உழைத்துக் கொண்டு வரும் வேளையில் காரைதீவுக்குரிய சுகாதார வைத்திய அதிகாரி மட்டும் ஒத்துழைக்க மறுக்கிறார்.
உள்ளுர் மீனவர் வர்த்தகர்களின் பொருட்களை சல்லடைபோட்டுத் தடை செய்யும் அவர் வெளிப் பிரதேச மீன்கள் வருவதற்கும் குருநாகல் கோழி வருவதற்கும் துணை போகின்றார். வெளிப்பிராந்திய நடமாடும் உணவுப் பொருள் வாகனங்களுக்கு ஊருக்குள் அனுமதியளிக்கிறார். ஏனைய பிரதேசங்களில் கிருமி நாசினி சீராக விசிறப்படுகின்றது. ஆனால் காரைதீவில் மக்கள் கூடும் முக்கிய இடங்களுக்கு விசிறப்படவில்லை. ஏன் எமது பிரதேசசபை அலுவலகத்திற்குக் கூட விசிறப்படவில்லை.
காரைதீவுப் பிரதேச மீனவர்கள் வர்த்தகர்கள் வியாபாரிகளை அழைத்து முதலில் கூட்டமொன்று கலாசார மண்டபத்தில் போட்டபோது இவ் அதிகாரியோ சுகாதார பரிசோதகரோ வரவில்லை. இந்நிலையில் அவர்களுக்கான சுகாதார விதிமுறைகளை யார் சொல்வது? இவருக்காக எமது மக்களை பலிக்கடாவாக்கமுடியாது.
இதுபோன்ற பலகாரணங்களால் காரைதீவு கொரோனாத் தொற்றுக்குரிய பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறதா என அஞ்சவேண்டியுள்ளது. இவர் தொடர்பாக ஏலவே பிராந்திய சுகாதார பணிப்பாளருக்கும் மாகாண பணிப்பாளருக்கும் முறையிட்டிருந்தோம். இது இரண்டாவது தடவை.
எனவே இம்முறை நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் மக்கள்போராட்டம் தலையெடுக்கும். அதுமட்டுமல்ல கொரோனாவுக்குரிய முழுப் பொறுப்பையும் அவரே பொறுப் பேற்கவேண்டும். என்றார்.
இலங்கையில் சமகாலத்தில் எந்நேரம் என்ன நடக்கும் என்று கூறமுடியாதுள்ளது. மக்களுக்குச் சேவையாற்றிய வேண்டிய சுகாதார அதிகாரி இவ்வாறு மாறாக நடப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. எமது சபையூடாகவும் மக்களுக்கு நிவாரணம் வழங்கவேண்டும். என்றார்.
த.தே.கூ.உறுப்பினர் த.மோகனதாஸ் உரை நிகழ்த்துகையில்:
கடந்தவாரம் நோயாளியை ஏற்றிக்கொண்டு பகல் 12மணியளவில் காரைதீவுவைத்தியசாலைக்கு கொண்டுசென்றேன்.அங்குநின்ற ‘நர்ஸ் 12.30 மணியாகிவிட்டது.இனி சிகிச்சையளிக்கமுடியாது’ என்றார். ‘ டாக்டர் எங்கே? ‘ என்று அன்பாகக்கேட்டேன். ‘அவரில்லை’ என்றார். உடனே தவிசாளருக்கு போன்செய்து நடந்தவற்றைக்கூறினேன்.
3ஆம் நபருக்கு ஏன் போன் பண்ணியது என்று கூறி வைத்தியஅதிகாரி சம்மாந்துறை பொலிசில் முறைப்பாடுசெய்தார். அதற்கமைய பொலிசார் என்னை அழைத்தனர். நான்சென்றேன் .வைத்தியஅதிகாரி அம்புலன்சில்வந்தார். 3மணிநேரம் விசாரணைசெய்யப்பட்டது. மக்களுக்கு 24மணிநேரமும் சேவையாற்றவேண்டிய வைத்தியர் இவ்வாறு 3மணிநேரம் நோயாளிகளுக்கான அம்புலன்சை காக்கவைத்ததும் கௌரவ உறுப்பினரான என்னை 3மணிநேரம் விசாரிக்கவைத்ததும் முறையா? இச்சபை நடவடிக்கை எடுக்கவேண்டும். என்றார்.
சபையில் எந்த வாதப்பிரதிவாதமும் இடம்பெறவில்லை. உபதவிசாளர் ஜாகீர் சபையில் சமுகமளித்திருக்கவில்லை.