சவூதி அரேபியா வெள்ளிக்கிழமை தொழுகை மற்றும் ஐந்து வேளை தினசரி தொழுகைகளுக்கு புனித மக்கா நகர பள்ளிவாசலைத் தவிர ஏனைய பள்ளிவாசல்களை திறக்க அனுமதி அளித்துள்ளது. இதனடிப்படையில் சவுதி அரேபியாவில் சுமார் 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிவாசல்கள் பல கட்டுப்பாடுகளுடன் மீண்டும் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதன்படி தொழுகைக்கு 15 நிமிடங்களுக்கு முன்னதாக மசூதிகள் திறக்கப்பட வேண்டும். தொழுகை முடிந்த 10 நிமிடங்களுக்குப் பிறகு மசூதிகள் மூடப்பட வேண்டும்.
வெள்ளிக்கிழமை தொழுகைக்கு 20 நிமிடங்களுக்கு முன்னதாக மசூதிகள் திறக்கப்பட வேண்டும். தொழுகை முடிந்த 20 நிமிடங்களுக்குப் பிறகு மசூதிகள் மூடப்பட வேண்டும். வெள்ளிக்கிழமை தொழுகை மற்றும் உபதேசம் (sermon and prayers) மொத்தமாக 15 நிமிடங்கள் மட்டுமே இருக்க வேண்டும்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புனித குர்ஆனின் புத்தக பதிவிடுகள் மற்றும் பிரதிகள் மசூதிகளில் கிடைக்காது. மேலும் வழிபாட்டாளர்கள் தங்களுக்கு இடையே 2 மீட்டர் தூரத்தையும், இரண்டு வரிசைகளுக்கு இடையில் ஒரு வரிசையின் இட அளவிற்கு இடைவெளி விட வேண்டும். அனைத்து நீர் குளிரூட்டிகள்(water coolers) மற்றும் குளிர்சாதன பெட்டிகள்(refrigerators) மூடப்பட வேண்டும்.
மசூதிகளுக்குள் கழிப்பறைகள் மற்றும் ஒழு செய்யும் இடங்கள் மூடப்பட வேண்டும்.
மசூதிகளில் புனித குர்ஆனை மனப்பாடம் செய்வதற்கான பாடங்கள், சொற்பொழிவுகள் மற்றும் வகுப்புகளின் இடைநீக்கத்தை தொடர்ந்து பின்பற்ற வேண்டும். கல்வி மற்றும் விரிவுரைகள் தொலைதூரத்தில் தொடர வேண்டும்.
முககவசம் அணிவது, தொழுகை தரைவிரிப்புகளை கொண்டு வருவது, மற்றும் மசூதியில் இருந்து வெளியேறும்போது அல்லது நுழையும் போது மற்றவர்களிடமிருந்து பாதுகாப்பான இடைவெளியை கடைபிடிப்பது போன்ற அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் வழிபாட்டாளர்கள் பின்பற்ற வேண்டும்.
சவூதி அதிகாரிகள் கடந்த திங்களன்று மூன்று கட்டங்களாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீக்கப்படும் என்றும், ஜூன் 21 முதல் புனித நகரமான மக்காவைத் தவிர்த்து ஊரடங்கு உத்தரவு முடிவடைகிறது என்று கூறியதும் குறிப்பிடத்தக்கது.
கூடுதல் விபரம் https://saudigazette.com.sa