கல் விளையாடும் போதும் வெல்ல விளையாட வேண்டும் " என்றதொரு முதுமொழியுண்டு. நாம் என்ன செய்தாலும் எமது காரியத்தில் கண்ணாக இருக்க வேண்டும். பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ கொரோனா சம்பந்தமான ஒரு கலந்துரையாடலுக்கு அனைத்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களையும் அழைத்துள்ளார்கள். இவ் அழைப்பை மு.கா, அ.இ.ம.கா ஆகிய முஸ்லிம் கட்சிகள் இரண்டும் புறக்கணிக்கும் என்றே நம்பப்படுகிறது. அமைச்சர் ஹக்கீம் ஊருக்கு முதலே தனது கட்சி கலந்து கொள்ளாதென அறிவித்துள்ளார். முஸ்லிம் கட்சிகளின் இந்த தீர்மானம் இன்றைய நிலையில் சமூகத்துக்கு பொருத்தமானதாக ஒரு தீர்மானமாக இருக்காது.
இவ்வரசு முஸ்லிம்களுக்கு எதிரான போக்கை கடைப்பிடிப்பது மறுக்க முடியாதது. இதனை எவ்வாறு குறைக்கலாம் என்ற கோணத்திலேயே எமது முஸ்லிம் கட்சிகளின் நகர்வுகள் அமையப்பெறுதல் வேண்டும். இவ்வாறான அழைப்பை புறக்கணிக்கும் போது இவ்வரசின் முஸ்லிம்களுக்கெதிரான போக்கு இன்னும் கடுமையாக வாய்ப்புள்ளது. முஸ்லிம் சமூகத்திற்கும் இவ்வரசுக்கும் இடையிலான முரண்பாடு இன்னுமின்னும் அதிகரிக்கும். இதனால் பாதிக்கப்படப் போவது முஸ்லிம் சமூகமே! இந்த சந்தர்ப்பத்தை முஸ்லிம் கட்சிகள் இவ்வரசுக்கும் முஸ்லிம் கட்சிகளுக்குமிடையிலான உறவை வளர்க்கும் சந்தர்ப்பமாக பயன்படுத்தலாமல்லவா? இதுவல்லவா எமக்கு தேவை? இதில் கலந்துகொள்வதால் என்ன நஸ்டம் எம் சமூகத்துக்கு வந்துவிடப் போகிறது? எங்களது கட்சி பங்குகொள்ளாதென முந்திக்கொண்டு அறிக்கை விடும் போது, இந்த சந்தர்ப்பத்திலும் புதினம் காட்டுகிறார்களேயென சிங்கள மக்களின் கோபமும் எம் மீது திரும்ப வாய்ப்புள்ளது.
குறித்த நிகழ்வில் த.தே.கூ கலந்துகொள்ளும் என அதன் பங்காளிக் கட்சியொன்று கூறியுள்ளது. அக் கட்சி உத்தியோகபூர்வமாக அறிவித்ததாக தெரியவில்லை. அவர்களுக்கு குறித்த கலந்துரையாடலுக்கு செல்ல முடியுமென்றால், ஏன் எமது கட்சிகளுக்கு செல்ல முடியாது. சஜித் கூட்டணியில் எமது கட்சிகளும் பங்காளிகளாக இருப்பதில் தவறில்லை. அடிமையாக இருக்க கூடாது. அண்மையில் நாம் எதிர் நோக்கிய எந்த பிரச்சினைக்கும் சஜித் வாய் கூட திறக்க இல்லை. அவர் பிரச்சினையை அதிகரிக்காமல் இருந்து எமக்கு ஆதரவு வழங்கியதும் இவ்விடத்தில் குறிப்பிடத்தக்கது. எமது பிரச்சினையை எம்மவர்களே முன்னின்று தீர்க்க முயன்றார்கள். எமது பிரச்சினை நாம் தீர்த்துக்கொள்ள வேண்டுமாக இருந்தால் சஜித் கூட்டணிக்கு அப்பால் வேறு சில நகர்வுகளும் எமக்கு அவசியம். அவ்வாறான ஒன்றாகவே இவ் அழைப்பையும் நோக்க வேண்டும்.
துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,
சம்மாந்துறை.