தேர்தல் வெற்றிக்காக கொரோனா தொற்றுநோயை பாவிக்கும் இந்த அரசு வைத்திய கலாநிதி சி. சிவமோகன் குற்றச்சாட்டு
ஒரு தேர்தலை முடித்து தங்களது அதிகார ஆசையை நிலை நிறுத்துவதற்காக இந்த அரசு ஜனநாயகத்தை கொலை செய்து கொண்டிருக்கிறதா என்ற கேள்வி இயல்பாகவே மக்களிடம் எழுகிறது. 18-3-2020ம் திகதி வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது. அதற்கு முன்னரே பாடசாலைகள் மூடப்படுவதாக அறிவித்தல் விடப்பட்டிருந்தது. இந்தத் தேர்தல் நடத்தக் கூடிய சூழல் இல்லை என்பது தெரிந்தும் அவசர அவசரமாக அந்த வேட்புமனுத்தாக்கலினை செய்து முடித்து விட வேண்டும் என்பதில் அரசு உறுதியாக இருந்தது.
மீண்டும் தேர்தலுக்கான திகதி குறிக்கப்பட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் ஏப்ரல் 20 இல் பல மாவட்டங்களில் இருந்த ஊரடங்கு சட்டத்தினை தளர்தினார்கள்.
சுகாதார அதிகாரிகள் இந்த ஊரடங்கு சட்டத்தினை நிறுத்த வேண்டாம் என கூறினார்கள். அது தொடரவேண்டிய கட்டாயம் இருக்கின்றது. முக்கியமாக வட மாகாணம் அதை சொன்னது ஆனால் அதைக் கேட்கவில்லை அவர்கள் தேர்தல் திகதி குறிக்கவேண்டும் என்பதற்காக ஊரடங்கினை தளர்த்தி விட்டு நாடு நல்லது போல் காட்டிக்கொண்டு தேர்தல் திகதியினை குறித்தார்கள். அதன் பின்பும் நோய்த்தொற்றின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே இருந்தது.
மேலும் ஒட்டுமொத்தத்தில்அதிகார வேட்கை காரணமாக இந்த அரசு அனைத்து மக்களையும் இன்னலுக்கு உள்ளாக்கி வருகின்றதா என்ற கேள்வியும் இன்றும் இருக்கின்றது ஜனநாயக விழுமியங்களை தழுவியதாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதைத் தவிர சர்வாதிகார ரீதியில் அரசியல் யாப்பு முறைகளை மீறி நடக்கக்கூடாது என்பதுதான் உண்மை.
கொரோனாவை வைத்து மிரட்டி மக்களை அதற்கு அடங்கிப் போகுமாறு கோருவது ஜனநாயக மரபாக அமையாது. ஒரு ஜனநாயக மரபை ஏற்றுக்கொண்ட மக்களின் மீதான கட்டுப்பாடுகள் தான் உண்மையான கட்டுப்பாடுகளாக அமையும்.