Ads Area

சவுதி அரேபியாவில் இடம் பெற்ற வீதி விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலி.

சவூதியின் ஹெய்ல் நகரில் நடந்த விபத்து ஒன்றில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த  6 பேர் உட்பட மொத்தம் 8 பேர் உயிரிழந்துள்ளதாக Okaz Arabic தினசரி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஹய்லுக்கு வடக்கே 200 கி.மீ தொலைவில் உள்ள தாராபா – லினா சாலையில் கடந்த செவ்வாய்க்கிழமை இந்த விபத்து நேர்ந்துள்ளது. விபத்தைச் சந்தித்த இரண்டு வாகனங்களில், ஒன்றில் கணவன், மனைவி, நான்கு குழந்தைகள் மற்றும் வீட்டு வேலையாள் ஒருவருடன் சேர்த்து 7 பேர் பயணித்துள்ளனர். 

விபத்தின் காரணமாக இரு வாகனங்களிலும் நெருப்பு பற்றியதில் அனைவரும் உயிரிழந்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாதுகாப்புக் குழுவினர் இறந்தவர்களின் உடல்களை ஹெய்ல் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு பாதுகாப்பு காரணங்களுக்காக இது போன்ற விபத்துகளில் உயிரிழப்பவர்களுக்கு வழக்கமாகச் செய்யப்படும் DNA சோதனைகள் நடத்தப்பட்டன.

தன் மனைவிக்கு லினாவில் இருக்கும் பள்ளி ஒன்றில் வேலை கிடைத்ததைத் தொடர்ந்து அங்கு ஒரு புதிய வீட்டை வாடகைக்கு எடுத்து, பழைய வீட்டில் இருந்த வீட்டு உபயோகப் பொருட்களை எல்லாம் புதிய வீட்டிற்கு மாற்றுவதற்காக, உயிரிழந்த குடும்பத்தினர் விபத்து நிகழ்ந்ததற்கு முதல் நாள் ஹெய்லில் இருந்து லினா சென்றுள்ளனர். செவ்வாய்க்கிழமை காலை அவர்கள் திரும்பி வரும் வழியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்துக்குள்ளான வாகனத்தின் பின்னால்தான் பொருட்களைச் சுமந்து சென்ற லாரியை, இவர்களின் குடும்ப ஓட்டுநர் இயக்கி வந்துள்ளார். அவர் முயற்சி செய்தும் குடும்பத்தினரைக் காப்பாற்ற முடியவில்லை எனவும், பின்னர் அவர் உறவினர்களுக்கு விபத்து குறித்து தகவல் தெரிவித்ததாகவும் தெரிகிறது.

இரண்டு நாட்களுக்கு முன்னர் இதே சாலையில் நிகழ்ந்த மற்றொரு விபத்தில் ஆசியாவைச் சேர்ந்தவர்கள் உட்பட 9 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

செய்தி - https://gulfnews.com
தமிழில் - சவுதி தமிழ் வெப்

Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe