பாறுக் ஷிஹான்
அம்பாறை மாவட்டம் கல்முனை சுகாதார சேவை பிராந்தியத்திற்குட்பட்ட பகுதிகளில் முப்படையை சேர்ந்த படையினர் தங்குவதற்காக 3 தனிமைப்படுத்தல் நிலையம் இதுவரை அமைக்கப்பட்டுள்ளது என கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஜீ.சுகுணன் தெரிவித்தார்.
முப்படையினரின் விடுமுறை அரசாங்கத்தினால் மறு அறிவித்தல் வரை நிறுத்தப்பட்ட நிலையில் தத்தமது முகாமிற்கு மீண்டும் வருகை தரும் முப்படையினரை தற்காலிகமாக இடைத்தங்கல் முகாமில் தங்கவைப்பதற்காக தனிமைப்படுத்தல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதனடிப்படையில் அம்பாறை மாவட்டம் கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை பிரிவிற்குட்பட்ட இதுவரை 158 பேர் தற்போது தங்க வைக்கப்பட்டுள்ளனர்.கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையில் 74 பேரும் காஞ்சினங்குடா பகுதியில் அமைந்துள்ள கால்நடை பயிற்சி மையத்திலும் 44 பேரும் அத்துடன் கல்முனை பகுதியில் உள்ள விகாரை ஒன்றில் 40 பேரும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
வெலிசறை கடற்படை முகாமில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக முப்படையினரின் விடுமுறையை ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து அவர்களது முகாம்களில் இடப்பற்றாக்குறையினால் இவ்வாறான தனிமைப்படுத்தல் முகாம்களில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.இது குறித்து மக்கள் சந்தேகம் கொள்ள தேவையில்லை.இவர்களால் எவ்வித ஆபத்தும் இல்லை.பொதுமக்கள் இது குறித்து அச்சம் கொள்ள தேவையில்லை.இவர்கள் சாதாரண இராணுவ கடற்படை வீரர்களுமாவர் என்பதை தெரிவிக்க விரும்புவதாக கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஜீ.சுகுணன் தெரிவித்தார்.
மேலும் விடுவிப்பில் நிற்கும் முப்படையினரையும் உடனடியாக பணிக்குத் திரும்புமாறு பாதுகாப்பு அமைச்சால் அறிவித்தல் வழங்கப்பட்டிருந்த நிலையில் அவர்கள் தமது கடமைக்குத் திரும்ப வசதியாக கடந்த திங்கட்கிழமை நாடுமுழுவதும் ஊரடங்குச் சட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது.