Ads Area

ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தில் பள்ளிவாசல்களை சில கட்டுப்பாடுகளோடு திறக்க ஏற்பாடு.

கொரோனாவின் பாதிப்பையொட்டி ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் கடந்த சில மாதங்களாக வழிபாட்டுத்தலங்கள் மூடப்பட்டும், அங்கு பொதுமக்கள் செல்வதற்கு தடையும் விதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் அனைவரும் தங்களின் வீடுகளிலேயே இறைவணக்கங்கள் மேற்கொள்ளுமாறு அமீரக அரசாங்கம் அறிவித்தது. இந்நிலையில், தற்பொழுது துபாயில் இருக்கும் வழிபாட்டு தலங்கள் மீண்டும் திறக்கப்பட தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இஸ்லாமிய விவகாரங்கள் மற்றும் தொண்டு நடவடிக்கைகள் துறை வழிபாட்டு தலங்களை பொதுமக்களுக்கு திறப்பதற்கான தேதி பற்றி இன்னும் அறிவிக்கவில்லை. எனினும், மசூதிகளில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய விரிவான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அடங்கிய அறிக்கை ஒன்றை தற்பொழுது இத்துறை வெளியிட்டுள்ளது.

மசூதிகள் திறக்கப்பட்டாலும் கூட, பெண்கள் பிரார்த்தனை அரங்குகள் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டிருக்கும் என்றும் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் குழந்தைகள் (12 வயதுக்குக் குறைவானவர்கள்) தங்கள் சொந்த பாதுகாப்பிற்காக தொழுகைக்காக மசூதிகளுக்கு வர அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அந்த வழிமுறைகளில் கூறப்பட்டுள்ளது.

மசூதிகளில் வழிபாட்டாளர்கள் பின்பற்றப்பட வேண்டிய விதிமுறைகள்:

01. வழிபாட்டாளர்கள் ஒவ்வொரு இரண்டு வரிசைகளுக்கும் இடையில் ஒரு வெற்று வரிசை இடைவெளியை விட வேண்டும்.

02. ஒவ்வொரு இரண்டு நபர்களுக்கும் இடையில் 1.5 மீ இடைவெளியை விட வேண்டும்.

03. அனைத்து வழிபாட்டாளர்களும் கையுறைகள் மற்றும் முககவசங்களை அணிவது கட்டாயமாகும்.

04. அனைத்து வழிபாட்டாளர்களும் தங்கள் சொந்த முசல்லாவை (தொழுவதற்கான விரிப்பு) மசூதிக்கு கொண்டு வர வேண்டும்.

05. ஒருவர் மற்றொருவருடன் கைகுலுக்க அனுமதிக்கப்படவில்லை.
மசூதிகளுக்கு வரும் வழிபாட்டாளர்கள் இறை வணக்கத்திற்கான நேரங்களுக்கு முன்னரோ அல்லது இறைவணக்கங்கள் முடிந்த பின்னரோ ஒன்றாக கூட கூடாது.

06. தொழுகை நடத்தும் இமாமுக்குப் பின்னால் தொழுகை முடிந்ததும் இரண்டாவது ஜமாத் (சபை) தொழுகை இல்லை மற்றும் ஜமாத் தொழுகை முடிந்ததும் தனியாக தொழுவது கூடாது.

07. மசூதிகளில் தொழுகை முடிந்தவுடன் அனைவரும் மசூதிகளை விட்டு வெளியேற வேண்டும்.

08. கொரோனா வைரஸ் நோயாளிகளுடன் தொடர்பு கொண்டவர்கள் மற்ற வழிபாட்டாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த மசூதிக்குள் நுழையக்கூடாது.

09. நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்கள் தங்கள் சொந்த பாதுகாப்பை முன்னிட்டு தொழுவதற்காக மசூதிகளுக்குள் வரக்கூடாது.

வயது கட்டுப்பாடுகள்.

வயதானவர்கள் (60 வயதுக்கு மேற்பட்டவர்கள்) மற்றும் குழந்தைகள் (12 வயதிற்குட்பட்டவர்கள்) தங்கள் சொந்த பாதுகாப்பை முன்னிட்டு, தொழுகைக்காக மசூதிகளுக்கு வரக்கூடாது.

மசூதியில் தொழுவதற்கான விதிமுறைகள்:

01. மசூதிகளில் தொழுவதற்கான பாங்கு சொல்லப்பட்ட நேரத்திலிருந்து தொழுகை முடியும் நேரம் வரை மட்டுமே மசூதிகள் திறந்திருக்கும் (இது சுமார் 20 நிமிடங்கள் ஆகும்) 

02. மசூதிகளில் நடைபெறும் தொழுகையானது பாங்கு சொல்லப்பட்ட உடனே உடனடியாக நடத்தப்படும்.

03.ஒவ்வொரு தொழுகைக்கு பிறகும் மசூதிகள் விரைவில் மூடப்படும்

04. மசூதியின் நுழைவாயிலில் முக கவசங்கள் மற்றும் கையுறைகளை விட்டுச் செல்ல அனுமதி இல்லை.

05. உணவு அல்லது வேறு எதுவாக இருந்தாலும், அனைத்து வகையான விநியோகங்களும் மசூதிகளில் கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளன.

06. மசூதியின் கதவுகள் பாங்கு சொல்ல ஆரம்பிக்கும் நேரம் முதல் தொழுகை முடியும் நேரம் வரை மட்டுமே திறந்து வைக்கப்பட வேண்டும்.

07. மறு அறிவிப்பு வெளியிடும் வரை பெண்கள் பிரார்த்தனை அரங்குகள் மூடப்பட்டிருக்கும் 

08. மேலும் மறு அறிவிப்பு வரும் வரை கழிவறை மற்றும் தொழுவதற்கு முன் செய்யக்கூடிய உடல் சுத்தம் செய்யும் அறை (Ablution area) பகுதிகள் மூடப்பட்டிருக்கும்.

கொரோனாவின் பாதிப்பையொட்டி, ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த மார்ச் மாதம் 16 அன்று அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் இறை வணக்கங்களை நிறுத்துவதாகவும் அனைத்து வழிபாட்டுத்தலங்களையும் மூடுவதாகவும் முதலில் அறிவிக்கப்பட்டது. ஐக்கிய அரபு அமீரகம் ஆயிரக்கணக்கான மசூதிகள், 40 க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் ஒரு இந்து கோவில் ஆகியவற்றை கொண்டுள்ளன. தேசிய நெருக்கடி மற்றும் அவசரநிலை மேலாண்மை ஆணையம் மற்றும் இஸ்லாமிய விவகாரங்கள் மற்றும் பொது ஆணையம் (GAIA) கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தவும், பொது சுகாதாரத்தைப் பாதுகாக்கவும் மசூதிகள், தேவாலயங்கள் மற்றும் கோயில்களில் நடத்தப்படும் இறை வணக்க வழிபாடுகளை மார்ச் 16 இரவு 9 மணி முதல் நான்கு வாரங்களுக்கு நிறுத்தி வைக்கப்படும் என்றும் அறிவிப்பை வெளியிட்டது.

பின்னர், ஏப்ரல் 9 ம் தேதி, ஐக்கிய அரபு அமீரகம் மசூதிகள் மற்றும் பிற வழிபாட்டுத் தலங்களை மூடுவதை மறு அறிவிப்பு வெளியிடும் வரை நீட்டிப்பதாக அறிவித்தது. மேலும், இந்த ஆண்டு, குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் ரமலான் மாதத்திற்கான சிறப்பு தொழுகையான தாராவீஹ் மற்றும் ஈத் அல் பித்ர் தொழுகைகளை ஸ்டேஹோம் (stayhome) என்பதன்படி, வீட்டிலேயே தொழுதுகொள்ளுமாறு அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

செய்திக்கு நன்றி - khaleejtamil

Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe