சவுதி அரேபியாவில் இம்முறை அந் நாட்டுக் குடிமக்கள் மற்றும் சவுதியில் வாழும் வெளிநாட்டினர் ஆகியோருக்கு மாத்திரமே ஹஜ் கடமையை நிறைவேற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது என சவுதி அரேபிய ஹஜ் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது. சுகாதார நடைமுறைகளைப் பேணி மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கை யாத்திரிகர்களுடனே இம்முறை ஹஜ் கடமை நிறைவேற்றப்படும்.
பொதுவாக துல்ஹஜ் மாதத்தில் நடைபெறும் ஹஜ் யாத்திரையில் சவூதி வாழ் மக்களுக்கு அனுமதி இல்லாத நிலையில், இந்த ஆண்டு கூட்டங்களைத் தவிர்ப்பதற்காகவும், கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காகவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சவூதியைச் சேர்ந்தவர்கள் மற்றும் இங்கு வசிக்கும் வெளிநாட்டவர்கள் மட்டும் ஹஜ் சடங்குகளைச் செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு ஜூலை மாதம் பிற்பகுதியில் திட்டமிடப்பட்டுள்ள இந்த யாத்திரை உலகின் மிகப்பெரிய மதக் கூடுகைகளில் ஒன்றாகும். வருடந்தோறும் சுமார் 2.5 மில்லியனுக்கும் அதிகமான யாத்ரீகர்கள் மக்கா மற்றும் மதீனாவில் உள்ள இஸ்லாத்தின் புனிதத் தலங்களை தரிசிப்பதற்காக ஒரு வாரப் பயணமாக ஹஜ்ஜிற்கு வருகை தருகின்றனர். ஒரு முறையாவது ஹஜ் பயணம் மேற்கொள்வது ஒவ்வொரு இஸ்லாமியருக்கும் வாழ்நாள் கடமையாகும்.
சவூதி அரேபியா கடந்த மார்ச் மாதத்தில் இஸ்லாமியர்களிடம் தங்கள் ஹஜ் பயணத் திட்டத்தை ஒத்தி வைக்குமாறு கேட்டுக் கொண்டது. மேலும் உம்ராவிற்கும் மறு அறிவிப்பு வரும் வரையில் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலதிக விபரம் - https://saudigazette.com.sa