Ads Area

ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தில் இந்தியர்கள் யாராவது மரணித்தால் உடனே இந்திய துணைத் தூதரகத்திற்கு அறிவிக்க வேண்டும்.

துபாயில் உள்ள இந்திய துணைத் தூதரகம் இன்று டிவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், “அமீரகத்தில் இந்தியர் யாராவது இறந்தால் உடனடியாக இந்திய துணைத் தூதரகத்திற்கு தகவல் தெரிவிப்பதன் மூலம் இறந்தவர்களின் உடலைப் பெறுவதில் ஏற்படும் காலதாமதத்தைக் குறைக்கலாம்” என அறிவிக்கப்பட்டுள்ளது.



துணைத் தூதரகம் இன்று ஊடகங்களுக்கு அளித்துள்ள செய்தியில், கொரோனா சூழ்நிலை காரணமாக முதலாளிகள், ஸ்பான்சர்கள் மற்றும் குடும்பங்கள் தங்களுக்கு வேண்டியவர்களுடைய இறந்த உடலைப் பிண அறைகளிலிருந்து பெறுவதில் கால தாமதம் ஏற்படுவதைப் பார்க்க முடிகிறது. துணைத் தூதரகத்திற்கு அளிக்கப்பட்டுள்ள அமீரக அரசு அறிவுரைகளின்படி, பிண அறைகளில் இருக்கும் உடல்கள் உடனடியாக சம்பத்தப்பட்டவர்களால் உரிமைகோரப்பட்டு சடலங்கள் நல்லடக்கம்/தகனம் அல்லது தாயகத்திற்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும். அவ்வாறு, உடனடியாக உரிமை கோரப்படாத சடலங்களை அமீரகத்தில் அரசே நல்லடக்கம் செய்ய அமீரக சட்டத்தில் இடமுண்டு” எனக் குறிப்பிட்டுள்ளது.

இறப்பு குறித்த செய்தியானது, இறந்தவருடைய முதலாளிகள், ஸ்பான்சர்கள் நெருங்கிய உறவினர்கள் அல்லது குடும்பங்களுக்கு உடனடியாக தெரிவிக்கப்படும். முதலாளிகள் மற்றும் ஸ்பான்சர்கள் இது தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய கடமைகளை நிறைவேற்ற தேவையில்லாமல் காலம் தாழ்த்துகிறார்கள். இறப்பு குறித்த தகவலைக்கூட துணைத் தூதரகத்திற்கு அவர்கள் தெரிவிப்பதில்லை. இந்த கொரோனா காலத்தில் பிணவறைகள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு இதனால் பணிச்சுமை அதிகரித்துள்ளதாக” துணைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

“முதலாளிகள் மற்றும் ஸ்பான்சர்கள் தங்களுக்குக் கீழ் பணிபுரியும் இந்தியர் இறந்தால் +971-507347676 என்ற அவசர உதவி எண்ணிற்கு அழைத்து தகவலளிக்க வேண்டும். மேலும் இறந்தவருடைய குடும்ப உறுப்பினர்களின் ஒப்புதலுடன் இறுதிச்சடங்கை அமீரகத்திலோ அல்லது இந்தியாவிலோ நிறைவேற்ற தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளவேண்டும். இறப்பு குறித்த தகவலை deathregistration.dubai@mea.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தங்களது குடும்ப உறுப்பினரோ, நெருங்கிய நண்பரோ இறந்தால் சம்பந்தப்பட்ட குடும்பங்கள் மற்றும் நண்பர்கள் உடனடியாக துணைத் தூதரகத்திற்கு தகவல் அளிப்பதுடன், இறுதிச் சடங்கு குறித்த சம்பிரதாயங்களை மேற்கொள்ள அங்கீகாரமும் அளிக்கவேண்டும். கொரோனா காரணமாக எதிர்பாராதவிதமாக யாராவது இறந்தால் அமீரகத்திலேயே நல்லடக்கம் செய்யவேண்டும் என அமீரக அரசு அறிவித்திருக்கிறது. இத்தகைய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்வதே இறந்தவருடைய ஆன்மாவிற்கு நாம் செலுத்தும் இறுதி வணக்கமாகும்” என துணைத் தூதரகம் அளித்துள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

செய்திக்கு நன்றி - மாதவன்


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe