முன்னாள் இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே குவைத் பற்றி தெரிவித்த கருத்து இலங்கைக்கும் குவைத்துக்கும் இடையே ராஜதந்திர சர்ச்சையை உருவாக்கும் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது.
குவைத்தில் விஸா காலாவதியாகி அடைந்து நிற்கும் இலங்கையர் குழுக்களை குவைத் அரசு தனது சொந்த செலவில் இலங்கைக்கு அனுப்பி இருக்கின்ற நிலையில் குவைத் கொரோனா தொற்று நோயாளர்களையும் குண்டு ஒன்றையும் போட்டிருப்பதாக தெரிவித்திருக்கும் கருத்து குறித்து குவைத் அரசு தனது அதிருப்தியைத் இலங்கைக்குத் தெரிவித்துள்ளதாக ராஜதந்திர வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டது.
இதேநேரம் மஹிந்தானந்தவின் கடிதம் தொடர்பாக ஜே.வி.பி.யின் உத்தர அபி என்ற அமைப்பு வெளிவிவகார அமைச்சருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.
சுனில் ஹெந்து நெத்தி இந்தக் கடிதத்தில் மஹிந்தானந்த அளுத்கமவின் கூற்றை வன்மையாகக் கண்டித்திருக்கிறார். இக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,
இலங்கையை சேர்ந்த 446 பேர் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர் அவர்களில் நான்கு பேரின் உடல்நிலை குறித்து சந்தேகம் எழுந்ததால் அவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர் என குவைத்திற்கான இலங்கை தூதுவர் தெரிவித்துள்ளதையும் ஒரே ஒருவருக்கே நோய் தொற்று காணப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குவைத்திலிருந்து தங்களை வெளியேற்றுமாறு இரண்டு மாதங்களிற்கு முன்னரே அங்குள்ள இலங்கையர்கள் வேண்டுகோள் விடுத்தனர் என தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தற்போதைய நிலைமை அரசாங்கத்தின் அலட்சியம் காரணமாகவே ஏற்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய நெருக்கடிக்கு உதவியற்ற அப்பாவி இலங்கையர்கள் மீது குற்றம்சாட்ட முடியாது என தெரிவித்துள்ள அவர், அதேபோன்று அவர்களை வெளியேற்றுவதற்கான உதவிகள் அனைத்தையும் வழங்கிய குவைத் மீது குற்றம்சாட்ட முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
குவைத் அரசின் கடிதம் ஒன்று இன்று -29- இலங்கை அரசுக்கு அனுப்பி வைக்கப்படலாமென்றும் ராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன.
Thanks - Navamani News.