மப்றூக்.
உலகெங்கும் கொரோனா தொற்று மனித குலத்துக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ள நிலையில், அந்த வைரஸினால் பாதிக்கப்பட்டோர் மற்றும் அதன் தாக்கத்தினால் மரணமடைந்தோர் தொடர்பில் செய்தி அறிக்கையிடும் போது பின்பற்ற வேண்டிய ஒழுக்க நெறிகள் (ethics) எவ்வாறு அமைய வேண்டும் என, நமது அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.
கொரோனாவினால் பாதிக்கப்படுகின்றவரின் பெயர், படம் மற்றும் மத அடையாளங்களை வெளிப்படுத்துவதைத் தவிர்க்குமாறு அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.
மேலும் செய்தி அறிக்கையிடலின் போது பயன்படுத்தும் சொற்கள் குறித்தும் அவதானம் செலுத்துமாறு ஊடகங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.
மேலும், கொரோனா நோயாளர் மற்றும் மரணம் தொடர்பில் சுகாதார அமைச்சு வெளியிடும் தகவலே உத்தியோபூர்வமானது என்றும், அவற்றினையே ஊடகங்கள் வெளியிட வேண்டும் எனவும் அரசாங்கம் கூறியுள்ளது.
இவ்வாறான சூழ்நிலையில், அம்பாறை மாவட்டத்தில் இன்றைய தினம் புதன்கிழமை முதலாவது கொரோனா நோயாளி அடையாளம் காணப்பட்டார். அவர் அக்கரைப்பற்றைச் சேர்ந்தவர்.
இதனையடுத்து ‘பேஸ்புக்’ இல் ஊடகம் நடத்தும் பலர், இந்த நோயாளி தொடர்பில் ஊடக நெறிமுறைகள் அனைத்தையும் மீறும் வகையில் அவசர அவசரமாக எழுதத் தொடங்கினர். பாதிக்கப்பட்டவரின் பெயர், விலாசம் மற்றும் படங்களையும் இவர்கள் வெளியிட்டனர்.
மறுபுறமாக, ‘ஊடகவியலாளர்’கள் என்றோ ‘ஊடகம்’ என்றோ அங்கிகரிக்கப்படாத, ‘பேஸ்புக்’கில் செய்திகள் எழுதுகின்ற நபர்கள் வெளியிட்ட அந்த நேரலையில், கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் கலந்து கொண்டு, அக்கரைப்பற்றில் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட நோயாளி குறித்த தகவல்களை ஏகத்துக்கு வழங்கியிருந்தார். இது கண்டனத்துக்குரியதாகும்.
இலங்கையில் இதுவரையில் அடையாளம் காணப்பட்ட எந்தவொரு கொரோனா நோயாளர் தொடர்பிலும், இதுவரையில் ‘பேஸ்புக்’இல், நேரலையாக தகவல்கள் வழங்கப்படவுமில்லை, எந்தவொரு சுகாதார அதிகாரியும் நேரலையாக வந்து – நோயாளி குறித்த தகவல்களைப் பகிர்ந்து கொண்டதுமில்லை.
எனவே, இவ்வாறு ‘பேஸ்புக்’கில் கோரோனா நோயாளி குறித்து பேட்டி வழங்கிய, கல்முனை சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு புத்தி எங்கே போனது என்று, இது குறித்து பலரும் சமூக வலைத்தளங்கங்களில் எழுதி, தமது விசனங்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.
அக்கரைப்பற்றில் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளர் தொடர்பில், பேஸ்புக் நேரலையில் தகவல்களை வழங்கியதன் மூலம், கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களை மீறிச் செயற்பட்டுள்ளார் என்றும், அது தொடர்பில், சுகாதார அமைச்சு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், சமூக வலைத்தளங்களில் கோரிக்கைகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
மனித குலத்தை கொரோனா அச்சுறுத்திக் கொண்டிருக்கும் நிலையில், ஊடகம் மற்றும் ஊடகவியலாளர் எனும் பெயரில் செயற்பட்டுக் கொண்டிருக்கும் ‘போலி’களும் மனிதாபிமானம் உள்ளோருக்கு அச்சுறுத்தலாக மாறியிருக்கின்றன.
Thanks - puthithu